Tamilnadu

உங்களை யாரு 10 வது நிமிடத்தில் அவ்வாறு பேச சொன்னது பிரதமருடனான ஸ்டாலின் சந்திப்பு வெளுத்து எடுத்த கிருஷ்ணசாமி..

Krishnasamy and mk stalin
Krishnasamy and mk stalin

பிரதமர் மோடி உடனான தமிழக முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பு தமிழக மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டுவரும் வகையில் அமையவில்லை என்றும் மாறாக டெல்லியில் சென்று ஒன்றிய அரசு என பேசி மத்திய அரசு உடனான மோதல் போக்கயே ஸ்டாலின் கடை பிடித்து இருக்கிறார் என கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடபட்டதாவது :-ஸ்டாலின் டெல்லி பயணம் சாதனை ஆனதா? வெறும் சம்பிரதாயத்தில் முடிந்ததா?மனநிறைவுக்குள் மறைந்து போன ஸ்டாலினின் திருப்தி இலைகள் அமைதியை விரும்பலாம்! காற்று சும்மாயிருக்குமா!! மே மாதம் 07 ஆம் தேதி தமிழக முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்ட திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 40 தினங்கள் கழித்து ஜூன் மாதம் 17ஆம் தேதி டெல்லியில் பாரத பிரதமர் மோடி அவர்களைச் சந்தித்தார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த அரசு விழா ஒன்றுக்கு வருகை புரிந்த மோடி அவர்களுக்கு எதிராக திமுகவும், அதன் தோழமை இயக்கங்களும் கருப்பு கொடிகளாலும், கருப்பு பலூன்களாலும் சென்னையின் மண்ணையும், விண்ணையும் நிரப்பி போராட்டம் செய்தனர்.

அதையும் தாண்டி மோடி அவர்களின் நிகழ்ச்சி நடைபெற்ற ஐஐடி மாணவர் வளாகத்திலும் அத்துமீறி நுழைந்து கருப்புக் கொடி காட்டிய சம்பவங்களை எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. எந்த மோடிக்கு எதிராக ”திரும்பிப் போ” என்று கோஷம் எழுப்பினார்களோ? அந்த மோடியை தேடி அவருடைய இல்லம் சென்று சந்திக்க வேண்டிய காலத்தின் கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் சென்னையில் மோடிக்கு எதிராக நடந்தது போல, டெல்லியில் ஸ்டாலினுக்கு எதிராக எவரும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அது டெல்லி அரசியல் நாகரீகம்!

மாநிலங்களில் புதிதாக முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டவர்கள் பாரத தேசத்தின் பிரதமரைச் சந்திப்பது வெறும் சம்பிரதாயத்திற்கானது மட்டுமல்ல, தங்களது சாதுரியத்தால் அந்தந்த மாநிலத்திற்கு வரவேண்டிய திட்டங்களை வலியுறுத்தி சாதிப்பதே அதில் உள்ளார்ந்த அம்சம். இதுபோன்ற ஒரு முக்கியமான சந்திப்பிற்கு முன்பாக கள அளவில் “Home Work” என்று சொல்லக்கூடிய முன்னோட்ட பணிகளை செவ்வனே செய்து முடிக்க வேண்டும்.

“Go Back Modi” என சமூக வலைதளங்களில் டிரென்டிங் செய்ததும், விமான நிலையத்தைத் தாண்டி பதினைந்து கி.மீட்டருக்கு அப்பால் உள்ள கிண்டி ஐஐடி வளாகத்திற்குள்ளும் கருப்புக்கொடி காட்ட முயற்சி செய்ததும் மோடியின் நெஞ்சில் நீங்காத வடுவாகி இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி ஒரு சுமூகமான உறவுக்கான பாதையை ஸ்டாலின் அவர்களால் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் அதுபோன்ற ஒரு ராஜ தந்திர நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.  

