தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பு ஆபரேஷன் மேற்கொள்ள அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார் இந்த நிலையில் நேற்று இரவு கடந்த ஐந்து ஆண்டுகளில் கொலை குற்றங்களில் ஈடுபட்டவர்களில் வீடுகளில் தமிழக காவல்துறை மூலம் சோதனை நடத்தப்பட்டது.
சென்னை புளியந்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரவுடிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்ட நிலையில் அவர்களிடமிருந்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தமிழ்நாடு முழுவதும் குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களை கைது செய்வதில் போலிஸார் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 2512 ரவுடிகளை போலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐந்து துப்பாக்கிகள், 934 அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும்,1927 ரவுடிகள் நன்னடத்தை பிணை பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளனர். ஏற்கனவே கொலை உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 733 பேர் சிறையில் உள்ளனர்.
இதையடுத்து, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் ரவுடிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும். இதில் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என டி.ஜி.பி சைலேந்திரபாபு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியினரை குறிவைத்து தமிழக காவல்துறை செயல்படுவதாக விசிக கட்சியை சேர்ந்த வன்னியரசு வேதனை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- ரவுடிகள் தேடுதல் பெயரில் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தலித்விரோதப்போக்கை காவல்துறை கையாண்டு வருகிறது.
#விடுதலைச்சிறுத்தைகள் மற்றும் #ஆதிதிராவிடர்களை குறிவைத்து விசாரணை எனும் பெயரில் கைதுசெய்வது கண்டனத்துக்குரியது.போலீசா?சாதிவெறியர்களா? என தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் திமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியை காட்டிலும் விசிகவினர் பழிவாங்க படுவதாகவும், கொடி கம்பம் கூட வைக்கமுடியவில்லை என இரண்டு நாட்களுக்கு முன்னர் கடும் பஞ்சாயத்து கிளம்பியது அதோடு உள்ளாட்சி தேர்தலிலும் உரிய இடம் வழங்கவில்லை என திருமாவளவன் குற்றம் சுமத்திய நிலையில் தற்போது விசிகவினரை குறிவைத்து தமிழக காவல்துறை நடவடிக்கையில் ஈடுபடுவதாக விசிக நிர்வாகி கூறியுள்ள நிலையில் விரைவில் திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.