இசைஞானி இளையராஜா பிரதமர் மோடி மற்றும் அவரது ஆட்சியை பாராட்டி தனது தனிப்பட்ட கருத்தினை புத்தகம் ஒன்றில் முன்னுரையாக எழுதிய நிலையில் ஏதோ இளையராஜா கொலை குற்றம் செய்தது போன்று பல்வேறு ஊடகங்களும் சில அரசியல் இயக்கங்களும், திரை துறையை சேர்ந்த சிலரும் கடுமையாக விமர்சனம் செய்துவரும் சூழலில் இயக்குனர் தங்கர் பச்சன் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.
மேலும் ஊடகங்களையும் அரசியல்வாதிகளையும் அவர் கடுமையாக சாடி இருக்கிறார் அது பின்வருமாறு :- அதில், ‛‛இளையராஜா கூறிய கருத்து மட்டும் தான் இப்பொழுது தமிழ்நாட்டு மக்களின் முதன்மையான சிக்கலா? கேள்வி எழுப்பவும் போராடவும் வாதங்கள் புரிவதற்கும் வேறு எதுவுமே இங்கே இல்லையா? மக்களின் கவனத்தை திசை திருப்பும் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் இதேபோன்று.,
மக்களின் அன்றாட வாழ்க்கையில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கடும் விலைவாசி உயர்வு, எரிபொருள் விலை உயர்வு ,தொடர் மின்வெட்டு, விவசாயிகளின் தீராத சிக்கல்கள், வரி உயர்வு, நீட் போன்ற தீராத முதன்மை சிக்கல்கள் குறித்து இதேபோல் இரவும் பகலும் பேசி தீர்வு காண்பீர்களா?" என்றொரு கேள்வியை தங்கர்பச்சான் எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் சொத்து வரி பன்மடங்கு உயர்ந்துள்ளது, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்துதான் என குறிப்பிட்டார் தற்போது அதுவும் இல்லை, இந்த சூழலில் இது குறித்து விவாதம் நடத்தவேண்டிய ஊடகங்கள் மக்களின் பிரச்சனையை திசை திருப்பி வருவதாக பல்வேறு கண்டனங்கள் பொது மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
இளையராஜா என்ற தனி மனிதன் அவரது கருத்தை தெரிவித்த சூழலில் பல்வேறு தரப்பினரும் இளையராஜா கருத்தை ஆதரித்தும் எதிர்த்தும் விவாதித்து வருவது தொடர்ந்து வரும் சூழலில் இதற்கு முன்னர் தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த், யாரும் இளையராஜாவை விமர்சனம் செய்து காயப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.