உதவி காவல் ஆய்வாளரை வெட்டி கொன்ற கூட்டம் வாழ்நாளில் மீண்டும் இந்த தவறை செய்யாமல் இருக்க கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளதுடன் முக்கிய சம்பவங்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை வெட்டிப் படுகொலை செய்த, ஆடு திருட்டுக் கூட்டத்தை விரைந்து கைது செய்ய வேண்டும்!! திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக ஏழை, எளிய, விவசாய மக்களுடைய ஆடுகள், மாடுகள், கோழிகள் திருடு போயுள்ளன. இதுகுறித்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் வந்திருப்பினும், அந்த ஆடு, மாடு, கோழித் திருட்டுக் கும்பலைக் கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவியுள்ளது.
அத்திருட்டுக் கும்பலை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்தோடு, நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த, நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், பள்ளத்துப்பட்டி என்ற கிராமத்தின் அருகே ஆடு திருட்டுக் கும்பல் ஒன்றை பிடிக்கத் துரத்திச் சென்றுள்ளார். திருடர்களைப் பிடிக்கச் சென்ற அவரை, அந்த ஆடு திருட்டுக் கூட்டம் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளது.
கடமை உணர்வோடு பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். நள்ளிரவில் திருடர்களைத் தனித்தேத் துரத்திப் பிடிக்கச் சென்ற அவரது இத்துணிவான செயல் அளவிடற்கரியது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த கால நடைமுறைகளின்படி, பூமிநாதனுடைய குடும்பத்திற்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன். திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், நவல்பட்டு காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளிலும், நீண்ட நாட்களாகத் திருட்டில் ஈடுபட்டு பிடிபடாமல் உள்ள அனைத்துக் கும்பலையும் சிறப்புப் படை ஒன்றை நியமித்து அவர்களைக் கைது செய்வதோடு, அவர்கள் வாழ்நாளில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாத அளவிற்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும்.
அதேபோல, பூமிநாதன் அவர்களை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்த அந்தத் திருட்டுக் கும்பலையும் விரைந்து கைது செய்து, சிறிதும் காலம் தாழ்த்தாமல் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் டாக்டர் கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தில் குற்றசெயல்கள் அதிகரித்து வரும் சூழலில் உதவி காவல் ஆய்வாளரை வெட்டிவிட்டு தப்பித்த குற்றவாளிகளை காவல்துறை தனிப்படை அமைத்து தேடிவரும் சூழலில் அவர்களை காவல்துறை கண்டறிந்து என் கவுண்டர் செய்யலாம் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.