பாரத ரத்னா ஏபி வாஜ்பாய் அவர்களின் 97 வது பிறந்தநாள் நல்லாட்சி தினவிழா தமிழக பாஜக சார்பில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பேசிய அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். இந்நிகழ்வில், பாஜக பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர். குறிப்பாக 5 முக்கிய நபர்களை பற்றி குறும்படம் வெளியிட்டு அவர்களின் செயல்பாட்டை பெருமை படுத்தி உள்ளது பாஜக.
இந்நிகழ்வில் அண்ணாமலையை சிறப்புரை ஆற்ற அழைக்கும்போது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினி அண்ணாமலையை வரவேற்கும் விதமாக, "தமிழகத்தில் பல்வேறு நபரின் தூக்கத்தை குறைய வைத்து, பல்வேறு நபர்களை விரட்டி ஓடவிட்டு என அடுக்கடுக்காக வசனங்களை அடுக்கி பேசியதால் கடுப்பான அண்ணாமலை வேகவேகமாக எழுந்து வந்து, அதெல்லாம் பேசாதீங்க... அப்படி போய் நில்லுங்க என கூறிவிட்டு தன்னுடைய சிறப்புரையை தொடங்கினார். அப்போது மேடையில் இருந்தவர்கள் முதல் நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரும் சூப்பர் அண்ணாமலை என்பது போல சிரித்தே மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதன் மூலம் தன்னுடைய பெருந்தன்மையை அந்த மேடையிலேயே நிரூபணம் செய்துள்ளார் அண்ணாமலை. இவரை பொருத்தவரையில் செய்தியாளர்கள் சந்திப்பாக இருந்தாலும் சரி, பொதுமக்களிடம் பழகுவதிலும் சரி, கட்சியினர் மற்றும் தொண்டர்களிடம் பழகுவதிலும் சரி அவருக்கென, ஒரு தனி பாணியை கடைபிடித்து வருகிறார்.
இங்கு நாம் உற்று கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பொதுவாக ஒரு நிகழ்வில் பங்கேற்கும் போது அதுவும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றால், அவரைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ வேண்டும் என முன்கூட்டியே தயார் செய்து சில வசனங்களை எழுதி வைத்துக் கொள்வார்கள். அல்லது நிகழ்வில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் குறித்து அதிகப்படியான விவரங்கள் தெரியாத தருணத்தில் மேடையில் இருக்கக்கூடிய தொகுப்பாளர் தான்தோன்றித்தனமாக இஷ்டத்துக்கு பேசுவதும் ஒருசில நிகழ்வில் வழக்கம்தான்.
அதேபோன்று நிகழ்வில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினரும் தன்னைப்பற்றி புகழும்போது மனம் குளிர்வது இயல்புதான். ஆனால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுபோன்று தன்னைப்பற்றி புகழ்வதை விரும்பாத எதார்த்தமான மனிதராக இருக்கின்றார். அதற்கெல்லாம் காரணம் அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். தன்னுடைய முழுமையான திறனால், பாரதிய ஜனதா கட்சிக்கு மாநில அளவில் தலைமைதாங்கி தேசிய அளவில் விவரங்களை எடுத்துரைக்கிறார். இப்படிப்பட்ட ஒருவருக்கு முன்னோட்டம் தேவையா என விமர்சனமே எழுந்து உள்ளது.
மேலும் சிறப்பு விருந்தினர்களை அழைக்கும்போது அவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், பெயருக்கு முன் திரு அல்லது உயர்திரு சேர்த்துக்கொண்டு பின்னர் பெயர் சொல்லி அவர்கள் எனக் குறிப்பிட்டு அழைக்கலாம். மிகப்பெரிய பதவி என்றால் மாண்புமிகு என்பதையும் பயன்படுத்தலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு "எதிரிகளை ஓட விட்ட விரட்டி விட்ட என படத்தில் பேசுவது போல் பேசுவது ரியல் லைப்ஃக்கு ஒத்துவராது என்பது அண்ணாமலைக்கு நன்றாகவே தெரியும் என சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.