Tamilnadu

ஒரு புறம் கோவிலில் ஒன்றாக சாப்பாடு, மறு புறம் ஒரு கோடி.., என்னதான் நடக்கிறது இதுதான் சமூக நீதியா?

editor choice
editor choice

கோவிலில் உணவு உன்ன அனுமதிக்கவில்லை என யூடுப் சேனல் ஒன்றில் வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த பெண், இது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதே பெண்ணுடன் கோவிலில் அமர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் நேற்று வெளியானது !


இதனை பார்த்த அனைவரும் அமைச்சரின் செயல்பாடுகளை பாராட்டினர், எதிர்க்கட்சியினர் கூட பாராட்டும் நிலையில் அமைந்தது அமைச்சர் சேகர்பாபுவின் நடவடிக்கை, இந்த சூழலில்  இதற்கு நேர மாறாக மற்றொரு சம்பவம் நடந்துள்ளது, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த திமுக ஒன்றிய சேர்மன் தன்னிடம் ஒரு கோடி கொடுக்க பணமில்லை என கூறி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கடையம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ராஜினாமா கடிதத்தை அளித்தார். தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 வார்டுகளில் 10 வது வார்டில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் செல்லம்மாள்.

இவரது கணவர் முருகன் ஆதி திராவிடர் நலக்குழு உறுப்பினராக திராவிட முன்னேற்றக்கழகத்தில் உள்ளார். இவர் மனைவி திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் இன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவகலத்தில் நேர்முக உதவியாளர் ஹெலனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அதில் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் இந்த பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏற்கனவே இந்த பகுதியில் வெற்றி பெற்ற ஜெயக்குமார் என்வரே தேர்வு செய்யப்படுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் மறைமுக தேர்தலில் செல்லம்மாள் வெற்றிபெற்றார். இந்த சூழலில் வெற்றி பெற்ற செல்லம்மாள் ஒரு கோடியே 10 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய், அப்படி செய்யவில்லை என்றால் உன்னை கட்சியில் இருந்து நீக்குவது மற்றும் இல்லாமல் நடவடிக்கை பாயும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தலித் சமூகத்தை சேர்ந்த செல்லம்மாவால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக, ராஜினாமா கடிதத்தை அளித்த பின்பு செய்தியாளர்களிடம் தெரிவித்தார், இந்த சூழலில் தென்காசி திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் கூறியதாவது கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜெயக்குமார் ஒரு கோடியே 10 லட்சம் கடன் வாங்கி செலவு செய்துள்ளார்.

கவுன்சிலர்களுக்கும் செலவு செய்துள்ளார், அந்த பணத்தை கொடுக்கவேண்டும் என பொறுப்பாளர்கள் கூறியதால் அவர் ராஜினாமா செய்துள்ளார் என தெரிவித்துள்ளார். இந்த சூழலில் அரசியலில் சமூக நீதி எல்லாம் ஒன்றும் இல்லை, பணம் தான் முக்கியம், கோவிலில் மட்டும் தான் சமூக நீதி பேசமுடியும், பணம் இல்லை என்றால் எங்கும் சமூக நீதி பேசமுடியாது அதற்கு சிறந்த உதாரணம் வெற்றி பெற்ற தலித் சமுதாயஒன்றிய சேர்மன் பதவியை ராஜினாமா செய்ததே சிறந்த உதாரணம்.

கோவிலில் நரிக்குறவ சமுதாயத்துடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்ட மறு பக்கத்தில் பணம் இல்லாத காரணத்தால் தலித் சமுதாய பெண் பதவியை ராஜினாமா செய்து இருப்பது இதுதான் சமூக நீதியா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பாஜக மூத்த தலைவர் H ராஜா கடையம் ஒன்றிய குழு தலைவராக பொறுப்பேற்ற திருமதி செல்லம்மாள் அவர்களிடம் திமுக ஒன்றிய செயலாளர் சிவபத்மநாபன் 1.1 கோடி கேட்டு நிர்பந்தித்ததால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அந்த ராஜினாமாவை ஏற்கக் கூடாது. மேலும் திமுக செயலாளர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.