பிள்ளை பிறந்த தினம் பிறந்தநாளா இல்லை பிள்ளைக்கு பெயர் வைத்த நாள் பிறந்தநாளா என அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை நோக்கி கேள்வி எழுப்பிய நிலையில் தற்போது முதல்வரின் அறிவிப்பில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து அண்ணாமலை தெரிவித்ததும் அதன் பிறகு முதல்வர் முடிவு என்ன என்றும் பார்க்கலாம். அண்ணாமலை தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
1953-ல் பிறந்த தமிழகத்திற்கு, 1967ல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்டது.தமிழ்நாட்டின் பிறந்தநாள் தற்போது சர்ச்சையாக்கப் பட்டுள்ளது. வரலாற்றுப்படி பார்த்தால் தமிழ்நாடு உருவாக்கப்படவே இல்லை. தென்னக மாநிலங்கள் ஒன்றாக மதராஸ் ராஜதானியாக தொடர்ந்தபோது, ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்தது. 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, அவை மொழிவாரியாக பிரிக்கப்பட்டபோது சென்னை மாகாணம் பிறந்தது.
நம்மிடையே இருந்து பிரிந்து சென்ற ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை அன்றிலிருந்து தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நவம்பர் 1-ந் தேதியை ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் இதுவரை இம்மாதிரி மாநிலத்தின் அமைப்பு தினம், வரையறுக்கப்பட்ட தினம் கொண்டாடப்படவில்லை.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதியைத் தமிழக மாநிலத்தின் அமைப்பு தினமாகக் கொண்டாடினார். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூட வாழ்த்து தெரிவித்தார்.ஆகவே தமிழகம் தனியாக வரையறுக்கப்பட்ட நாள் (01.11.1956.) 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி, என்பது எல்லோரும் அறிந்த உண்மை.
அப்படியாக வரையறுக்கப்பட்ட நாளை அனைத்து மாநிலங்களும் நவம்பர் ஒன்றாம் தேதியைக் கொண்டாடும் போது பெயர்மாற்றம் செய்த நாளை பிறந்தநாளாகக் கொண்டாடு வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது, வரலாற்றுப் பிழை.வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்' என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுகிறது.
மொழிவாரி மாநிலப் போராட்டத்தில் தெலுங்கு மக்கள் ‘விசால ஆந்திரா’ என்றும், கன்னட மக்கள் ‘அகண்ட கர்நாடகம்’ என்றும், மலையாளிகள் ‘ஐக்கிய கேரளா’ என்றும், மராட்டிய மக்கள் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்றும், குஜராத்தியினர் ‘மகா குஜராத்’ என்றும் பிரிக்கப் பட வேண்டும் என்று கேட்டுப் போராடினர்.
போராட்டங்களுக்குப் பணிந்த அன்றைய மத்திய அரசு, மொழிவாரி மாநில அறிவிப்பு 1956 நவம்பர் 1-ந்தேதி அன்று வெளியிட்டு அமல்படுத்தியது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உருவாயின. மற்ற மாநிலத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் விரும்பிய பெயரே அந்தந்த மாநிலங்களுக்கு சூட்டப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டிற்கு மட்டும் ‘மதராஸ்’ என்ற பெயரே மாற்றமின்றி தொடரும் என்றானது.
ஆனால், தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையும், போராட்டங்களும் தொடர்ந்து தமிழகத்தில் நடந்தது. இந்த வகையில் தமிழ்நாடு பெயர் கோரிக்கைக்காக விருதுநகரில் சங்கரலிங்கம் என்ற 76 வயது போராளி 78 நாட்கள் தொடர்ந்து மனஉறுதியுடன் உண்ணாவிரதமிருந்து தன் இன்னுயிரை நீத்தார். அவரது தியாகம் வீண்போகவில்லை.
அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். தமிழகம் உண்மையில் உருவான நாளைக் கொண்டாடாமல், பெயர் வைத்த நாளைக் கொண்டாடும் பேதைமையை, திமுகவைத் தவிர அவர்களின் கூட்டணியில் உள்ள கட்சிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் எதிர்த்துள்ளன.
பிள்ளையின் பிறந்தநாளைக் கொண்டாடுவோமா, அல்லது பிள்ளைக்குப் பெயர் வைத்தநாளைப் பிறந்த நாளாகக் கொண்டாடுவோமா? பொது அறிவுள்ள எவரும் புரிந்து கொள்ளும் இந்த சின்ன விஷயத்தை, தவறாகச் செய்கிறார் முதல்வர். காரணம் இப்படிச் செய்யும்படி அறிஞர்கள் சொன்னார்கள் என்று முதல்வர் சொல்வது நகைப்புக்குரியது.தமிழ்பேசும் மக்களுக்கான மாநிலம் உருவாகவும், தமிழக எல்லைப் பகுதிகளை தமிழ்நாட்டோடு சேர்ப்பதற்கும், மிகக்கடுமையான போராட்டங்கள் நடத்திய மார்ஷல் நேசமணி, கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை, தாணுலிங்க நாடார், காந்திராமன், குஞ்சன் நாடார், நத்தானியேல் போன்றோர் தென்னகத்தில் நடத்திய போராட்டத்தில், துப்பாக்கிச் சூடு நடந்தது.
இதில் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிற்குச் செல்லாமல் தடுக்கப்பட்டது. இதே போல வடக்கில் தமிழக எல்லைகளை மீட்க ம.பொ.சி. தலைமையில் திருமலைப்பிள்ளை, கே.விநாயகம், மங்கலக்கிழார், சித்தூர் அரங்கநாதன், ந.சுப்பிரமணியன் போன்ற தளபதிகள் போராடி சிறை சென்றனர். இந்த போராட்டத்தில் கோவிந்த சாமி, பழனிமாணிக்கம் என்ற இரு தமிழர்கள் சிறையில் உயிர் நீத்தனர். இந்த போராட்டத்தால் 290 கிராமங்களை உள்ளடக்கிய திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்கு கிடைத்தன.
முதல்வரும், அவரின் அறிஞர்களும் வேண்டுமானால், அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில், அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது 1967-ம் ஆண்டு ஜூலை 18-ல் மதராஸ் மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய நாளை பெயர் மாற்றம் செய்த நாளையும் கொண்டாடட்டும். ஆனால் பிறந்ததினம் என அறிவிக்க வேண்டாம்.
1952-–1953 ஆம் ஆண்டுகளில் இவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இப்போதைய தமிழகம் உருவான நாள் 1953 நவம்பர் ஒன்றாம் தேதி. ஆகவே இவர்களின் உயிர்த் தியாகங்களும், உன்னதப் போராட்டங்களும் நவம்பர் ஒன்றாம் தேதி தமிழக அமைப்பு தினமாக நினைவு கூரப்பட வேண்டும் என அண்ணாமலை குறிப்பிட்டு இருந்தார்.
இந்த சூழலில் வழக்கமாக ஸ்டாலின் முடிவை இம்மி பிசுகாமல் ஆதரிக்கும் திருமாவளவன் கூட தமிழ்நாடுநாள் குறித்து அனைவரையும் ஆலோசித்து ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார், சுருக்கமாக சொன்னால் திமுக கூட்டணி கட்சியினர் கூட ஸ்டாலினின் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கவில்லை.எனவே இது குறித்து ஸ்டாலின் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய இருப்பதாகவும், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
பிள்ளை பிறந்த தினம் பிறந்தநாளா அல்லது பெயர் வைத்த தினம் பிறந்தநாளா என்ற சின்ன விஷயம் கூட முதல்வருக்கு தெரியாதது நகைப்புக்குரிய விஷயம் என அண்ணாமலை குறிப்பிட்டு இருப்பது ஆளும் கட்சியான திமுகவினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.