தமிழகத்தின் முதல் தொல்லியல் மற்றும் கல்வெட்டுத் துறை ஆய்வாளர் திரு இரா. நாகசாமி அண்மையில் இயற்கை எய்தினார் இவருக்கு பிரதமர் தொடங்கி தமிழக முதல்வர் வரை பெரும்பாலான அரசியல் தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் நாகசாமிக்கு அரசு மரியாதை கொடுக்க கூடாது என சுபவீ சில கருத்துக்களை சுட்டி காட்டியுள்ளார், ஆனால் அதே கருத்து அவருக்கு எதிராக திரும்பியுள்ளது, இது குறித்து சுபவீ தெரிவித்த கருத்துக்களை முதலில் பார்க்கலாம் : மறைந்த நாகசாமிக்கும் நமக்குமிடையில் இணையவே முடியாத அளவுக்குக் கருத்து வேறுபாடுகள் உண்டு என்றபோதிலும், அவருடைய மரணத்திற்கு நாம் நம் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இறந்து போனவர் எதிரியாய் இருந்தாலும், அடுத்தவர் சாவைக் கொண்டாடும் இழிபண்பு எப்போதும் நமக்கு உரியதில்லை. அதனால்தான் தீபாவளியை நாம் கொண்டாடுவதில்லை. அவ்வாறே, இறந்து போனவரைப் பற்றிய விமர்சனங்களை, அவரின் உறவினர்கள், நண்பர்கள் துயரத்தில் இருக்கும் அந்த நாள்களில் வெளியிடுவது நாகரிகமுமில்லை.
இருப்பினும் ஒரு கருத்தை உடனடியாக வெளியிட்டே தீர வேண்டிய நிலைக்குச் சில சூழல்கள் நம்மைத் தள்ளியுள்ளன.அவருடைய இறப்பிற்குப் பலரும் தங்களின் அனுதாபத்தைத் தெரிவித்துள்ளனர். அது இயல்பானது! அதே வேளை, அவருடைய இறுதி நிகழ்வில், அரசு மரியாதை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. அங்குதான் ஒரு மறுப்பை வெளியிட வேண்டிய தேவை நமக்கு எழுந்துள்ளது.
அரசு மரியாதை வழங்குவதினாலேயே இறந்தவரின் அனைத்துக் கருத்துகளையும் அரசு ஏற்றுக் கொண்டதாக ஆகாது என்பது உண்மைதான். இருப்பினும், நம் மொழிக்கும், இனத்திற்கும் எதிரான கருத்துகளை அவர் வெளியிட்டிருப்பார் என்றால், அது குறித்து அரசு சிந்தித்தே ஆகவேண்டும்!
திரு நாகசாமி, தன் நூல்கள் பலவற்றில் சமஸ்கிருதமே உயர்ந்த மொழி என்றும், தமிழுக்குச் செம்மொழி ஆகும் தகுதியும் கூட முழுமையாக இல்லை என்றும் எழுதியவர். தமிழை ஒரு வட்டார மொழி (dialect) என்னும் நிலையிலேயே அவர் பார்த்தார். தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, சிலப்பதிகாரம் ஆகியன சமாஸ்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றையும் தாண்டி, "மனுதர்மத்தின் சாரமே திருக்குறள்" என்னும் தலைப்பில் அவர் ஆங்கிலத்திலெழுதியுள்ள நூல் தமிழ் உணர்வாளர்களிடையே ஒரு கொந்தளிப்பையே ஏற்படுத்தியது. மூத்த தமிழறிஞர் தமிழண்ணல், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் போன்ற பெருமக்கள் அந்த நூலுக்கு மிகச் சரியான மறுப்பைச் சான்றுகளுடன் எழுதி வெளியிட்டுள்ளனர்.
இவை போன்ற காரணங்களால்தான், குடியரசுத் தலைவர் விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் அவர் நியமிக்கப்பட்டபோது, இன்றைய தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டு அதனைக் கடுமையாகக் கண்டித்தார்.
இந்நிலையில், இப்போது அவருக்கு அரசு மரியாதை வழங்ப்படுமானால், அது மரியாதையாக இல்லாமல், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் செய்யப்படும் அவமரியாதையாக ஆகிவிடும் என்பதை, யார் மீதும் எந்தவிதமான தனிப்பட்ட வெறுப்பும் இல்லாமல், தமிழ் மீது கொண்டுள்ள பற்றினால், தெரிவித்துக் கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது எனக்குறிப்பிட்டுள்ளார் சுபவீ.
இங்குதான் வசமாக சிக்கினார் சுபவீ தமிழ் மொழி இனம் குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்த காரணத்தால் நாகசாமிக்கு அரசு மரியாதை கொடுக்க கூடாது என தெரிவித்த சுபவீயிடம் கணேஷ் ராஜா என்பவர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் அதில், எனக்கு ஒரு சந்தேகம்?
மொழிக்கும் இனத்திற்கும் எதிரான கருத்தை ஒருவர் தெரிவித்திருப்பார் என்றால் அவருக்கு அரசு மரியாதை செலுத்துவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்று சொன்ன சுபவீ அவர்களே ஒரு கேள்வி?
தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என சொன்னவர் ஈவேரா? தமிழ் முட்டா பய பாசை என சொன்னவர் ஈவேரா? தமிழனுக்கு அறிவே இல்லை என தமிழ் இனத்தை அவமானப்படுத்தியவர் ஈவேரா? மொழியையும் இனத்தையும் அவமான படுத்திய ஈவேராவை அரசு இனி மரியாதை செலுத்துமா? செலுத்தாதா?
உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? இனியும் எத்தனை காலம் தான் ஏமாற்ற போகிறீர்கள்?திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என்று சொன்ன ஈவேரா சிலைகளை உடனே அகற்றவேண்டும் என எப்போது. அறிக்கை கொடுக்க போகிறீர்கள் பதில் இருக்கா உங்களிடம்? என நெற்றி பொட்டில் அடித்தது போன்று சுபவீயிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு இதுவரை சுபவீ மட்டுமல்ல எந்த ஒரு பெரியாரிஸ்ட்யும் பதில் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.