24 special

இந்து மதத்தை இழிவுபடுத்தினால் சிறை; கம்யூனிசத்தை பரப்பினால் கம்மி எண்ணனும் - நிறைவேறியது புதிய சட்டம்!


இந்தோனேஷியாவில் இந்து உள்ளிட்ட 6 மாதங்களை அவமதித்தாலோ மதமாற்றத்தில் ஈடுபட்டாலோ 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 


உலகின் மிகப் பெரிய முஸ்லீம் பெரும்பான்மை தேசத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதன் பூர்வீக கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை காப்பதற்காக பல ஆண்டுகளாக குறைவான தண்டனை கொண்ட சில சட்டங்களை மாற்றி அமைத்துள்ளனர். இந்தோனேஷியா உலகிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட 4வது நாடாகவும், மூன்றாவது ஜனநாயக நாடாகவும் உள்ளது. இந்நாடு ஆகஸ்ட் 17, 1945 சுதந்திரம் பெற்றுள்ளது. அன்று முதல் டச்சுக்களை பின்பற்றி வகுக்கபட்டிருந்த சில சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டு, தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய மாற்றியமைக்கப்பட்ட சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. காலனி ஆதிக்கத்தின் தாக்கம் காரணமாக 76 ஆண்டுகளாக டச்சு சட்டங்கள் பின்பற்று வந்த நிலையில், தற்போது இந்தோனேஷியாவிற்கு என சில தனி சட்டங்கள் மற்றும் கடுமையான தண்டனைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தோனேஷிய அரசு கருக்கலைப்பை சட்டவிரோதமாக அறிவித்துள்ளது. ஆனால் உயிருக்கு ஆபத்தான மருத்துவ காரணங்கள், பாலியல் வன்கொடுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது 12 வாரத்திற்கும் குறைவான கருவை கலைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து இந்தோனேசியாவின் ஆறு அங்கீகரிக்கப்பட்ட மதங்களின் மையக் கோட்பாடுகளான இஸ்லாம், புராட்டஸ்டன்டிசம், கத்தோலிக்க மதம், இந்து மதம், புத்த மதம் மற்றும் கன்பூசியனிசம் ஆகியவை குறித்து அவதூறு பரப்புவது, மதம் மாற்றுவது போன்ற செயல்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டமசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் மார்க்சிஸ்ட்-லெனினிச சித்தாந்தத்தைப் பின்பற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டால் 10 ஆண்டு சிறைத்தண்டனையும், கம்யூனிசத்தைப் பரப்பினால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. 

திருமணத்திற்கு பிறகு வேறு ஒரு ஆண் அல்லது பெண் உடன் தொடர்பு வைத்துக்கொண்டால் ஓராண்டு சிறை தண்டனையும், சேர்ந்து வாழ்ந்தால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கள்ளத்தொடர்பு குறித்து கணவன், மனைவி அல்லது அவர்களது பிள்ளைகள் புகார் அளிக்கும் பட்சத்தில் மட்டுமே தண்டனை வழங்கப்படும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி, மாநில நிறுவனங்கள் மற்றும் தேசிய சித்தாந்தத்தை அவமதித்தாலோ, அவதூறு பரப்பினாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற புதிய சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

- அன்னக்கிளி