புதுதில்லி : இந்திய எல்லைகளை ஒட்டியமைந்துள்ள மன்ஷெரா,கோட்லி மற்றும் முசாபராபாத் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள 11 பயிற்சி முகாம்களில் இருந்து 500 முதல் 700 பேர்வரை பயிற்சிபெற்றவர்கள் இருப்பதாக பெயர்குறிப்பிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஜம்முகாஷ்மீர் எல்லைக்கோட்டுக்கு அருகில் உள்ள பயிற்சித்தளங்களில் 150 தீவிரவாதிகள் வரை இருப்பதாகவும் மேலும் 700 பேர் வரை பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் அங்குள்ள பயங்கரவாத முகாம்களில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் LOC வழியாக ஊடுருவமுயன்ற தீவிரவாதிகளின் முயற்சியை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்திய புலனாய்வு அமைப்புகளின் தகவலின்படி 150க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ஜம்முகாஷ்மீரில் ஊடுருவ தயாராக இருப்பதாகவும் அந்த ராணுவ அதிகாரி அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.
இந்த 2022ம் ஆண்டில் தற்போது வரை எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிவழியாக நுழையமுயன்ற அனைத்து ஊடுருவல்களும் பாதுகாப்பு படையினரால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த மே 20ல் பந்திபோரா மற்றும் சோபார் வழியாக நுழைய முயன்ற பயங்கரவாதிகள் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவுபடுத்தினார்.
ஊடுருவல்களை முழுமையாக தடுக்க பலமான அமைப்பை கொண்டுள்ளோம் என கூறமுடியா விட்டாலும் சமீபத்தில் எல்லைவேலிகள் மற்றும் கண்காணிப்புக்கருவிகள் அதிகம் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டதால் ஊடுருவல் சதவிகிதம் மிக குறைந்துள்ளது. தற்போது பயங்கரவாதிகள் பிர்பஞ்சல் தெற்குப்பகுதியில் கவனத்தை செலுத்திவருகின்றனர்.சிலர் நேபாளம் வழியாகவும் நுழைய முயல்கின்றனர். கடந்த நாற்பது நாட்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை ஒழித்துள்ளோம்" என அந்த அதிகாரி தனியார் செய்திநிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.