முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அண்ணாமலை கையில் எடுத்த விவகாரம் தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது, இதில் தமிழக அரசு கொடுத்த பதில் கேரளவில் புயலை கிளப்பியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 8- ம் தேதியில் தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் எதிரே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார் அதில், கேரள கம்யூனிஸ்ட் அரசுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவிடம் உரிமையை பறிகொடுத்து விட்டதாக தெரிவித்தார்.
அடுத்த மத்திய ஆட்சியில் துணை பிரதமர் கனவிற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள அரசிடம் உரிமையை விட்டு கொடுத்து இருப்பதாகவும் இனியும் விழித்து கொண்டு 142 அடி வரை நீரை அணையில் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யவில்லை என்றால் ஒரு லட்சம் பேருடன் சென்று முல்லை பெரியாறு அணையில் மிக பெரிய போராட்டம் வெடிக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.
அந்த வகையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது,முல்லை பெரியாறு அணையில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து, அணையின் பாதுகாப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அணை பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், அணையின் வயதை வைத்து கணக்கிடாமல் பராமரிப்பு, புதுப்பித்தல் ஆகியவற்றின் அடிப்படையில் உறுதித்தன்மையை கணக்கிட வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், பெருமழை மற்றும் வெள்ளக்காலத்தில் நீரை சேமித்து வழங்குவதன் அடிப்படையில் அணையின் ஆயுளை கணக்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் வயதை குறிப்பிட்டு பலவீனமாக உள்ளதாக கேரள அரசின் குற்றசாட்டை அடியோடு மறுத்துள்ளது தமிழக அரசு.
முல்லை பெரியாறு அணையில் கேரள அமைச்சர் உள்ளே புகுந்து அணையில் நீரை திறந்த விவகாரம் புயலை கிளப்பிய நிலையில் தற்போது சட்ட போராட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கேரளாவின் குற்றசாட்டை தமிழக அரசு அடியோடு மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை முல்லை பெரியாறு விவகாரத்தில் போராட்டத்தை கையில் எடுத்த நிலையில் தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக கேரள அரசின் குற்றச்சாட்டிற்கு சம்பட்டி அடி கொடுத்து இருப்பது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.