புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் தலைமை நீதிபதியை மாற்ற கூடாது என 200 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கடிதம் எழுப்பியது, தலைமை செயலாளர் முதல் அதிகாரிகள் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களின் புதிய முயற்சியாக இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்த கருத்துபின்வருமாறு :-
சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உச்சநீதிமன்ற கொலிஜியத்தின் பரிந்துரையின் பேரில் மேகாலயாவிற்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் சென்னை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றப்பட்டார். உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் இப்பொழுது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கீழ் அமையப்பெற்ற ’கொலிஜியம்’ என்ற அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.
உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் மத்திய அரசுக்கு இருந்த முழு அதிகாரத்தையும் கொலிஜியம் தனது கையில் எடுத்துக்கொண்டது. ’கொலிஜியம்’ என்ற அமைப்பு உருவான பிறகு எவ்வளவோ நீதிபதிகள் நியமனங்கள், இட மாற்றங்கள் என அனைத்தும் கொலிஜியத்தால் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவிற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இந்த மாற்றத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 200 மேற்பட்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கொலிஜியத்திற்கு கடிதம் எழுதியதாகத் தெரிகிறது. இது தவறான நடைமுறையாகவே கருதுகிறேன். உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளடங்கிய கொலிஜியம் அமைப்பு சஞ்ஜிப் பானர்ஜியை அற்ப காரணங்களுக்காக மாற்றியிருக்க வாய்ப்பு இல்லை.
வழக்கறிஞர்கள் சிலர் நீதிபதிகளின் பால் பற்று காண்பிப்பதும், சில நீதிபதிகள் மீது வெறுப்பைக் காண்பிப்பதும் நீதியை நிலை குலையச் செய்துவிடும். எந்த பொதுமக்களும் நீதிமன்றத்தில் பானர்ஜி இருக்கிறாரா? சட்டர்ஜி இருக்கிறாரா? சர்மா இருக்கிறாரா? சாஸ்திரி இருக்கிறாரா? சடகோபன் இருக்கிறாரா? சடையப்பன் இருக்கிறாரா? சமுத்திரம் இருக்கிறாரா? எனப் பார்த்துப் போவதில்லை.
தங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது; வழக்கறிஞர்கள் தங்கள் பக்கம் உள்ள உண்மையை எடுத்துச் சொல்லி நீதியைப் பெற்றுத் தருவார்கள் என்றே நீதிமன்றம் செல்கிறார்கள். ஆனால் வழக்கறிஞர்கள் சிலரோ நீதிபதிகளை வேறு கோணத்தில் அணுகி வருகிறார்களோ என்ற அச்சம் எழுகிறது.
தமிழகத்தில் ஆட்சி மாறினால் கூட தலையாரி முதல் தலைமைச் செயலர் வரையிலும் தங்கள் சேவகர்களாக இருக்க வேண்டும் என்பதே கடந்த 50 ஆண்டுக் கால தமிழக அரசியலின் நெறிமுறை ஆகிவிட்டது. இதற்கு விதிவிலக்கு ஒன்று ஆளுநர் பதவி; இன்னொன்று தலைமை நீதிபதி பதவி. இந்த இரண்டு பதவிகளும் தமிழக அரசியலுக்கு அப்பாற்பட்டு இருந்தால் மட்டுமே தமிழக மக்கள் ஜனநாயக காற்றைச் சுவாசிக்க முடியும். தலைமை நீதிபதி நியமனத்தையும் தமிழக அரசியல் அதிகார வளையத்திற்குள் கொண்டு வந்து விட்டால் 8 கோடி தமிழக மக்களுடைய நிலைமை விபரீதமாகிவிடும்.
சஞ்ஜிப் பானர்ஜியை மாற்றக் கூடாது என்று சில வழக்கறிஞர்கள் மனு போடுகிறார்கள் என்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே கருத வேண்டியுள்ளது. இது மிக மிக ஆபத்தான போக்காகும். பெயர் அடையாளங்கள் மூலமாக நீதியைப் பெற முடியாது. உண்மையான காரணம், நியாயமான வாதத்தின் மூலமே நீதியைப் பெற முடியும்.
சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயாவிற்கு மாற்றுவதற்கு அற்ப சொற்பக் காரணங்களைத் தாண்டி வேறு காரணங்களை கொலிஜியம் கருதியிருக்கலாம். அதற்குள் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. ஆனால், தலைமை நீதிபதி இடமாற்ற விசயத்தில் இதுவரை இல்லாத ஒரு தவறான நடைமுறையை சில தமிழக வழக்கறிஞர்கள் செய்வது வேடிக்கையாகவும், விந்தையாகவும் இருக்கிறது; அச்சத்தையும் தருகிறது.
எனவே, சஞ்ஜிப் பானர்ஜிக்கு ஆதரவாக அரசியல் ரீதியாகக் குரல் கொடுக்கும் போக்கை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் விட்டுவிட்டு தமிழகத்திற்கு நியாயமான தலைமை நீதிபதியைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள் என கொலிஜியத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயல்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
சஞ்ஜிப் பானர்ஜி மாற்றம் அற்ப காரணங்களின் அடிப்படையில் இருக்காது! கொலிஜியத்தின் பரிந்துரையை தமிழக வழக்கறிஞர்கள் அரசியலாக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.