தமிழக அரசியல் நிலைப்பாட்டில் ஒரு விதமான பரபரப்பு நிலவ காரணமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன்னுடைய முகநூல் பக்கத்தில் தமிழக பெண்மணிகள் கலந்துக்கொள்ளும் ஒரு போட்டி குறித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அது குறித்து முழு விவரம் இதோ: பண்புக்குரிய தாய்த் தமிழ்நாட்டின் பந்தங்களே... அன்புக்குரிய தாமரைக் குடும்பத்தின் சொந்தங்களே..... அனைவருக்கும் வணக்கம்.
உங்களுக்கு கடிதம் எழுதும் போது, ஒரு சில நாட்கள் என்ன எழுதலாம்னு நான் யோசித்ததுண்டு. ஆனால் சில சமயம் எதை எழுதுவது எதை விடுவது என்று திணறுவதும் உண்டு. சுதந்திரத்தின் சுந்தரத் திருவிழா(ஆசாத் கா அம்ரித் மகோத்சவ்) என்ற இந்த பெரும் கொண்டாட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார் என்று நேற்று சொல்லியிருந்தேன் அதற்கென்று ஒரு தனி இணையதளம் இருக்கிறது. கண்டிப்பாகப் போய் பாருங்க.
https://amritmahotsav.nic.in/rangoli-making-competition.htm, அடுத்து வரவிருக்கும் இந்தியாவின் சுதந்திர தினத்திற்கான கொண்டாட்டங்கள் 75 வாரங்கள் ஆசாதிகா அமிர்த மகோத்சவ் என்ற பெயரில் கோலாகல மாக நடைபெற உள்ளன. அதன் தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகள் பல போட்டிகள் நடைபெற இருக்கிறது இணையத்தில் சென்று பாருங்கள்.
மத்திய அரசின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், போட்டிகளில், நம் தமிழ் மாநிலப் பெண்கள் மிகச்சுலபமாக பங்கு பெறும் வகையில் ஒரு கோலப் போட்டி உள்ளது. அப்போட்டியில் நாட்டிலேயே முதலாவதாக வந்தால் ஆறு லட்சம் ரூபாய், ஒவ்வொரு மாநிலத்திலும் முதலாவதாக வருபவருக்கு ஒரு லட்சம் ரூபாய், ஒவ்வொரு மாவட்டத்தில் முதலாவதாக வந்தால் பத்தாயிரம் ரூபாய்.
அதிலும் நாட்டின் மிக முக்கியமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு, பிரதமரின் உரையில் குறிப்பிடப்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நல்ல வாய்ப்பை நழுவ விடலாமா? வரும் 15ஆம் தேதிக்குள் போட்டிக்குப் பதிய வேண்டும். செய்வீர்களா? நம் மாநில மகிளா மோர்ச்சா, இதைக் கையில் எடுத்து பெண்களிடம் இந்தப்போட்டியைக் கொண்டு சேர்க்க வேண்டும். பலரும் பங்கு பெற்றால் தானே நம் மாநிலத்திற்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆகவே இதை மகளிர் அணியினர் இதை முன்னெடுக்கவும்.
அடுத்ததாக ஒரு மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்ய நினைக்கிறேன். நேற்றைய ஒரேநாடு ஏட்டில் இதனை செய்தி யாக வெளியிட்டிருந்தாலும், என்மகிழ்ச்சியை பகிரவும், சிறுபான்மைச் சகோதரர்களுக்கு நன்றிகள் சொல்லவும், அவர்களுக்கு தோள் கொடுக்கும் தோழனாக உடனிருப்பேன் என்று உரைக்கவும் இப்பதிவு.
புத்தாண்டில் எனக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக ஒரு சிறப்பான நிகழ்வு, ஜனவரி இரண்டாம் தேதி மாலை 5.00மணிக்கு கன்னியாகுமரி வடசேரியில் பாரதிய ஜனதா கட்சியில் சிறுபான்மையினர் இணையும் விழா. பாரதிய ஜனதா கட்சியில் அன்புச்சகோதரர், சகாயம் அவர்கள் தலைமையில் 2000க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் இணைப்பு விழாவில் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சி முத்தாய்ப்பானது. முக்கியமானது.
கட்சியில் இணந்தவர்கள் எவரும் அழைத்து வரப்பட்டவர்களாக இல்லாது, உணர்வு பூர்வமாக நம் பாரதப் பிரதமர் தலைமையை ஏற்று மாற்று மதத்தினர் வந்திருப்பதை மிகவும் பெருமைக்குரிய செயலாக நான் நினைக்கிறேன். மதத்தின் பெயரால் பிரிவினை செய்து அரசியல் ஆதாயம் தேடும் கட்சிகளை அடையாளம் கண்டு, தேசம் காக்க தேடி வந்திருக்கும் அருமை சிறுபான்மைச் சொந்தங்களை சகோதர பாசத்துடன் நான் மனதார வரவேற்றேன்.
சிறுபான்மை பிரிவு, தேசிய செயலாளர், திரு.வேலூர் இப்ராஹிம், அவர்கள், மாநில துணைத் தலைவர் திரு.நயினார் நாகேந்திரன் MLA . அவர்கள், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. M.R. காந்தி, அவர்கள், மாவட்ட தலைவர் திரு.தர்மராஜ் அவர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்கள் போற்றும் மரியாதைக்குரிய நம் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் சீரிய தலைமை ஏற்று நாஞ்சில் மண்ணின் மைந்தர்கள், ஆயிரக்கணக்கான கிருத்துவ சமுதாய மக்கள் நம் பாஜகவில் இணைகிறார்கள். திரு சகாயம் அவர்கள் சீரிய முயற்சியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிருத்துவ மீனவ சமுதாயச் சொந்தங்கள், மதவாதம் பார்க்காத நம் பாஜகாவில் இணைய வந்திருப்பது ஒரு புதிய எழுச்சியின் தொடக்கம்.
இது இனி மேலும் தொடரட்டும். தாமரை பொலிவுடன் மலரட்டும் நன்றி வணக்கம் அன்புச் சகோதரன் உங்க ‘‘அண்ணா’’இவ்வாறு அண்ணாமலை அவர்கள் பதிவிட்டு உள்ளார். மத்திய அரசு மேற்கொண்டு உள்ள இந்த அற்புதமான முயற்சி தாய்மார்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.