தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சரவை பட்டியல் வெளியாகியுள்ளது, அதில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு நீர் வளத்துறையும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறையும், ஐ பெரியசாமிக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சராகவும், எ.வ.வேலு பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண்துறை அமைச்சராகவும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளனர். சட்டத்துறை அமைச்சர் பதவி ரகுபதிக்கும், வீட்டு வசதித்துறை அமைச்சர் பதவி முத்துசாமிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
பெரியகருப்பனுக்கு ஊரக வளர்ச்சித்துறையும் தா.மோ.அன்பரசனுக்கு ஊரக தொழில்துறையும், எம்.பி சாமிநாதனுக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை அமைச்சராக கீதா ஜீவனும், மீன்வளத்துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணனும், போக்குவரத்து துறை அமைச்சராக ராஜகண்ணப்பனும் பதவி ஏற்க உள்ளனர்.வனத்துறை அமைச்சர் பதவி கே.ராமச்சந்திரனுக்கும், உணவுத்துறை அமைச்சர் பதவி சக்கரபாணிக்கும், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் பதவி வி.செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.காந்திக்கு கைத்தறித்துறையும், மா.சுப்ரமணியனுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையும், பி.மூர்த்திக்கு வணிக வரி மற்றும் பதிவுத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பி.கே.சேகர் பாபு, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சராக பழனிவேல் தியாகராஜன் பதவி ஏற்க இருக்கின்றனர்.
சா.மு.நாசருக்கு பால் வளத்துறையும், செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கு சிறுபான்மையினர் நலன் துறையும், அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பள்ளிக் கல்வித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சராக சிவ.வீ.மெய்யநாதன், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக சி.வி.கணேசன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதிவேந்தனுக்கு சுற்றுலாத்துறையும், கயல்விழி செல்வராஜ்க்கு ஆதி திராவிடர் நலத்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் 15 புதிய முகங்கள் இடம்பெறுகின்றனர். கடந்த சில நாட்களாக சுகாதாரத்துறை எழிலன் அல்லது தேர்தலுக்கு முன்னர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த லட்சுமணனுக்கு வழங்கப்படும் என பேச்சுக்கள் அடிபட்டது.
செந்தில் உள்பட பலர் எழிலனுக்கு சுகாதாரத்துறை ஒதுக்கப்படும் என காத்து இருந்தனர் தேர்தலுக்கு முன்னரே செந்தில் எழிலனை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது, இந்த நிலையில் எழிலனுக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை, எழிலன் இந்து மதத்திற்கு எதிராக பேசியதும், குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக சர்ச்சை கருத்து தெரிவித்தது போன்ற காரணங்களை சுட்டி காட்டி எழிலனின் தேர்வை ஸ்டாலின் மறுத்து விட்டாராம்.
எப்படியும் எழிலனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், அதை வைத்து சமூக நீதி பெரியாரிஸ்ட் என அடித்து விடலாம் என கனவு கண்டு காத்திருந்த செந்திலுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, செந்தில் மட்டுமல்லாமல் தீவிர பெரியாரிஸ்ட்களும் எழிலனுக்கு இடம் கிடைக்கவில்லையே என ஏமாற்றத்தில் இருக்கிறார்களாம்.