Tamilnadu

ஒரே வார்த்தையில் முற்று புள்ளி.. ஊடகங்களின் கனவில் மண்ணள்ளி போட்ட பாமக பாலு !

Pmk balu
Pmk balu

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாமக. அந்த தேர்தலில் பாமக சார்பில் 5 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றனர். மேலும் பாமக கூட்டணிக்காக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கியும் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.இந்நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி நேற்று அறிக்கை வெளியிட்டார் 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இந்த தேர்தலில் பாமக வின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள், 9 மாவட்டங்களின் துணை பொதுச்செயலாளர்கள் ,

உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் எனது தலைமையில், இணைய வழியில் நடந்தது.இந்த கூட்டத்தில், கட்சியின் வளர்ச்சி கருதி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது என்பதை டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து செப்டம்பர் 15ஆம் தேதி (இன்று), 16ஆம் தேதி விருப்ப மனுக்கள் பெறப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில துணை பொதுச்செயலாளர்கள் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள்.விண்ணப்பித்தவர்களிடம் உயர்நிலை குழு மூலம் நேர்காணல் நடத்தி வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டது.

இந்நிலையில் அதிமுக தலைமையை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சனம் செய்ததாக ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டன, அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி செல்லூர் ராஜு வரை பலரும் கூட்டணியில் இருந்து பாமக வெளியேறுவது பற்றி எந்த கவலையும் இல்லை எனவும் மேலும் காட்டமான சில விமர்சனங்களை வைத்தனர்.

இந்த சூழலில் பாமக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது மருத்துவர் ராமதாஸ் அதிமுக கூட்டணியை விமர்சனம் செய்யவில்லை மாறாக, ஊடகங்கள் தவறாக குறிப்பிட்டுள்ளன, மேலும் இதுகுறித்து பலரும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது, உள்ளாட்சி தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

அதிமுக கூட்டணியில் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக தெரிவித்தார், அதாவது பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தற்போதும் இருக்கிறோம் என தெரிவித்து பல்வேறு யூகங்களுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது பாமக.பாமக கூட்டணியில் இருந்து வெளியேறி திமுக கூட்டணியில் இணைய இருப்பதாக ஊடகங்கள் தொடங்கி பல்வேறு அமைப்புகளும் பேசிவந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக கூறி முற்றுப்புள்ளி வைத்து ஊடகங்கள் விவாதம் நடத்த இருந்த செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது பாமக.