Tamilnadu

பகவத் கீதையை தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்தார் நம் நேதாஜி! அண்ணாமலை அசத்தல் பதிவு!

Annamalai
Annamalai

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 பிறந்த நாளை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் இந்த வேளையில் பளிங்கிலான அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட  கருத்து  


இதோ..! "அவர் உயிர் சுதந்திரத்தின் விலையாக... அவர் உருவம் தியாகத்தின் சிலையாக…பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே...  அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... 

அனைவருக்கும் வணக்கம். தன்னலமின்றி, நம் பாரத நாட்டின் விடுதலைக்காக போராடிய உன்னதமான தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள், மற்ற தலைவர்களின் அரசியல் வியூகங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, தனித்துவமான வழியில் ஆங்கிலேயரை எதிர்த்து விடுதலைக்காக போராடினார்.

இந்தியாவிற்கு விடுதலைப் பெற்றுத் தருவதற்காக மற்ற தலைவர்கள் எல்லாம் இந்திய மக்களிடம் எழுச்சி உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உலகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வேளையில், இந்திய விடுதலைக்கான சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

அது மட்டுமா இந்தியாவின் முதல் ராணுவத்தை உருவாக்கியவர் நம் நேதாஜி அவர்கள். அன்றைய இந்திய தேசிய ராணுவம் மட்டும்தான், ஆதாயத்திற்காக இல்லாமல் சமுதாயத்திற்காக செயல்பட்ட உலகின் முதல் ராணுவம். எண்பது ஆண்டுகளுக்கு முன்னரே ராணுவத்தில் பெண்கள் பிரிவையும் ஏற்படுத்திய பெருமைக்குரியவர் நேதாஜி அவர்கள்.

இந்திய தேசிய ராணுவத்தில், பெண்களுக்கென தனிப் பிரிவான 'ஜான்சி ராணி படை'யைத் தொடங்கியவர். ஒரு முறை, ஜான்சி ராணி படை கூடாரப் பகுதிக்குள் நேதாஜி அவர்கள் நுழைந்தபோது, கோவிந்தம்மாள் என்னும் தமிழ்ப்பெண் ராணுவ அதிகாரி, அவரைத் தடுத்து நிறுத்தினார். 

தன்னையே தடுத்து கடமை செய்த அவருடைய பாதுகாப்பு சேவையைப் பாராட்டி, அவருக்கே அப்படையின் உயரிய விருதான லாண்ட்சு நாயக் விருதை வழங்கி கௌரவித்த பெருந்தன்மைக்குரிய பெருமகன் நம் நேதாஜி.

நாட்டின் விடுதலை ஆங்கிலேய அரசால் விநியோகிக்கப் படுவதை அவர் விரும்பவில்லை, அதற்குப் பதிலாக, வீரத்துடன் போரிட்டு, விடுதலையை விளைவிக்க விரும்பினார். கேட்டா தரப்படும் என்பதற்குப் பெயரா சுதந்திரம்... தோட்டா சுடப்படும், என அந்நியரை விரட்டுவது சுதந்திரம் என முழங்கினார். இன்னம் சொல்வதென்றால், சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவதல்ல. அது எடுக்கப்பட வேண்டியது என்பதே அவரின் தாரக மந்திரமாக இருந்தது.

பகவத் கீதையை தன் கையருகில், தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்தவர் நம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள், ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்திற்கான பெரும் தூண்டுதலாக அவர் பகவத் கீதையைக் கருதினார்.

சுவாமி விவேகானந்தரின் மீது பெரும் மதிப்பும் மரியாதையையும் தொடர்ந்து வெளிப்படுத்தியவர் நம் நேதாஜி. சர்வ சமயவாதம் என்ற தத்துவம், தேசியவாதம் என்ற முனைப்பு, மற்றும் சமூக, சமுதாயச் சீரமைப்பு எண்ணங்களும், சிறு வயதிலேயே இவரிடம் சுவாமி விவேகானந்தரின் தாக்கத்தை ஏற்படுத்தின. சுபாஷ்போஸ் அவர்கள் தன்னை சமதர்மவாதி என்றே அழைத்துக்கொண்டார். சுவாமி விவேகானந்தர் முன் மொழிந்த சமதர்மக் கொள்கையின்பால் அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார்.

அந்த மகானுபாவரின் மாசற்ற வரலாறு, மறைக்கப்பட்டது. உண்மையில்லாதவைகள் உரைக்கப்பட்டது. சுதந்திரத்தில் அவரின் பங்களிப்பு தனிப்பட்ட காரணங்களுக்காக குறைக்கப்பட்டது. ஆகவே தற்போது நம் பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், அந்த வீரத்தின் பிம்பத்திற்கு ஒளி பிம்பத்தால் ஒரு சிலை அமைக்கப் போகிறார்.

புது டெல்லியின் ராஜபாட்டையில், இந்தியா கேட் பகுதியில், பளிங்குப் பாறையால் சிலை தயாராகிறது. அதுவரை முப்பரிமாண ஒளி பிம்பச்சிலை உயிர்ப்புடன் இருக்கும் என்று நம் பாரதப் பிரதமர் மோடி அவர்கள் நாட்டுக்கு அறிவித்தபோது, நேதாஜி அவர்கள் பிறந்த தினத்தை நம் தேசத்தின் பராக்கிரம தினமாக அறிவித்தபோது, குடியரசு கொண்டாட்டங்கள், இனி நேதாஜியின் பிறந்தநாளான ஜனவரி 23ம் நாளிலிருந்தே தொடங்கும் என்று பாரதப் பிரதமர் அடுக்கடுக்காக அறிவித்தபோது, ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டது. நேதாஜியின் தியாகங்கள் பிரதமரால் உரைக்கப்பட்டது. அனைவராலும் நினைவு கூறப்பட்டது.

டெல்லியில் உள்ள இந்தியா கேட்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு சிலை வைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்ததோடு நில்லாது, இந்தியா கேட்டில் நேதாஜி சிலை இருப்பது போன்ற ஒரு புகைபடத்தை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 பிறந்த நாளை ஒட்டு மொத்த தேசமும் கொண்டாடும் இந்த வேளையில் பளிங்கிலான அவரது பிரம்மாண்ட சிலை இந்தியா கேட்டில் நிறுவப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா நேதாஜிக்கு கடன்பட்டு இருப்பதற்கு அடையாளமாக அது இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். நேதாஜியின் நிரந்தர சிலை அமைக்கப்படும் வரை இந்தியா கேட்டில் ஹோலோகிராம் எனப்படும் முப்பரிமாண ஒளி பிம்பச் சிலை வைக்கப்படும் என்றும் நேதாஜியின் பிறந்த நாளான ஜனவரி 23ம் தேதி அதனை திறந்து வைக்க இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.

”ஒரு கொள்கைக்காக ஒரு தனிமனிதன் உயிர் துறக்கலாம். ஆனால், அவன் இறப்புக்குப் பிறகு அந்த கொள்கை ஆயிரம் உயிர்களாக அவதாரமெடுக்கும்” என்ற நேதாஜியின் வைர வரிகள் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது… உங்களுக்கும் கேட்டிருக்குமே… 

நன்றி வணக்கம் அன்புச் சகோதரன்உங்க ‘‘அண்ணா’’