என்னதான் நாம் வளர்ந்து விட்டோம் வளர்ந்து விட்டோம் என பெருமை பேசி வந்தாலும், குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் கசப்பான சம்பவங்களில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது. திருமண வாழவில் இணைந்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தவிக்கும் தவிப்புக்கு நடுவே.... ரேஷன் கார்டு எனக்கு கொடு என மனைவி தரப்பிலும், தர முடியாது என கணவன் தரப்பிலும்....
அவ்வளவு ஏன் கணவன் வீட்டில் ரேஷன் கார்டு மாட்டிக்கொண்டால்.. பிரிந்து வந்த மனைவி தன் குழந்தைகளுடன் படாத பாடு படுகிறாள். குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கு செல்வதும் கஷ்டம், பொருளாதார வசதிக்கும் கடினம்.. ஆனால் அரசு வழங்கும் ரேஷன் பொருட்களை கொண்டாவது பொழப்பு நடத்திக்கலாம் என ஏங்கும் பெண்கள் ஏராளம். அவர்களுக்கு இந்த செய்தி உண்மையில் மன மகிழ்ச்சியே .
அதாவது கணவனால் வாழ்க்கை இழந்தவர்கள் அல்லது விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க உத்தரவை பிறப்பித்து உள்ளது உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆனவுடன் கணவன் வீட்டு ரேஷன் அட்டையில் அவருடைய பெயர் சேர்க்கப்படுகிறது. ஆனால் எதிர்பாராதவிதமா, கருத்துவேறுபாடு காரணமாக கணவனை மனைவி பிரிந்து இருக்கும் தருணத்திலும் அல்லது கணவனால் பெண் நிராகரிக்கப்படும் நிலையிலும் அல்லது கணவனால் கைவிடப்பட்ட நிலையிலும்,
தனியாக வசிக்கும் பெண்ணுக்கு ரேஷன் அட்டை பெறுவது பெரும் சிரமமாக இருந்து வந்தது. அதேவேளையில் கணவன் வீட்டாரின் குடும்பத்திலிருந்து அப்பெண்ணின் பெயரை நீக்க அவர்கள் முன்வருவதும் இல்லை.மேலும் விவாகரத்து என்றால் அதனுடன் சொத்து பிரச்சனையும் வரக்கூடிய காரணத்தால் விவாகரத்து பெறவே பல ஆண்டுகள் ஆகும். கணவரிடம் விவாகரத்து சான்று பெற்று பின்னர் தான் ரேஷன் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்க முடியும் என்றால் வயதும் ஆகி வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிடும் நிலை தான் இருந்தது. இப்படியான நிலையில் தமிழக அரசு ஒரு நல்ல அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றது.
அதன்படி தனியாக ரேஷன் அட்டை தேவைப்படும் பெண், அவருடைய ஆதார் எண் கணவர் வைத்திருக்கும் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டிருந்தால், அப்பெண் மற்றும் அவரை சார்ந்த குழந்தைகள் தனியாக வசித்து வரும் தருவாயில், எழுத்து மூலம் வாக்குமூலம் பெற்று அவ்வூரிலுள்ள அலுவலர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி ரேஷன் அட்டையில் உள்ள குடும்பத் தலைவரின் அனுமதி இல்லாமலேயே குடும்ப அட்டையில் இருந்து பெண்ணின் பெயரை நீக்கலாம்.
பின்னர் புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது விவாகரத்து சான்று எதையும் கேட்காமல் புதிய அட்டை வழங்க நடவடிக்கை எடுங்கள் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த செய்தி உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு பெரும் மன நிம்மதியை கொடுத்திருக்கிறது.