ஏனெனில் பிரதமருடனான சந்திப்பு என்பது வெறும் சம்பிரதாயத்தையும் தாண்டி தமிழகத்திற்குக் கேட்டுப் பெற வேண்டிய பல கோரிக்கைகள் அவர் தலைக்குமேல் இருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறக்க ஒரு இதமான சூழலை உருவாக்கி அதன் பின் இந்த சந்திப்பு நடைபெற்றிருந்தால் டெல்லி சென்று சென்னை திரும்புவதற்கு முன்பாகவே சில கோரிக்கைகள் நிறைவேறியிருக்கக் கூடும்.

கடந்த 17 ஆம் தேதி  பிரதமர் – ஸ்டாலின் நேரடி சந்திப்பின் போது 25க்கும் மேற்பட்ட  கோரிக்கைகள் அடங்கிய ஒரு புத்தக வடிவிலான மனு அவரிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலேயே தமிழகம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.  

சேலம் மற்றும் தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டிய விஷயம் என்ன தலை மேல் இருக்கக்கூடிய பிரச்சனைகளா? அதையெல்லாம் ஏன் தற்போதைய உடனடி கோரிக்கைகளில் சேர்க்க வேண்டும்? கரோனா இரண்டாவது அலையில் தொழில், வர்த்தகம் மற்றும் அனைத்து சேவைகளும் நாற்பது நாட்களுக்கு மேலாக முற்றாக முடங்கிப் போயுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் முதல் அனைத்து தரப்பினருமே ஊரடங்கால் சிக்கித் திணறுகின்றனர்.  தமிழக மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு அரசும் மிகப்பெரிய அளவிற்கு நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கிறது.

எனவே, இப்பொழுது தமிழக அரசை நிதி நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கான போதிய நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கான கோரிக்கை தானே முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும்? ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூபாய் 1000, அதேபோல, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபாய்1000-லிருந்து 1500, பெட்ரோல் டீசலுக்கு தலா ரூ 5 குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி போன்ற நிதி ஆதாரத்தோடு சமந்தபட்ட முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளைக் கூட தமிழ்நாடு அரசு நிறைவேற்ற எந்த முனைப்பும் காட்டவில்லையே?

இந்நிலையில் 12,500 கோடி நிலுவையில் உள்ளது என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் வீராவேசமாகப் பேசினால் மட்டும் போதுமா? பாரத பிரதமருடனான சந்திப்பில் ஜிஎஸ்டி நிலுவை, 13 மற்றும் 14-வது நிதி ஆணைய பங்கீடுகள் போன்ற மிக முக்கிய நிதி அம்சங்கள் அல்லவா அக்கோரிக்கை மனுவில் முக்கிய இடம் பெற்றிருக்க வெண்டும்?

தமிழக நிதி நிலைமையை எடுத்துச் சொல்லி, குறைந்தபட்சம் அந்த நிலுவைத் தொகையை இரண்டு, மூன்று தவணைகளாகப் பெறுவதற்கு உண்டான உத்தரவாதத்தைப் பிரதமரிடத்திலே அப்போதே பெற்று அவர் டெல்லியிலிருந்து சென்னை வந்து சேருவதற்கு முன்பாக ரூபாய் 4000 அல்லது 5000 கோடி பெறப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய சாதனையாக இருந்திருக்கும். ஆனால் அதுபோன்ற முக்கியமான வாய்ப்பை ஸ்டாலின் நழுவவிட்டு விட்டார். சாதனை நிகழ்த்துவதைக் காட்டிலும் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதிலும், வெறுப்பு அரசியல் செய்வதையுமே முக்கியமானதாகக் கருதியதன் விளைவுதான் இதுவோ?

சாதனைகளை நிகழ்த்த அதற்குண்டான வலுவான முன்னேற்பாடுகள் “Spade Work” முறையாகச் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் மாறாக ”எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல” -  ”பச்சை புண்ணில் உப்பைத் தடவுவது போல” மே 07-ஆம் தேதி பதவியேற்ற நாள் முதல் டெல்லி சென்று திரும்புவது வரை மத்திய அரசை ’ஒன்றிய அரசு’ என இழிவுபடுத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். திமுக பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு;

தமிழக அரசு மத்திய அரசை எதிர்ப்பது என்பது வேறு. மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு வழியில் மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை மட்டுமே கையில் எடுப்பது தமிழகத்துக்கு நிகழ்காலத்திலும் பாதிப்பை உண்டாக்குகிறது; எதிர்காலத்திலும் பாதிப்பை உண்டாக்கும் என்ற அச்சத்தையே உருவாக்குகிறது.

