வளர்ச்சியை கண்டு வரும் பல துறைகளில் தற்போது பல சுவையான மற்றும் புதிய புதிய பரிமாணங்களை கண்டு வருகிறது உணவுத்துறை! அதாவது உணவுத்துறை என்றால் அரசாங்கம் நடத்தி அரசாங்கம் கவனித்து வரும் அந்த துறை அல்ல நமது அன்றாட வாழ்க்கையில் நாம் வீட்டில் சமைக்கும் உணவுகளையும் வெளியில் உண்டு மகிழும் உணவுகளையும் பற்றியது. ஏனென்றால் முன்பு இட்லி, தோசை,.வடை, பூரி, பொங்கல், பிரியாணி, சிக்கன் 65, மீன் வருவல், மீன் குழம்பு என பாரம்பரிய உணவுகளுடன் ஒத்துள்ள சில உணவு வகைகளை பார்த்திருப்போம் ஆனால் தற்போதெல்லாம் இரவு நேரங்களில் எங்கு பார்த்தாலும் தள்ளுவண்டி கடைகளும் பாஸ்புக் கடைகளும் தான் அதிகமாக உள்ளது. அங்கு துரித உணவுகளை அதிக அளவில் விற்பனையாகிறது அதற்கு மௌசும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தவிர இறைச்சி பிரியமும் அதைத் தேடி மக்கள் செல்வதும் அதிகரித்துக் கொண்டு வருவதையும் சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மூலம் பார்க்க முடிகிறது.
அப்படிப்பட்ட துரித உணவுகளில் அதிகமாக ஒரு பொருள் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது மயோனஸ்! இதனை சிக்கன் 65, சிக்கன் கிரில், பீட்சா, பர்கர் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவார்கள்.ஆனால் தற்போது இந்த மயோனஸ் பலருக்கு உணவாகவும் மாறிவிட்டது ஏனென்றால் பிரியாணிக்கு கூட மயோனஸ்சை வைத்து சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்! அதேபோன்று சிக்கன் பிரைடு ரைஸ், எக் ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ் என மின்னல் வேகத்தில் ரெடியகின்ற உணவுகளுக்கும் மயோனைசை வைத்து சாப்பிடுகிறார்கள். இந்த மயோனஸ் எப்படி தயாரிக்கப்படுகிறது இதை சாப்பிட்டால் என்ன நடக்கும் நல்லதா கெட்டதா என பலரும் தெரியாமலேயே அதனை அதிகப்படியாக உட்கொள்கிறார்கள். அதாவது முட்டையின் வெள்ளை கரு, எலுமிச்சைச்சாறு, உப்பு மற்றும் எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்தி இந்த மயோனஸ்ஸை செய்கிறார்கள்.
இவை போக மயோனஸ் விரைவில் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக சில மூலப் பொருட்களையும் உணவக நிர்வாகிகள் மயோனஸ்சில் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இது உடலுக்கு நல்லதா என்று பார்த்தால் முற்றிலும் கெடுதியாகும்! ஏனென்றால் மயோனஸ் உணவு பொருளில் அதிகப்படியான பாக்டீரியாக்களை எளிதில் இனப்பெருக்கம் செய்யும் தன்மை உள்ளதாகவும் அதனை சரியாக தயாரித்து முறையாக குளிர்சாதன பெட்டியில் வைத்து பராமரிக்கவில்லை என்றால் கெட்டுப்போன கிருமிகள் பல லட்சம் கிருமிகளை உருவாக்கும் தன்மையை இந்த மயோனஸ் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே இது கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல மூலப் பொருட்களை இதில் கலக்கிறார்கள் அதனால் நம் உடலுக்கு பல பிரச்சனைகளையும் பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமின்றி ஒரு ஸ்பூன் மயோனசை உட்கொண்டால் அதில் 94 கலோரி இருப்பதாகவும், அதனால் நம் உடல் எடை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்றும் கூறுகிறார்கள். மேலும் மயோனசை அதிகமாக சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இதயம் சார்ந்த பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். அதோடு கல்லீரல் பிரச்சனை, தலைவலி குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் இந்த மயோனஸ் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. ஆகவே மயோனஸ் மீது காதல் கொண்டவர்கள் தற்போது மயோனஸ்ஸை உங்கள் உணவு பழக்கத்திலிருந்து குறைத்துக் கொள்ள ஆரம்பித்தால் மட்டுமே உங்கள் உடலை உங்களால் பாதுகாக்க முடியும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!