Tamilnadu

மிகுந்த எச்சரிகையாக இருங்கள் முக்கிய "விவகாரத்தை" சுட்டிக்காட்டி கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

krishnasamy
krishnasamy

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் ஹிஜாப் விவகாரம் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆடையை ஆயுதமாக மாற்ற நினைக்கிறார்கள் என முழு விளக்கத்தையும் அளித்துள்ளார் அது பின்வருமாறு :-


கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் கங்புரா பகுதியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் (PUC - Pre University Course) சீருடை அணிந்து வர மறுத்து, தங்களுடைய மத அடையாளத்தை மட்டுமே முன் நிறுத்துவோம் என்று சில மாணவிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் இப்பொழுது அந்த பிரச்சனை விவாதப் பொருளாக மாறியுள்ளது. எந்த கல்வி நிறுவனமும் அரசியல் படுத்தப்படக்கூடாது என நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறோம். பத்து வருடங்களுக்கு முன்பு, சென்னை சட்டக் கல்லூரியில் இரு தரப்பு மாணவர்களுக்கிடையே அரசியல் ரீதியாக பிரச்சனை எழுந்து மிகப்பெரிய மோதல் மூண்ட பொழுதும் நாம் இதே கருத்தை தான் வலியுறுத்தி இருந்தோம். துரைமுருகன் உட்பட சில அரசியல்வாதிகள் கல்வி கூடங்களில் அரசியல் இருக்க வேண்டும் என்பதைப் போல கருத்து தெரிவித்து இருந்தனர். அன்றே அதற்கு நாம் மறுப்பு தெரிவித்திருந்தோம். இளைஞர்கள், மாணவர்கள் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்பது வேறு. அதை அடிப்படையாக வைத்து மாணவர் சமுதாயமே பிளவுபடுவது என்பது வேறு.

1950-களிலும், 1960-களிலும் மாணவர்கள் மத்தியில் அரசியல் ரீதியான உணர்வுகள் தோன்றின. 1970-க்கு பிறகு ஜாதியாகவும், அண்மைக்காலமாக மதமாகவும் உருவெடுத்துள்ளன. மேலை நாடுகளில் உள்ள சமூக-பொருளாதார சூழல்கள் என்பது வேறு. அங்கு ஒரு இனத்தவராக அல்லது நாட்டினராக தங்களை அடையாளப் படுத்துவதை காட்டிலும் மனிதர்களாக அடையாளப்படுத்துவதையே அவர்கள் பெருமையாகக் கருதக்கூடியவர்கள். ஆனால், இந்தியா அப்படி அல்ல. பூகோள ரீதியாக ஒன்றாக இருந்தாலும் கூட, பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடக்கக் கூடியவர்கள். எனவே, அவர்கள் அனைவரையும் ஒற்றுமைப் படுத்துவதற்கான முயற்சிகளை தான் ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர, மீண்டும் மீண்டும் பிளவை அதிகரிப்பதற்கான முயற்சிகள் ஆபத்துக்களை விளைவிக்கும்.

ஆம், இப்பொழுது கூட தங்களுடைய கல்வி உரிமையைக் காட்டிலும் மத ரீதியான அடையாளத்தைத் திணிப்பதே முக்கியம் எனக் கருதி ஆடையை ஆயுதமாக்க முயற்சி செய்கிறார்கள். நாம் ஏற்கனவே 06.02.2022 அன்றைய முகநூல் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள படி, தாங்கள் சார்ந்த சமூக நிகழ்வுகளில் அவரவர் விரும்பிய ஆடைகளை அணிவதற்கு யாருக்கும் தடையில்லை. ஆனால் கல்வி கூடங்கள், பணி இடங்களில் சீருடைகள் என்பது ஒரு கட்டாய நடைமுறை; அது அந்நிறுவனங்களுடைய ஒழுங்குமுறை நடவடிக்கை.  

தமிழகத்தில் தனியார் மற்றும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பெரும்பாலான கல்லூரிகளிலும் சீருடை நடைமுறையில் உள்ளது. சீருடை அணிந்து வராத மாணவ-மாணவிகள் அன்றைய வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படாத நிலையும், அதற்காக அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. மாணவர்கள் விரும்பிய உடைகளை பள்ளியின் நுழைவு வாயில் வரை அணிந்து வர எந்த பள்ளி நிர்வாகமும் தடை விதிப்பதில்லை. ஆனால், பள்ளி நுழைவு வாயிலில் நுழைவது முதல் வகுப்பறை, ஆய்வகம், விளையாட்டு மைதானம் மற்றும் அனைத்து வித பள்ளி செயல்பாடுகளிலும் சீருடை என்பது மிக மிகக் கட்டாயம்.