மத்திய அரசின் அதிகார வரம்பு என்ன? மாநில அரசின் அதிகார வரம்பு என்ன? என்பது கூட தெரியாமல் ஒரு மாநிலக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து விட்டு, இப்போது அத்தனையையும் நிறைவேற்ற வேண்டும் என பட்டியலிட்டுக் கேட்டால், அதை நிறைவேற்றுவது எப்படி மத்திய அரசுக்கு சாத்தியமாகும்? ஒரு அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த அறிக்கை என்பது வேறு; தேர்தல் வாக்குறுதி என்பது வேறு; நடைமுறை பிரச்சினை என்பது வேறு. புதிய கல்வித் திட்டம் (NEP), நீட் தேர்வுகள் (NEET), மூன்று வேளாண் திட்டங்கள், மின் சட்டம் போன்றவையெல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட சட்டங்கள்.

இந்தியா முழுமைக்குமான சட்டங்களை ஒரு மாநிலக் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அப்படியே ஏற்றுக்கொண்டு மத்திய அரசு ரத்து செய்ய முடியுமா? 7 பேர் விடுதலை, செங்கல்பட்டு தடுப்பூசி ஆய்வகம் போன்ற அம்சங்கள் குறித்து என்ன உத்திரவாதம் அளிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொத்தத்தில் நடந்த சந்திப்பு 20 நிமிடங்கள். வெளியே வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமருடனான சந்திப்பு ’மன நிறைவையும், மகிழ்ச்சியையும்’ தந்தது என்று கூறினார்.

பொதுவாக இது அரசியல் தளத்தில் பயன்படுத்தப்படும் Diplomatic வார்த்தை அல்ல, பொதுவாக ’திருப்தி’ என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்படும். அதாவது தனிப்பட்ட கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே ’மகிழ்ச்சி’ என பயன்படுத்தப்படும். ஏன் ’திருப்தி’ என்ற வார்த்தையைத் தவிர்த்து, மனநிறைவு என்ற வார்த்தை பயன்படுத்தினார்? என்பது புதிராக உள்ளது.

மோடி அவர்களுடனான சந்திப்பு மனநிறைவாக இருந்தது, எப்போது வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம் என பிரதமர் கூறியதாக ஸ்டாலின் அகமகிழ்ச்சி கொள்கிறார். மோடி அப்படிச் சொல்லியிருந்தால் அது அவரின் பெருந்தன்மையும், திறந்த மனப்பான்மையும் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழ் மாநிலத்தைப் பாகுபாடில்லாமல் தங்களுடன் அணைத்துச் செல்ல மோடி விரும்புகிறார் என்பதே இதன் மூலம் வெளிப்படுகிறது.

ஆனால் ஸ்டாலினோ அடுத்த பத்தாவது நிமிடத்தில் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மீண்டும் ’ஒன்றிய புராணம்’ பாடி தனது வெறுப்பு அரசியலையே வெளிப்படுத்தி இருக்கிறார். அரசியல் கலக்காமல் மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாகச் செல்லுமா? அல்லது பிணக்குடனே தொடருமா? என்பதே கேள்வி.

இலைகள் அமைதியை விரும்பினாலும், காற்று சும்மா இருக்குமா?மிகவும் எதிர்பார்த்த மோடி - ஸ்டாலின் சந்திப்பு வெறும் சம்பிரதாயமாகவே முடிந்து விட்டது; சாதிக்க வாய்ப்பிருந்தும், ஸ்டாலின் சாதிக்க தவறிவிட்டதால் ஏமாந்து போனது தமிழ் மக்களே!ஸ்டாலின் அவர்களின் மன மகிழ்ச்சி - மன நிறைவுக்கு அவரின் வேறு எந்த கோரிக்கைகளை பிரதமர் மோடி அவர்கள் நிறைவேற்றித் தந்தார்? என்பதற்கு எதிர்வரும் காலமே பதில் சொல்லும்! என குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி