திமுக தலைவர் ஸ்டாலின் தன்னை திராவிடன் என அடையாளப்படுத்தி கொண்டுள்ள நிலையில் அவருக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர அதிகரித்து வருகின்றன இந்நிலையில் ஸ்டாலினை கண்டித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :
தமிழர்களுக்கு மொழி வழி அடையாளம் போதும், திராவிட பேரினவாத பெருமை வேண்டாம்! தமிழகத்தின் முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது டிவிட்டர் பக்க முகப்பில் ‘Chief Minister of Tamil Nadu, ”President of the DMK - என்றும் பதிவு செய்த அவர், மூன்றாவதாக ”Belongs to the Dravidian stock” என்று அழுத்தமாக இன்னொன்றைச் சொல்கிறார்.
அதாவது ”அவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” என்றும் பதிவிட்டுள்ளார். அதன் உள்ளார்ந்த பொருள் என்ன? மொழி வாரியாக அமைக்கப்பட்டிருக்கக்கூடிய தமிழ் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள அவர் தன்னை தமிழராக அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, திராவிட இனத்தைச் சேர்ந்தவன் என அடையாளப்படுத்தியதன் நோக்கம் என்ன?
திராவிடம் என்பது ஒரு சொல்லாடலே தவிர, அதற்கு வேறு எந்த முகவரியும் இல்லை. திராவிடத்திற்கு மொழி அடையாளமும் இல்லை, பூகோள ரீதியான அடையாளமும் இல்லை; மத அடையாளமும் இல்லை; ஜெனிடிக் ( Genitic) மூலக்கூறு அடிப்படையிலான வெள்ளை, கருப்பு, மஞ்சள் நிற, இன என்று வகைப்பட்டதும் இல்லை. அப்படி எந்த முகவரியும் இல்லாத திராவிட இன அடையாளத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
ஆறு கண்டங்களில் வாழும் எட்டு கோடி தமிழர்களுக்கும் ’தமிழ்நாடு’ என்ற பூர்வீக பிறப்பிடம் உண்டு. உலகின் எந்த பகுதியில் வாழ்ந்தாலும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் இனமாகப் பெருமையாக அடையாளப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தமிழ் மண்ணின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் ஒருவர், தமிழ் இனம் என்பதை விட்டுவிட்டுத் தான் திராவிட இனத்தைச் சார்ந்தவன் என அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? ஸ்டாலின் அவர்களுடைய இந்த திராவிட இன வாதம், தமிழ் இன அழிப்பின் அடையாளம் என பொருள் கொள்ளலாமா?
காலத்தால் மீட்டெடுக்கப்பட்ட தமிழ், தமிழ் இன அடையாளத்தை அழிக்கும் இம்முயற்சியை உலகெங்கும் உள்ள தமிழ் இன பற்றாளர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? காலை 09.00 மணிக்கு சாதி, இன, மொழி, பாகுபாடற்று செயல்பட உறுதி மொழி ஏற்று விட்டு, அடுத்த பத்தாவது நிமிடத்தில் இன துவேசத்தைத் துவக்குவது அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு மாறுபட்டது ஆகாதா? அது ஒரு பக்கம். தமிழ் மொழி வழி, தமிழ் இனம் என்பதை மறைத்துவிட்டு, திராவிட இனத்தைச் சார்ந்தவன் என அடையாளப்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன? என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.
’Belongs to the Dravidian stock - நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்’ என்பதை எந்தவொரு தமிழரும் போகிற போக்கில் கடந்து போக முடியாது, கூடாது. திராவிட பேரினவாதம் தமிழின அடையாள அழிப்பின் துவக்கமாகவே உலகத் தமிழர்கள் கருத நேரிடும்!
தமிழர்களுக்கு தமிழ் மொழி வழி இன அடையாளம் போதும்,திராவிட பேரினவாத பெருமை வேண்டாம்!