Tamilnadu

வாக்கு தவறாதீர்கள் அண்ணாமலை அதிரடி கடிதம் !

annamalai voter meeting
annamalai voter meeting

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அக்கட்சி நாளிதலான ஒரே நாடு பத்திரிக்கையில் தினமும் நடைபெறும் முக்கிய சம்பவங்கள் குறித்து அக்கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வருகிறார் அந்த வகையில் அவர் எழுதிய கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் அக்கட்சி தொண்டர்கள் இடையே வைரல் ஆகி வருகிறது., அது பின்வருமாறு :-


பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே அனைவருக்கும் வணக்கம். வாக்கு தவறாமல் நடந்து கொள்ள வேண்டும் என்பது வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல. வாக்காளப் பெருமக்களுக்கும் தான் ஜனநாயக உரிமையான வாக்கை நாம்  தவற விடக்கூடாது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் கமிஷன் வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கிறது. ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை இணைத்து புதுப்  பட்டியல் தயாராகிறது. இந்த ஆண்டு 18 முதல் 21 வயது நிரம்பியவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். .

ஆன்லைன் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர்பாக பொதுமக்களிடம்  விழிப்புணர்வு இல்லை. இது பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் மிகக் குறைந்த  அளவிலேயே இளம் வயதினர் வாக்காளர்களாகப்  பதிவு செய்துள்ளனர். இப்போது வாக்காளர் அட்டை சேவையைப் பெறுவது மிகவும் எளிதாகியுள்ளது. எல்லாமே கைப்பேசி செயலியில் அடங்கியுள்ளது. சில நிமிடங்கள் ஒதுக்கினால் போதுமானது... அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத 18 முதல் 21 வயதுவரை உள்ள இளைஞர்கள் WWW.elections.tn.gov.in. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதில் படிவம் 6 மூலம் பெயர் சேர்க்கலாம். வயதுக்கான ஆதாரமாக ஆதார் அட்டை, கல்லூரி அடையாள அட்டை, வயதுடன்கூடிய வேறு ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவேண்டும். கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் அவர்களின் பூர்வீக முகவரியில் பெயர் சேர்க்கும் வகையில் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். கல்லூரி விடுதி முகவரியில் பெயர்சேர்க்கக்கூடாது. மேலும் ஸ்மார்ட் போன் மூலம் பிளே ஸ்டோரில் TN Elections பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எந்தவித கட்டணமுமின்றி வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க விண்ணப்பம் செய்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு மாநில தேர்தல் ஆணையமும், ‘வாக்காளர் பட்டியல்களை’, இணையத்தில் பதிப்பித்திருக்கின்றன. உங்களுடைய மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை நீங்கள் தேட முடியும்.

பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பம்

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 01 அன்று ஒருவருக்கு 18 வயது பூர்த்தியடைந்திருந்தால், தன்னுடைய பெயரை சேர்ப்பதற்கு ஒருவர் விண்ணப்பிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் - 6 ஐ பயன்படுத்தவேண்டும். படிவம்- 6 வுடன், 2 வண்ணப் புகைப்படம் அல்லது கருப்பு வெள்ளை புகைப்படம் இணைக்கப்பட வேண்டும்.

பிறப்பு சான்றிதழின் நகல் இணைக்க வேண்டும் (அதாவது மாநகராட்சியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ் அல்லது மெட்ரிகுலேஷன் சான்றிதழ் அல்லது பள்ளி / கல்லூரியால் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழ்)  விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் (அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்குப்  புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

பெயரை நீக்குவதற்கான விண்ணப்பம்

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்கு வாக்காளர் குடிபெயர்தல், மரணம், அல்லது தவறுதலான பதிவு செய்யப்பட்டிருந்தால், ஒருவர் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கமுடியும்.இதற்காக, படிவம்-7 – ஐ பயன்படுத்தவேண்டும்.

