பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்கு மிக பெரிய அச்சறுத்தல் உண்டாகி இருப்பதாகவும் இந்த ஆண்டு சுதந்திரதின உரையை குண்டு துளைக்காத மேடையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற பிரதமர் மோடியிடம் உளவு அமைப்புகள் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்கு பின், டெல்லி செங்கோட்டையில் பிரதமர்கள் உரையாற்றும் போது, குண்டு துளைக்காத மேடை அமைக்கும் வழக்கம் துவங்கியது. அவருக்கு பிறகு வந்த அனைத்து பிரதமர்களுமே, குண்டு துளைக்காத மேடையில் தான் சுதந்திர தின உரையாற்றினர்.
கடந்த 2014ல் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் நடந்த சுதந்திர தின விழாவில், இந்த மரபை உடைத்தார். செங்கோட்டை கொத்தளத்தில், 'புல்லட் புரூப்' தடுப்புகள் இன்றி, தலைப்பாகை அணிந்து உரையாற்றினார். கடந்த ஆண்டு வரையில், இதே நடைமுறையைத் தான் பிரதமர் மோடி பின்பற்றி வந்தார்.
ஆனால், இந்த முறை சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. செங்கோட்டையில், 10 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு, அந்த இடமே முற்றிலுமாக பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.பிரதமர் உரையாற்றும் கொத்தளத்தில், குண்டு துளைக்காத மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படியானால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல்கள் உருவாகியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பிரதமர் மோடி இந்த சுதந்திர தின விழாவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்றும் அது மத மாற்ற தடுப்பு சட்டம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் எனவும் எதிர்ப்பார்க்க படுவதால் பிரதமர் மோடியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.