
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் எப்போதும் காவல்துறை ஒரே பதிலை தயார் செய்து வைத்து இருப்பதாக கி வீரமணி ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- தந்தை பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது! குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் தயார் பதில் சரியானதல்ல,முதலமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்!,நேற்றிரவு (26.12.2021) பொன்னேரியில் உள்ள தந்தை பெரியார் சிலையை கோழைத்தனமாக காலிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
நேற்று காலையில் சென்னை பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அவர்களின் சிலைக்குப் ‘’புடவைமூலம் முக்காடு’’ போடப்பட்டது.மனநலம் பாதிப்பு என்ற தயார் பதில் ஏற்புடையதல்ல! கேட்டால், ‘மனநலம் பாதிக்கப்பட்டவன் இதனைச் செய்திருக்கிறான்’ என்கிற பதிலை எப்பொழுதும் தயாராக (ரெடிமேடாக) காவல்துறையினர் கூறிவிடுகிறார்கள்.
வேதாரண்யம் அருகே தேத்தாக்குடியில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டபோதும், தாராபுரத்தில் தந்தை பெரியார் சிலையின் தலையில் செருப்பை வைத்தபோதும்,சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அவமானப்படுத்தப்பட்டபோதும்கூட மனநலம் சரியில்லாத ஆசாமி செய்ததாகக் கூறி, கோப்பை (ஃபைல்) முடித்துவிடுவது வாடிக்கையாகிவிட்டது.மனநலம் பாதிக்கப்பட்டவனுக்குப்’ பெரியார் சிலைதான் கண்ணுக்குத் தெரியும்போல் தெரிகிறது.பொன்னேரியில் நேற்று (26.12.2021) காலை முதல் இரவு வரை பி.ஜே.பி.யின் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது என்பதையும், தந்தை பெரியார் சிலையருகே ‘வெற்றிவேல் வீரவேல்!’ என்று எழுதப்பட்ட நோட்டீசும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதையும் காவல்துறையினர் கணக்கில் கொள்ள வேண்டும் - கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இத்தகையவர்களைப் பின்னணியிலிருந்து இயக்குபவர்கள் யார் என்பதுதான் முக்கியம். இதுபோன்ற கீழ்த்தரமான செயல்பாடுகளால் தந்தை பெரியாரைச் சிறுமைப்படுத்தலாம் என்று அற்ப சந்தோஷப்படும் கயவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்.எதிர்ப்புகளிடையே வளர்ந்தவர்தான் தந்தை பெரியார்! தந்தை பெரியார் வாழ்ந்த காலகட்டத்திலேயே - அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளிலேயே செருப்பு வீச்சுகள், கல்லடிகள், வசவுகள் எல்லாம் நடந்துள்ளன. அவற்றையெல்லாம் சந்தித்த சரித்திர நாயகர்தான் தந்தை பெரியார்.எதிரிகளின், துரோகிகளின் இத்தகைய அருவருப்பான நடவடிக்கைகள் தந்தை பெரியாரின் பொதுவாழ்வுக்கு இடப்பட்ட எருவாக்கிதான் வெற்றி நடைபோட்டு, அய்யா மறைந்து 48 ஆண்டுகளுக்குப் பிறகும், உலகம் முழுவதும் போற்றப்படும் அவர்தம் மண்டைச் சுரப்பை உலகம் தொழும் நிலைக்கு உயர்ந்து நிற்கிறார்.
முதலமைச்சர் கவனத்திற்கு அதேநேரத்தில், தந்தை பெரியார் சிலைகளைக் குறி வைத்துத் தாக்கும் விஷமிகள் - விஷமிகளின் பின்னணியில் இருக்கக் கூடியவர்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரைக் கேட்டுக்கொள்கிறோம்.முதலமைச்சர் அவர்களும் இதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம். எல்லா தலைவர்கள் சிலைக்கு அருகில் கேமிரா பொருத்தி, கூண்டுகளை அகற்றுவது அவசியம் குறிப்பு: தலைவர்கள் சிலைகளுக்குக் கூண்டு போடுதல் அறிவார்ந்த தடுப்பு செயலாகவும் இருக்க முடியாது. பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் அனைத்துக் கட்சியினரும் ஊர்வலமாகச் சென்று கோட்டாட்சியரைச் சந்தித்து தந்தை பெரியார் சிலையைச் சேதப்படுத்தியவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று மனு கொடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளார் வீரமணி.