கர்நாடக தனியார் பள்ளி நிர்வாகம் திடீரென்று ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஒரு பழக்கத்தைத் தடுத்து விட்டதை போன்று இப்பொழுது செய்திகள் பரப்பப்படுகின்றன. இதை ஒரு தேசிய, சர்வதேச பிரச்சனையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று பல மாதங்கள், பல வருடங்கள் திட்டமிடப்பட்ட சதிச் செயல் என்பதை குறிப்பாக தமிழக அறிவுஜீவிகளும், ஊடகங்களும்; அகில இந்திய அரசியல்வாதிகளும் எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.

ரகுபதி பட் என்ற சட்டமன்ற உறுப்பினரால் கடந்த 25 வருடமாக நடத்தப்படக் கூடிய பள்ளி அது. கடந்த நவம்பர் மாதத்திலிருந்து ஒரு அமைப்பு இந்த பிரச்சனையை கையிலெடுத்து, நிர்வாகத்திற்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால் மத ரீதியான ஆடை குறித்து பள்ளி நிர்வாகத்தோடு பலமுறை பேசப்பட்டும்,  மறுக்கப்பட்ட நிலையில் நிர்வாகம் சீருடைகள் விதி என்னவோ அதன்படி நடந்திட அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே நன்கு ஆயத்தப்படுத்தப்பட்ட சில மாணவிகள் அந்த குறிப்பிட்ட தினத்தன்று அவர்கள் வலியுறுத்தும் அந்த முக கவசத்தோடு பள்ளிக்குள் வர எத்தனித்து இருக்கிறார்கள். அதை பின்னால் இருந்து இயக்கியவர்கள் மத பிரச்சனையாக்கி இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரக்கூடிய சம்பவத்தின் தொடர்ச்சி  என்பதை கூட முழுமையாக உணராமல், அக்குறிப்பிட்ட மதப் பெண்களின் கல்வி உரிமை பறிக்கப்படுகிறது; அவர்களுடைய ஆடை உரிமை மறுக்கப்படுகிறது என்பதை போல பலரும் எழுதுகிறார்கள். இது மிகுந்த வருத்தத்தை அளிக்கக்கூடிய விஷயம்.

மத ரீதியாக ஒதுக்கி எந்த பெண்ணும் கல்வி கற்கக் கூடாது என்று இந்திய மக்கள் எவரும் நினைக்க மாட்டார்கள். ஆனால், கல்வி கற்பதை காட்டிலும் இந்திய இறையாண்மையின் மீதும், இந்தியப் பண்பாட்டின் மீதும் தாக்குதல் தொடுப்பதற்குண்டான துவக்கமாக இவ்விவகாரத்தை பூதாகரப்படுத்தி அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும் இந்த தேசத்தைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறார்கள் என்பதுதான் மிக முக்கியமான விஷயம். பள்ளி சீருடை விஷயத்தை முடிவு செய்வதற்கு நீதிமன்றங்கள் கூட ஏன் இவ்வளவு காலதாமதம் செய்கிறது? தயங்குகிறது? என்று தெரியவில்லை.

நாம் பள்ளியில், மருத்துவக் கல்லூரியில் பயின்ற காலத்தில் எல்லா மதத்தினரும் தான் படித்தார்கள். ஆனால், யாரும் உடை ரீதியாக தங்களை தனிமைப்படுத்தி அடையாளப்படுத்தவில்லை. சில பள்ளிகளில் பாவாடை இருக்கும்; தாவணி இருக்கும்; சில பள்ளிகளில் நவீன உடை வடிவங்கள் இருக்கும். ஆனால் எது இருந்தாலும் அது அனைத்து மாணவர்களுக்குமானதாக இருக்கும்; யாருக்கும் விதிவிலக்கு இருக்காது.

மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் எல்லோரும் வெள்ளை கோட்டு அணிந்து வர வேண்டும் என்பது விதி. அதை மறுக்கக்கூடியவர்கள் வகுப்புகளுக்குச் செல்ல இயலாது. கண்களை மறைக்கும் விதத்தில் ஒரு ஆடையைப் போட்டுக்கொண்டு மைக்ராஸ்கோப்பில் எப்படி செல்களை பார்க்க முடியும்? ஒரு நோயாளியின் உடலை எப்படி பார்க்க முடியும்? அறுவை சிகிச்சை எப்படி செய்ய முடியும்? ஊசி தான் எப்படி போட முடியும்? பிரசவம் தான் எப்படி பார்த்திட முடியும்?