பெயர் திருத்தத்திற்கான விண்ணப்பம் :-உங்களுடைய தேர்தல் அடையாள அட்டையில் (எபிக்) அல்லது வாக்காளர் பட்டியலில் ஏதாவது தவறு ஏற்படும்போது (எ.கா - பெயரில், வயதில் அல்லது தகப்பனார் பெயரில் தவறு ஏற்படுதல்) தேவையான திருத்தங்கள் வேண்டி நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.

தவறான பதிவின் திருத்தத்திற்க்கு படிவம்-8 –ஐ பயன்படுத்துங்கள் அடையாளச் சான்றாக பிறப்பு சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பதிவின் இடமாற்றத்திற்கான விண்ணப்பம்

வேறு வாக்காள பகுதிக்கு அல்லது தொகுதிக்குள் உங்களுடைய வீடு இடமாற்றம் செய்யப்பட்டால், அந்த பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்களுடைய பதிவை இடமாற்றம் செய்ய வேண்டும்.

இதற்காக படிவம்-8A வை பயன்படுத்தவேண்டும். விண்ணப்பதாரரின் பெயர் அல்லது அவரது பெற்றோர் பெயர் உள்ள முகவரி சான்றின் நகல் அதாவது வங்கி / அஞ்சல் அலுவலகத்தின் தற்போதைய கணக்கு புத்தகம் அல்லது குடும்ப அட்டை அல்லது பாஸ்போர்ட் அல்லது ஓட்டுனர் உரிமம் / வருமான வரி மதிப்பீட்டின் ஆணை அல்லது சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / எரிவாயு இணைப்பிற்கான ரசீது அல்லது கொடுக்கப்பட்ட முகவரியில் விண்ணப்பதாரரின் பெயரில் அஞ்சல் துறையால் பெற்ற / பட்டுவாடா செய்யப்பட்ட அஞ்சல் நகலை சான்றாக இணைக்க வேண்டும்.

சென்னை தவிர பிற மாவட்டங்களில், இரண்டு நாட்கள் நடந்த வாக்காளர் சிறப்பு முகாமில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி, 4.38 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக, இம்மாதம் 1ம் தேதி புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அதன்படி, 3.09 கோடி ஆண்கள்; 3.19 கோடி பெண்கள்; 7,342 மூன்றாம் பாலினத்தவர் என, மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அன்று முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

பொதுமக்கள் நலன் கருதி, சென்னையைத்  தவிர்த்து அனைத்து மாவட்டங்களிலும், கடந்த 13, 14ம் தேதிகளில், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது .சென்னையில் மட்டும் மழை காரணமாக, சிறப்பு முகாம் நடை பெறவில்லை . இரண்டு நாட்கள் நடைபெற்ற்ற முகாமில்  பெயர் சேர்க்கக்  கோரி, 4.38 லட்சம்; பெயர் நீக்கம் கோரி, 54 ஆயிரத்து 72; திருத்தம் கோரி, 54 ஆயிரத்து 596; முகவரி மாற்றம் கோரி, 43 ஆயிரத்து 488 என, மொத்தம், 5.90 லட்சம் விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம்  பெற்றுள்ளன.

மேலும், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம், வரும், 27, 28ம் தேதிகளில் நடைபெற  உள்ளது. மற்ற நாட்களில், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.மேலும், www.nvsp.in ; https://voterportal.eci.gov.in இணையதளங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

ஆகவே நண்பர்களே 18 வயது நிரம்பிய எந்த வாக்காளரின் வாக்கை தவற விட்டுவிடாதீர்கள். அனைவரையும் வாக்காளராகப்  பதிவு செய்ய அன்புடன் வலியுறுத்துங்கள். முடிந்தால் பதிவு செய்து கொடுங்கள். படிவங்கள் 6,7,8,8A ஆகியவற்றை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து படித்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் வாக்காளர்களுக்கு படிவத்தைப்  பூர்த்தி செய்து கையொப்பம் பெற்று தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்ய உதவுங்கள். மிக முக்கியமான இந்தப்  பணியை இனிதே நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையுடன்...உங்கள் அண்ணா அண்ணாமலை என குறிப்பிட்டுள்ளார்.