
ஊடக விவாதங்களை தொகுத்து வழங்கும் நபர்களுக்கு நெறியாளர் என்று அழைக்கப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்களுக்கு இடையீட்டாளர் என்ற புதிய பெயரை சூட்டியுள்ளார்.. அத்துடன் சேலத்தை சேர்ந்த வளர்மதி கைது குறித்தும் நாராயணன் திருப்பதி நறுக் நறுக் என்று கேள்விகளை எழுப்பியுள்ளார் அது பின்வருமாறு :-
வளர்மதி என்பவரை ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் நிறுவன ஊழியர்  விவகாரத்தில் தி மு க அரசு கைது செய்துள்ளது. 2017 மற்றும் 2018ல் இதே வளர்மதியை குண்டர் சட்டத்தில் முறையே நெடுவாசல் மற்றும் சேலம் எட்டுவழி சாலை விவகாரத்தில் மக்களை தூண்டி விட்டதாக கூறி அன்றைய அ தி மு க அரசு கைது செய்த போது பொங்கி எழுந்த தி மு க தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது கூட்டணி கட்சியினர் இன்று அவரை ஏன் கைது செய்தது ஏன்?
அன்று கைது செய்தது தவறு என்றால் இன்று கைது செய்தது சரியா? அவருக்காக குரல் கொடுத்து அவரை கைது செய்ததை கண்டித்த வை கோ அவர்கள் இன்று காணாமல் போனது ஏன்? அ தி மு க அரசு கைது செய்தால் ஜனநாயக விரோதம், தி மு க அரசு கைது செய்தால் ஜனநாயகமா? வளர்மதி என்பவர் நக்சல் பயிற்சி பெற்றவர் என்றும், நக்சல் பயிற்சி பெறுவதற்கு பலரை தூண்டினார் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்களை சொன்னபோது பொங்கிய தி மு க செய்தி தொடர்பாளர்கள் இன்று வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?
வளர்மதி என்ற ஒரு மாணவியை கைது செய்தது நியாயமா? இது நீதியா? என்று குரலெழுப்பிய தொலைக்காட்சி இடையீட்டாளர்கள் இன்று குரலே இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அன்று அவரின் கைது குறித்து விவாதம் செய்த தொலைக்காட்சிகள் இன்று மறந்து போனதன் மர்மம் என்ன? எதிர்க்கட்சியாக இருக்கும் போது, வளர்மதியை கைது செய்த தமிழக காவல்துறையை கண்டித்த ஸ்டாலின் அவர்கள் இன்று அவர் பொறுப்பில் இருக்கும் காவல்துறையை கண்டிப்பாரா? எதிர்க்கட்சியாக இருக்கும் போது அரசுக்கு எதிராக செயல்பட்டவரை ஆதரிப்பதும், ஆளும்கட்சியான பிறகு அதே காரணத்திற்காக அவரை கைது செய்வதும் தி மு கவின் இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
ஆனால், அன்றும், இன்றும் வளர்மதி போன்ற மக்களை தூண்டி விட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முனையும் வளர்மதி போன்ற நக்சல்களின் விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை பாஜக என்றும் மாற்றிக்கொள்ளாது. அன்று செய்த தவறுக்கு இன்று தி மு க வருத்தம் தெரிவிக்குமா? எனவும் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

 
                                             
                                             
                                            