வழக்கறிஞர்கள் எல்லா நீதிமன்றங்களிலும் கருப்பு அங்கி அணிந்து தான் நீதிபதியின் முன் நின்று வாதாட வேண்டும் என்பது விதி. அதை மறுக்கக் கூடியவர்களை நீதிமன்றம் அனுமதிக்குமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். அதே போல பொறியியல், வேளாண்மை, தொழில்நுட்பங்கள், கம்ப்யூட்டர்கள் படிக்கக்கூடிய மாணவர்களுக்கும் சீருடைகள் உண்டு. இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் லட்சக்கணக்கான காவலர்களும், அதிகாரிகளும் உண்டு. அவர்கள் சீருடை இல்லாமல் பணிக்கு வர முடியாது. ஆண், பெண் காவலர்கள் ஒரே சீருடையில் தான் பணிக்கு வர வேண்டும்; வருகிறார்கள். இராணுவத்திலும் அதே போல தான்.  சீருடைகள் இல்லாத அரசு மற்றும் தனியார் தொழில், கல்வி, வணிக நிறுவனங்களை பார்ப்பது அரிது; ஆகாயத்தில் பறக்கும் விமானப்பணிப் பெண்களும், விமானிகளும் சீருடையில் தான் இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் அவர்களுக்கான சீருடையில் தானே பணி புரிகிறார்கள். இதையெல்லாம் கணக்கிலே கொள்ளாமல் அந்நிய நாட்டின் உதவியோடு, அவர்களின் தூண்டுதலுக்கு இரையாகி இந்த தேசத்தில் செயல்படும் சில தீவிரவாத - மதவாத அமைப்புகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து இந்திய அரசியல் சாசனத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டு மத சுதந்திரம் - ஆடை சுதந்திரம் என்ற பெயரில் ஏதாவது அபத்தம் நடக்குமேயானால் அதை இந்திய தேச பிரிவினைக்கான இன்னொரு முயற்சியாகவே கருத வேண்டும்.

சீருடை என்பது வெறும் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும் அல்ல. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடுகள் மாணவ பருவத்திலேயே எந்த விதத்திலும் உடையில் காட்டக்கூடிய சூழல்களால் உருவாகக் கூடாது. வசதி படைத்த மாணவன் விலை உயர்ந்த ஆடையையும், வசதியற்ற ஏழை எளிய மாணவன் குறைந்த விலை ஆடையையும் அணிந்து வருகின்ற பொழுது அவர்களிடத்திலே அடிப்படையிலேயே ஒரு ஏற்றத்தாழ்வான எண்ணங்கள் உருவாகி அவைகளே நிரந்தரமாக அவர்களது உள்ளங்களில் பதிந்து விடும் என்பதை போக்க வேண்டும் என்பதற்காகவே சீருடை கொண்டுவரப்பட்டது. அதைத் தாண்டியும் இந்தியாவில் இது இப்பொழுது மிக மிக அவசியம். ஜாதி, இன, மத, மொழி வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒரு தாய் மக்கள், இந்திய-பாரத தேசத்தினுடைய மக்கள் என்ற உணர்வை ஊட்டுவதற்கும், அதிகரிப்பதற்கும் இந்தச் சீருடைகள் மிக மிக அவசியம்.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசீர் புட்டோ; பங்களாதேஷ் பிரதமர் சேக் ஹசினா, முன்னாள் பிரதமர் கலிடியா ஜியா; இந்திய மக்களவை சபாநாயகராக இருந்த நஜ்மா எப்துல்லா; இந்தியாவின் முன்னணி நடிகைகளான நர்ஹீஸ், அலியாபட், சபியாகான் போன்ற பிரசித்தி பெற்றவர்கள் எல்லாம் அணிவதில்லையே? வாழ்க்கையின் முதல் படியில் இருக்கும் மாணவிகளிடம் வலியுறுத்துபவர்கள் இவர்களிடத்தில் வலியுறுத்தியதுண்டா?

இந்த நாடு எக்கேடு கெட்டுப் போனால் என்ன? தாங்கள் அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த பிரச்சனையையும் கொளுத்திப் போடுவதற்கு சில அரசியல் கட்சிகள் தயாராக இருக்கின்றன. ஆயிரமாயிரம் ஆண்டு காலம் வரலாற்று சிறப்பு மிக்க இந்திய - பாரத தேசத்தினுடைய பண்பாட்டையும், அதனுடைய பூர்வீக அடையாளத்தையும் முற்றாக அழித்து வேறு மத அடையாளங்களுக்குள் கொண்டு சென்று விட வேண்டும் என்று துடிக்கக் கூடிய சில தேச விரோத சக்திகளுக்கு அரசியல்வாதிகளும் இரையாகிறார்களே என்பதுதான் மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு.

‘இந்த நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காமல் இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசி’ என்று ஜான்.எஃப்.கென்னடி சொன்ன வாசகத்தை பள்ளி பருவத்திலேயே நாம் படித்திருக்கிறோம். அதையெல்லாம் இன்றைய தலைமுறையினர் எண்ணிப் பார்க்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆட்சியில் இருக்கக்கூடியவர்களோடு அரசியல் ரீதியான முரண்பாடு என்பது வேறு. அதை அரசியல் தளத்தில் எதிர்கொள்வதற்கு யாரும் மறுப்பு சொல்ல மாட்டார்கள். ஆனால் அரசியல் ரீதியாக சந்திக்க வேண்டியதை விடுத்துவிட்டு தேசத்திற்கு எதிராகச் செயல்படலாமா? என்பதுதான் கேள்வி. இந்திய தேசம் தன்னுடைய பாரம்பரிய-பூர்வீக அடையாளத்தை இழந்த பிறகு, அதில் வாழக்கூடிய நாம் எப்படி சுயமரியாதையோடு இருந்துவிட முடியும்? ஒரு நாட்டின் முகவரி மாற்றப்பட்டு விட்டால் அதில் வாழக்கூடியவர்களின் முகவரியும் மாற்றப்பட்ட வரலாறுகள் உண்டா? இல்லையா?

இந்திய விடுதலைப் போரை முறையாக கையாளாததன் விளைவாக நமது தேசம் மத பிரிவினைக்கு ஆளானது. இந்தியாவின் பாரம்பரிய தன்மை உயிரோடு இருக்கின்ற வரையிலும் தான் தமிழ் தேசியம் பேச முடியும்; திராவிடம் பேச முடியும்; சுயமரியாதை பேசமுடியும்; மாநில சுயாட்சி பேச முடியும்; பெரியாரிசம் பேச முடியும்; அண்ணாயிசம் பேச முடியும்; கலைஞரிசம் பேச முடியும்,  இந்து – இந்தியா - பாரதம் என்ற அடையாளம் அழிக்கப்பட்டு விட்டால், பெரியார் மண் - அண்ணா மண் என்றெல்லாம் பெருமை பேச முடியாது. அண்ணா, பெரியார், ஜெயலலிதா, கருணாநிதி சிலைகள், நினைவிடங்களின் கதி என்னவாகும் என்பதை ஆப்கானிஸ்தானில்  தலிபான்கள் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த போது, பாமியான் மலைப் பகுதியில் இருந்த பாரம்பரியமிக்க 2000 வருட புத்தர் சிலை பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டதையும், 2021-ல் மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, எஞ்சியிருந்த புத்தர் அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும் மீண்டும் நினைவு கூற விரும்புகிறேன்.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தற்போது அங்கு பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை; தொலைக்காட்சிகளில் செய்தி வாசிக்க முடியவில்லை; தனியாக வீதிகளில் ஆண் துணையின்றி நடந்து செல்ல முடியவில்லை; பெண்கள் படிக்கக் கூட அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தானில் மலாலாவுக்கு என்ன கதி நடந்தது? பள்ளிக்குச் செல்லக்கூடாது என்பதற்காக தானே அவர் தலையில் சுடப்பட்டார். எல்லாவற்றையும் மறந்து விட்டு அல்லது இவற்றையெல்லாம் நினைவில் கொள்ளாமல், கர்நாடக பள்ளி விவகாரத்தில் இந்திய அரசியல்வாதிகள் மனம் போன போக்கில் மத உரிமை - உடை உரிமை பற்றிப் பேசுகிறார்கள். அப்படி என்றால் இவர்களெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லாதவர்களா? அவற்றின் நடைமுறைகளை அறியாதவர்களா?

கர்நாடக பள்ளி விவகாரத்தில் என்ன நடந்தது என்று கூட தெரிந்து கொள்ளாமல், மத விவகாரங்களுக்கான அமெரிக்க தூதர் பொரிந்து தள்ளியிருக்கிறார். அந்த யோக்கியவான்கள் தான் இருபது வருடங்கள் பல லட்சம் கோடி செலவழித்தும் கூட தலிபான் தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அவர்களிடமே ஆப்கானிஸ்தான் மக்களை ’அம்போ’ என்று விட்டுவிட்டு புறமுதுகிட்டு ஓடி வந்தவர்கள். இப்பொழுது இந்த ஆடை விஷயத்தைக் கூட பூதாகரமாக்குகிறார்கள்.

