இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஆலயங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள ஆலோசனை குழுவில் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ள பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.சுகிசிவம் பெருமதிப்பிற்குரிய அம்மா திருமதி தேசமங்கையர்க்கரசி அவர்களுக்கு திறந்த மடல் என கடிதம் எழுதியுள்ளார் பிரபல வழக்கறிஞர் குற்றாலநாதன் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
நலம் நலமறிய ஆவல். தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அருள்மிகு நெல்லையப்பர் அன்னை காந்திமதி அம்பாள் உங்களுக்கு உற்ற துணையாக இருந்து வழி நடத்திட பிரார்த்தனைகள் கொரனோ என்கின்ற நோய்த்தொற்றை காரணம் காட்டி வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் வெள்ளி சனி ஞாயிறு அன்று பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது, அதிலும் தைப்பூசம் நடைபெறுவதால் இந்த வாரம் வெள்ளி சனி ஞாயிறு திங்கள் செவ்வாய் என ஐந்து நாட்கள் திருக்கோவில்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.
மக்களின் குடியை கெடுக்கும் டாஸ்மாக் சாராயக் கடைகளும் பல மணி நேரம் அடைத்து வைக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறைக்குள் நடைபெறும் திரையரங்குகளும் திறந்திருக்கும் நிலையில், தனித் தனி நபர்களாக வந்து சென்று வணங்கி சென்றுகொண்டே இருக்கும் இந்து ஆலயங்களை அடைத்து வைத்திருப்பது நியாயமா என்ற கேள்வியை அறநிலையத்துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் நீங்கள் எழுப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இந்து மத வழிபாடு என்பது கூட்டுப் பிரார்த்தனை வழிபாட்டு முறை அல்ல தனி நபர்கள் தனித்தனியாக வந்து வணங்கும் வழிபாடு. பல ஏக்கர் பரந்து விரிந்த மிகப் பெரிய ஆலயங்களில் கொரானோ விதிமுறைகள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு முகக்கவசம் அணிந்து வழிபாடு செய்வது கூட ஏன் தடுக்கப்பட்டுள்ளது என்கின்ற இந்து மக்களின் நியாயமான கேள்வியை நீங்கள் அறநிலையத் துறையிடம் எழுப்புவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தைப்பூசத் திருநாளில் குறைந்தபட்சம் அந்தந்த பகுதியில் உள்ள மக்களாவது ஆலயங்களில் வழிபாடு செய்வதற்கு உரிய ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்ய வேண்டும் என நீங்கள் கோரிக்கை விடுப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது ,கொராணா விதிமுறைகளை காரணம் காட்டி வெள்ளி சனி ஞாயிறு அல்லாத பிற நாட்களிலும் கூட கோயிலின் உற்சவங்கள் விழாக்கள் தற்போது தடுக்கப்பட்டுள்ளது .
உதாரணமாக வருகிற 20.1.2022 வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம் நடைபெறாது என நெல்லையப்பர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுபோல் தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பல்வேறு விழாக்கள் உற்சவங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
மார்கழி திருவாதிரை மஹோற்சவத்தின் போது சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கூட நீதிமன்ற உத்தரவிற்கு பின்பு தான் நடத்தப்பட்டது. அதுபோல எல்லா கோயில்களிலும் எல்லா நேரங்களிலும் எல்லோராலும் நீதிமன்றத்திற்கு செல்வதற்கு வசதிகளும் வாய்ப்புகளும் சூழ்நிலைகளும் இருக்காது. எல்லா கோயில்களிலும் திருவிழாக்கள் நீதிமன்ற உத்தரவு பெற்ற பின்புதான் நடைபெற வேண்டுமென்றால் அது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது போல ஆகிவிடும். உற்சவங்கள், விழாக்கள் எல்லாம் நின்று போனால் திருக்கோவில் நிலை என்ன ஆகும் ஆலயங்களின் சாங்கித்யம் என்னவாகும் என்பதை ஆன்மீக அன்பர்களுக்கு உபன்யாசம் செய்யும் அறிவு செல்வர்களான நீங்கள் நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன்
ஆகவே கொராணா விதிமுறைகளுக்கு உட்பட்டு வழக்கமான திருவிழாக்கள் உற்சவங்கள் எவ்வித தங்கு தடையுமின்றி நடைபெற அறநிலையத்துறைக்கு நீங்கள் ஆலோசனை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுபோல இப்போது உடனடியாக அறநிலையத்துறை திருக்கோவில்களில் செயல்படுத்தப்பட வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் குறித்த ஆலோசனைகள் தங்களின் மேலான சிந்தனைக்கு இன்னும் பல்வேறு கோணங்களில் கூடுதலாகவே எழுந்திருக்கும் என்கின்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு.
ஆனால் இவற்றையெல்லாம் கடவுள் மறுப்பு வழிவந்த தி மு க ஸ்டாலின் அரசு உங்களது மேலான ஆலோசனைகளுக்கும் சிந்தனைகளுக்கும் மதிப்பளித்து செயல்படுத்துமா என்பது தான் எனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய ஐயம்.வெறும் ஓட்டுவங்கி அரசியலுக்காக மட்டுமே உங்களைப்போன்ற ஆன்மீகவாதிகளையும் நல்லவர்களையும் சான்றோர்களையும் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்று அமர்த்தி இந்துக்களை ஏமாற்ற பார்க்கிறதா என்கின்ற கருத்தும் எனக்கு உண்டு. மேலே சொல்லப்பட்டுள்ள இந்து மக்களின் கோரிக்கைகளுக்கான தீர்வில் எனது ஐயத்திற்கான விடை கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் வழக்கறிஞர் குற்றாலநாதன்.