தமிழக ஆளுநர்ஆளுநர் ரவி இன்று மாலை திடீரென டெல்லி செல்ல இருப்பதாக ஆளுநர் அலுவலக வட்டாரம் தெரிவிக்கின்றது. சமீபத்தில் தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ஆளுநர் ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முதல்வர் ஸ்டாலின் அடுத்தடுத்த நாட்களில் ஆளுநரை தங்களது கோரிக்கையை முன்வைத்தனர். குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்றும் மெமோரேண்டம் கொடுத்து இருந்தார். அதற்கு அடுத்த நாளே முதல்வரும்-ஆளுநரும் சந்தித்தனர்.
அப்போது நீட் தேர்வு குறித்தும் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்படியான ஒரு தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாகவும் பேசியிருக்கிறார். இது குறித்து அதிமுக வேட்பாளர்கள் பலரும் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் புகார் கொடுக்க சென்ற போது எந்த நீதியும் கிடைக்கவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என ஆளுநரிடம் மனுவாக கொடுத்து உள்ளார்
இதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகள், அவர் அவர்களுக்கு தேவையான பல விஷயங்களை, கோரிக்கையாக ஆளுநரிடம் தெரிவிக்க உள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கள நிலவரத்தை பற்றி தெரிவிக்க டெல்லி புறப்படும் ஆளுநர் ரவி, அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து அனைத்து விஷயங்களை எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பாகவும், உளவுத்துறை கொடுத்த பல முக்கிய தகவல்கள், இந்திய பெருங்கடலில் சீனா, இலங்கையின் அத்துமீறல்கள் கடலோரப் பகுதி பாதுகாப்பு குறித்த விஷயங்களையும், தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் எடுக்கும் முக்கிய நிலைப்பாடு குறித்தும் எடுத்துரைப்பார் என சொல்லப்படுகிறது.
அதே சமயத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இந்திய அளவில் நிலவி வருவதால் நிலக்கரி வாங்கும் ஒப்பந்தம் குறித்த விஷயத்தையும், மிக முக்கியமாக தமிழக பாஜக தலைவர் கொடுத்த புகார்கள் அனைத்தும் டெல்லியில் புள்ளி விவரத்தோடு ஆளுநர் விவரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அரசு மூலம் வாங்கப்பட்ட புதிய பேருந்துகள், கொள்முதல் விவரங்கள், போலீசை தாக்கும் விவகாரம், மின்சார ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு விவரங்களும் முன்வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.