கடந்த அக்டோபர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பங்களா தேசத்தில் துர்கா பூஜையில் குரானை வைத்து அதை அவமதித்து விட்டதாக பொய்யான செய்தியை சமூக வலைதளங்களில் பரப்பி ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்; அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. ஆனால், அது அமெரிக்காவினுடைய சர்வதேச மத தூதருக்கு ஏனோ தெரியாமல் போய்விட்டது. அண்டை நாடான இலங்கையில் எத்தனையோ இந்து கோவில்கள் இடிக்கப்பட்டன. பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் எஞ்சியிருந்த ஒரு சில இந்து, சீக்கிய கோவில்களும் தரைமட்டமாக்கப்பட்டன. ஆனால் அவைகள் எல்லாம் யாருடைய கண்களுக்கும் புலப்படுவதில்லை.

ஆனால், ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது, இந்து – இந்தியா - பாரதம் என்ற அடையாளத்தை முற்றாக அழித்து விட வேண்டும் என்ற மிகப் பெரிய சதி ஒன்று இருப்பது மட்டும் தெளிவாகிறது. இந்தியா - இந்து - பாரதம் என்ற முகவரியை அழிப்பதற்காக அவர்கள் 2050 ஆம் ஆண்டை இலக்காக வைத்துச் செயல்படுகிறார்கள் என்ற செய்திகள் கூட வருகின்றன. அவ்வாறு செயல்படக்கூடிய அமைப்புகள் நேரடியாக ஒரு முகவரியோடு செயல்பட்டால் கூட அவர்களுக்கு நாம் பதில் சொல்ல முடியும்; இனம் காண முடியும். ஆனால் பொது மற்றும் முற்போக்கு பெயர்களை வைத்துக்கொண்டு பிற்போக்கு, சமூக விரோத, பிரிவினைவாத, இந்திய தேசத்திற்கு எதிரான சிந்தனைகளை மட்டுமே விதைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். அவர்களுடைய ஒவ்வொரு செயலும் இந்தியாவில் வாழுகின்ற இந்துக்கள் – இஸ்லாமியர்கள் – கிறித்தவர்கள் – புத்திஸ்டுகள் - ஜைனர்கள் ஆகியோருக்கிடையே ஒரு சமூக பிணக்கை ஏற்படுத்துவது மட்டுமல்ல, மாறாக இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து இந்துக்களும் ஒரு குறிப்பிட்ட மத பிரிவினருக்கு எதிராக இருப்பதைப் போன்று ஒரு பிரமையைக் கட்டியமைப்பதுதான் அவர்களின் மிக முக்கியமான நோக்கம். அதை சில வாக்கு வங்கி அரசியல் கட்சிகளும் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறார்கள்; தூபமிடுகிறார்கள்.

கர்நாடக பள்ளி விஷயத்தில் அந்தப் பள்ளி நிர்வாகம் எவ்விதமான குறுகிய நோக்கத்தோடும் செயல்பட்டதாகத் தெரியவில்லை. மாணவர்களுக்கான சீருடையை தான் அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்களே தவிர, யாருடைய கல்வி - ஆடை உரிமையையும் மறுக்க முயற்சி செய்யவில்லை; ஆனால், இந்த ஆடை விவகாரத்தை ஆயுதமாக்கி இந்தியாவை இரண்டாகத் துண்டாட நினைக்கிறார்கள். அவர்களுக்கு ஆடையல்ல பிரச்சனை, கல்வியல்ல பிரச்சனை, இந்து – இந்திய - பாரத தேசத்தின் பூர்வீக அடையாளத்தை அழிப்பதற்கான ஆயுதமாகவே இதைக் கருத வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் பத்து நிமிடமாவது மனசாட்சியோடு இந்த பிரச்சினையை எண்ணிப் பாருங்கள் என்பதே எமது வேண்டுகோள். நம்மைக் காட்டிலும், நமது குடும்பத்தைக் காட்டிலும் இந்த தேசம் பெரிது என்ற உணர்வில் இந்த பிரச்சினையை அணுகுங்கள். இந்தியாவின் உண்மை அடையாளத்தை முற்றாக அழித்திட ஆடையில் துவங்குகிறார்கள்; ஆடையையே ஆயுதமாக்குகிறார்கள்; எச்சரிக்கையாக இருப்போம் என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.

More Watch Videos