மதுரையில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் நேற்று நடைபெற்றது, அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணியை மதுரையில் மாநாடு நடத்தி தொடங்குவது வழக்கம் அதே போன்று ஒரு கூட்டமாக பாஜக சார்பில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய பாஜக மாநில தலைவரான அண்ணாமலை குறிப்பிட்ட கருத்துக்கள் பெரும் பேசுப்பொருளாக மாறி இருக்கிறது அண்ணாமலை பேசியதாவது 'கவர்னர் தமிழுக்கும், தமிழகத்திற்கும் எதிரானவர்' என, தி.மு.க., தொடர்ந்து பிரசாரம் செய்கிறது. தமிழை மையமாக வைத்து பிரசாரம் செய்து, 2019ல் எம்.பி., பதவிகளை பெற்றனர். அதே 'பார்முலா'வை சட்டசபை தேர்தலிலும் பின்பற்றி ஆட்சியை பிடித்தனர்.
தற்போது, 2024 லோக்சபா தேர்தலை கணக்கிட்டு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கட்சி பா.ஜ.க என்பது போன்ற மாயையை தி.மு.க., உருவாக்கி வருகிறது;
அதை நாம் தடுக்க வேண்டும். மக்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து தான், நான் ஊடகங்களில் பேசி வருகிறேன். 2019, 2021 தேர்தலில் 3.50 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தோம்.
அதற்கான காரணத்தை ஆராய்ந்து செயல்பட வேண்டும். பா.ஜ.க வின் சாதனை மற்றும் 'ஹிந்துத்துவா' பற்றி பேசுவதை காட்டிலும் அதனை செயலில் காட்ட வேண்டும்; அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை நாம் சந்தித்து பேச வேண்டும். பிரமாண்டமாக கூட்டம் போட்டோம் என சொல்வதை விட, கலந்துரையாடல்களை பல்வேறு துறையினருடன் தொடர்ந்து நடத்துங்கள். லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் நிகழ்ச்சிகள் வேண்டாம். தேர்தலுக்காக இப்போதே திட்டமிடுங்கள்; அட்டவணை போட்டு செயல்படுங்கள்.
கட்சியில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களை அரவணைத்துச் செல்லுங்கள்; புதியவர்களை ஊக்கப்படுத்துங்கள். பட்டியல் இனத்தவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அவர்களை உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு பரிமாறுங்கள். கிராமங்களில் தங்கி களப்பணி ஆற்றுங்கள்.
மக்களுக்கான கட்சி பா.ஜ.க என்பதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லுங்கள் என அண்ணாமலை பேசினார். மதுரையில் பாஜக நிர்வாகிகள் மாநாடு தமிழக அரசியலில் பாஜகவிற்கு திருப்பு முனையை உண்டாக்குமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
திமுக 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தமிழர்களுக்கு எதிரான கட்சி என முன்னிலை படுத்தினால் அது திமுகவிற்கு இந்த தேர்தலிலும் வெற்றியை கொடுக்கும் என எதன் அடிப்படையில் திமுக கணக்கு போடுகிறது என்பது குறித்த முழு பக்க தகவலையும் பாஜக திரட்டி இருக்கிறதாம் வருகின்ற சித்திரை மாதம் தொடக்கத்தில் இருந்து அதற்கு பதிலடி கொடுக்கவும் தமிழக பாஜக தயாராகி வருகிறதாம்.