India

ஹிந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து..! பின்வாங்குகிறதா மத்திய அரசு

Mukthar-abbas
Mukthar-abbas

புதுதில்லி : இந்தியாவில் கேரளா காஷ்மீர் உட்பட பத்து மாநிலங்களில் ஹிந்துக்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால் அந்தந்த மாநிலங்களில் அவர்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கவேண்டும் என பலகாலமாக கோரிக்கை எழுந்துவந்தது. இதனிடையே மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் 2017ல் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார்.


உபாத்யாயின் மனுவை  நீதிமன்றம் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையத்தை அணுகுமாறு அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து 2020ல் அஸ்வினி உபாத்யாய் பொதுநல வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் மத்திய அரசு இதுகுறித்த பிராமண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு திங்களன்று தனது பிராமண பத்திரத்தை தாக்கல் செய்தது. அந்த பத்திரத்தில் "இந்த பிரச்சினை தொலைநோக்கு அம்சங்களை உள்ளடக்கியது. அதன் தாக்கங்கள் குறித்து மாநில அரசு மற்றும் தொடர்புடைய சிறுபான்மை அமைச்சகத்துடன் கலந்தாலோசித்து விவாதித்த பின்னரே  நடவடிக்கையையும் முன்னெடுக்க முடியும்.

அதற்கான கால அவகாசம் தேவை. இந்த ரிட் மனுவில் உள்ள கேள்விகள் நாடு முழுவதும் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் எடுக்கப்படும் எந்தவொரு நிலைப்பாடும் நாட்டிற்கு எதிர்பாராத சிக்கலை ஏற்படுத்த கூடும்.  சிறுபான்மையினராக அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் இருந்தாலும் மாநில அரசுகளுடன் விவாதித்த பின்னரே முடிவெடுக்கப்படும்" என சிறுபான்மையின விவகார அமைச்சகம் தனது பிரமாணபத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு மனுதாரரின் மனுவுக்கு பதில்மனு தாக்கல் செய்யாததால் கடந்த மார்ச் மாதம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு 7500 ரூபாய் அபராதம் விதித்திருந்தது. 2020ல் தொடரப்பட்ட வழக்குக்கு 2022 வரை எந்த ஒரு பதில்மனுவையும் மத்திய அரசு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும்கூட உச்சநீதிமன்றம் 28 நாள் கெடுவிதித்திருந்தும் ஒருநாள் தள்ளியே பிராமண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.