அட போங்கையா என்னமோ பைபாஸ் வருது... பெர்மிஷன் கொடுத்துட்டாங்க.... இந்த வருஷம் வேலை ஆரம்பிக்கபோறாங்களாமே .... வந்தா ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும்.... டவுன் குள்ள ட்ராபிக்கே இருக்காது... இப்படி எல்லாம் எதிர்பார்ப்போடு பல வருஷமா காத்திருந்த குடியாத்தம் மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்... வருகிறது பைபாஸ்..! உறுதி செய்தது மத்திய அரசு.
நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரொம்ப ஆக்டிவா செயலாற்றியவர் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த். தனது தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் மத்திய அரசுக்கு கொடுத்த தொடர் அழுத்தத்தால், வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்க பாதை பணிகள் நிறைவு பெற்று மக்கள்பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியிலும் சுரங்கப்பாதை வேலை நடந்து வரும் தருணத்தில்...
இதை விட செம்ம சூப்பர் செய்தி ஒண்ணு வந்திருக்கு. ஆம் குடியாத்தம் பகுதியில் பைபாஸ் சாலை அமைத்திட 221.03 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது மத்திய அரசு.
அதாவது குடியாத்தம் நகர புறவழிச்சாலை - குடியாத்தம் நகரை மங்களூரு- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், பேர்ணாம்பட் ரோடு நெல்லூர் பேட்டையில் தொடங்கி- காட்பாடி ரோடு சேத்து வாண்டை பகுதி வரை 7.30 கி.மீ தூரம் வரையிலான சாலை ஆகும். இதற்காக நெல்லூர்பேட்டை, பாக்கம், பிச்சனூர், சீவூர், கொண்டசமுத்திரம், கடைசியாக சேத்துவாண்டை இந்த 6 பகுதிகள் வழியாக காட்பாடி ரோட்டில் இணைக்கிறது.
இதன் மூலம் கர்நாடக மற்றும் ஆந்திராவில் இருந்து வந்துச்செல்லக்கூடிய வாகனங்கள் குடியாத்தம் நகருக்குள் வராமலேயே மேம்பாலத்தில் கடந்துச்செல்லும். இதற்காக எடுத்துக்கொள்ளப்படும் மொத்த நில எடுப்பு 29.5536 ஹெக்டேர் ஆகும். ஒரு ஹெக்டேர் என்பது 2 ஏக்கர் 47 சென்ட். இந்த நிலத்தை எடுக்கும் பொருட்டு அதற்கு தேவையான இழப்பீடு வரைவு தீர்பாணையை வரும் மார்ச் மாதம் இறுதிக்குளுள் அரசு வெளியிட உள்ளது என்பது கூடுதல் தகவல். இந்த திட்டம் நிறைவு பெரும் பட்சத்தில், குடியாத்தம் மக்களின் பல வருட கோரிக்கையும், கனவு திட்டமும் நிறைவேறும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு விடிவுக்காலம் பிறப்பதோடு, சுற்று வட்டார பகுதியின் வளர்ச்சியும் அதிகரிக்கும் என்பதால் குடியாத்தம் மக்கள் ஒரே குஷியாகி உள்ளனர்.
இப்படி ஒரு தருவாயில் குடியாத்தத்தில் பைபாஸ் சாலை அமைக்க, மத்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி 221.03 கோடி ரூபாயை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டதற்கும், மேலும் இத்திட்டத்திற்காக நாடாளுமன்றத்திலும் துறைசார்ந்த அமைச்சகத்திடமும் தன்னுடைய சீரிய முயற்சியால், தொடர்ந்து கோரிக்கை வைத்து கச்சிதமாக காரியத்தை முடித்த கதிர்ஆனந்துக்கும் மக்கள் தங்களது நன்றியை தெரிவிக்கின்றனர்.
இதில் இன்னொரு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், கதிர் ஆனந்த்துக்கு பாரத பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் பிறந்த நாள் வாழ்த்து மடலை அனுப்பியதும், கதிர் மத்திய அரசுடன் ஓர் இணக்கமான போக்கில் இருப்பதால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவே நேரடியாக போன் செய்து சில பல விஷயம் பேசயிருப்பதும், அதன் பிறகே பிறந்த நாள் பரிசாக, அன்றைய தினமே இந்த அருமையான திட்டத்திற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.