முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன் அவர் அண்ணாமலை குறித்தும், தற்போது அண்ணாமலையின் செயல்பாடு குறித்தும் மேலும் ஆளும் கட்சியான திமுக செயல்பாடு குறித்தும் கருத்து தெரிவித்து இருக்கிறார் அவை பின்வருமாறு :-
அண்ணா மலை, அண்ணாந்து பார்க்கின்ற மலை, அதைப் போலவே இன்று இந்த அண்ணா மலையையும் உயர்ந்து நிற்கிறார். தமிழகத்தில் எதிர்க்கட்சி யார்? என்று தெரியாத அளவிற்கு தனது தைரியமான பேச்சால் வளர்ந்தும், தான் சார்ந்த கட்சியை வளர்த்தும் வருகிறார். அண்ணாமலை அவர்களின் பேச்சு தொண்டர்களிடம் புதிய எழுச்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் துளி அளவும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.
தமிழகத்தில் அரசியலுக்கு வரும் புதியவர்களை பிரதமரின் ஆளுமையும், அண்ணாமலையின் தன்னம்பிக்கையும் ஈர்க்கும் என்பதே சத்தியம். காதலித்த பணியை கைவிட்டு, மக்கள் பணியை காதலிக்கத் தொடங்கியிருக்கும் திரு அண்ணா மலைக்கு எனது பாராட்டுக்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் தலைமையிடம் இன்று எதிர்பார்ப்பது புரட்சித்தலைவரின் சாதுர்யத்தையும், புரட்சித்தலைவியின் வீரத்தையும் தான். எதிர்க்கட்சி எப்படி இருக்க வேண்டுமென்றால் தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் ஆளும் கட்சிக்கும் மக்கள் பணியில் ஆசைவரும், நல்லதை செய்வதில் கவனம் வரும், போட்டிபோட்டு செய்ய உற்சாகம் பிறக்கும்.
இன்று எதிர்க்கட்சியில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் சென்னையில் மழை வெள்ளத்தில் சென்று உதவிகளை செய்து வருகிறார்கள். மகிழ்ச்சி. தலைவர்களின் வழியில் நிர்வாகிகளும் செயல்பட வேண்டுமல்லவா? ஆனால் வருகின்ற தகவல் மனக்கசப்பைத் தருகிறது. திமுக நிர்வாகிகளிடம் இருக்கும் உற்சாகம் அதிமுக நிர்வாகிகளிடம் இல்லை என்றே சொல்கிறார்கள். ஆளும்கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் வந்து உணவு, உடை மற்றும் தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். எங்கள் வட்டத்தில் உங்கள் ஆட்களை காணோமே என்று அடுத்தடுத்த கேள்விகளை தெரிந்தவர்கள் கேட்கும் போது பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த கால கட்டத்தில் ஆற்றும் மக்கள் பணி கழகத்திற்கு மிகப் பெரிய எதிர்காலத்தை உருவாக்கும்.
மழை வெள்ளத்திலும், பெருந்தொற்று காலத்திலும், மக்கள் கேள்விகளுக்கு அஞ்சாமல் வயதையும் பாராமல் சென்னையைச் சுற்றி வந்த முதலமைச்சரை பாராட்டுவதே அறம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் மனதை நாம் கவர வேண்டாமா? மாநகராட்சி தேர்தல்கள் விரைவில் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கழகத்தின் சார்பில் தேர்தலில் நின்று வெற்றி பெற ஆசைப்படுபவர்கள் அசத்த வேண்டாமா? நீங்கள் செய்யும் பணியைப் பார்த்து ஆளும் கட்சி திகைக்க வேண்டாமா?
உங்கள் செயல்பட்டைப் பார்த்து சரியான ஆள் இவர்தான் என்று மக்கள் நம்ப வேண்டாமா? ஆர்வமான தொண்டர்கள் உங்கள் பின்னால் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை செயல்பட வைப்பது உங்களின் அன்பும், சொல்லும் தான். நீங்கள் காட்டும் திசையில் பயணிக்க காத்திருக்கும் அவர்களுக்கு சரியான பாதையை நீங்கள் தான் காட்ட வேண்டும்.
தொண்டர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது பயன்படுத்த நிர்வாகிகளுக்குத்தான் மனமில்லை என்பதும் புரிகிறது. அண்ணா மலை வளர்கிறது என்றால் யாரோ தேய்ந்து கொண்டிருக்கிறார்கள்!தொண்டர்களே! உற்சாகத்தை மட்டும் இழந்துவிடாதீர்கள், தன்னம்பிக்கைதான் பலம் என்பதையும் மறந்துவிடாதீர்கள். யாரையும் நம்பி நீங்கள் இல்லை.
உங்களை நம்பித்தான் மற்றவர்கள்! எனவே, உடன்பிறப்பே! கட்சியை வளர்க்க ஆசை கொள்ளுங்கள். புதியவர்களை கழகத்தில் சேர்க்க வேகம் கொள்ளுங்கள். ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பணி செய்யும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்று முழங்கிய இதயதெய்வங்களின் வார்த்தைகளுக்கு புகழ் சேருங்கள்.
பேரறிஞர் காட்டிய பாதையில், புரட்சித்தலைவரின் அடிச்சுவட்டில், அம்மாவின் வீரத்தோடு சிங்கமென மக்கள் பணியாற்றப் புறப்படுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார் பூங்குன்றன். அண்ணாமலை அண்ணாந்து பார்க்கின்ற மலையாக உருவெடுத்து விட்டார் என்பது பூங்குன்றன் சான்றின் மூலம் உறுதியாகிவிட்டது.