கர்நாடக மாநிலத்தில் மே மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 அல்லது 6 பேர் தவிர அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் சீட்டு வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டமன்றத்தின் பதவி காலம் வரும் மே 24 அன்று முடியவுள்ள நிலையில், அங்குள்ள 224 சட்டமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் விதமாக விஜய் சங்கல் யாத்திரை என்ற பெயரில் கர்நாடக முழுவதும் பாரதிய ஜனதா கட்சி நடைபயணம் மேற்க்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டசபை தேர்தல் குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த அரசியல்வாதியுமான பி.எஸ். எடியூரப்பா கூறியதாவது; கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ”பாரதிய ஜனதா கட்சியில் புதியதாக இணைய விரும்புவர்களை நாங்கள் வரவேற்கிறோம், அதேசமயம் பாஜக கட்சியிலிருந்து விலக நினைப்பவர்கள் மகிழ்ச்சியுடன் வெளியே செல்லலாம்” என்றார்.
மேலும், பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பாஜக-வில் சேர தாயாராக உள்ளனர். அதனால், கட்சியின் செயல்பாடு உங்களுக்கு பிடிக்கவில்லை என்று கருதினால் கட்சியில் இருந்து நீங்கள் தாராளமாக வெளியேறலாம்.
பாஜக கட்சியில் புதியதாக சேரும் இளைஞர்களை நாங்கள் எப்பொழுதும் வரவேற்போம் என்றார். இதைதொடர்ந்து, பேசிய எடியூரப்பா வருவிருக்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 அல்லது 6 பேர் தவிர அனைத்து பாஜக எம்எல்ஏக்களுக்கும் சீட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், இந்த 4 அல்லது 6 எம்எல்ஏக்கள் யார் என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.
விஜய் சங்கல் யாத்திரை குறித்து பேசிய எடியூரப்பா; பாஜக தலைமையில் நடைபயணம் மேற்கொள்ளும் போது கர்நாடக மாநிலத்தில் நான் செல்லும் இடமெல்லாம் மக்களிடமிருந்து மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கிறது. நாங்கள் எதிர்பார்த்தையும் மீறி அதிக அளவிலான மக்கள் திரண்டு வருகின்றனர். இதையெல்லாம் பார்க்குபோது, மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளில் நாங்கள் 140 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம், அதை யாராலும் தடுக்க முடியாது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.