Cinema

"திட்டமிட்ட செயல் " உடனே நிறுத்துங்கள் இயக்குனர் கவுதமன் பரபரப்பு கடிதம்

jaibhim surya and gowthaman
jaibhim surya and gowthaman

தமிழர் குடிகளுக்குள் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்திய "ஜெய்பீம்" திரைபட கலைஞர்களுக்கு அமெரிக்காவின் "பெட்னா" தமிழ் சங்கம் பாராட்டு விழா நடத்துவதை  நிறுத்த வேண்டும்  என இயக்குனர் கௌதமன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் அதில்,.


பெரும் மரியாதைக்குரிய தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ,வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை (பெட்னா) நிர்வாகிகளுக்குவணக்கம், ஜெய்பீம் தமிழ்த் திரைப்பட வெற்றிக்காக்க அதில் பணாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குனருக்கும், நடிகர்களுக்கும் தங்கள் அமைப்பின் சார்பாக பாராட்டு விழா நடத்துவதாக செய்தி அறிந்தோம்.

இப்படைப்புக் குழுவினர் ஒரு உண்மைச் சம்பவத்தை அறத்தோடும் நேர்மையோடும் படைப்பு செய்திருந்தால் உங்களோடு சேர்ந்து தமிழர் குடிகளான நாங்களும் மகிழ்ந்து வாழ்த்தியிருப்போம். ஜெய்பீம் படக்குழுவினர் செய்ததெல்லாம் உண்மைக்கு மாறான விடயங்களை கோர்த்தெடுத்து குறிப்பாக தமிழர் குடியான குறவர் குடியினை, இருளர் குடியென மடைமாற்றியதிலிருந்து தமிழர் குடிகளுக்குள் திட்டமிட்டு "பகைப் பெருக்கி" கலவரத்தை உருவாக்கியவர்கள் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

 ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம் தமிழினத்தை தமிழர் நிலத்தை திட்டமிட்டு அபகரித்து, இம்மக்களின் ஆட்சி அதிகாரத்தை பறித்து ருசித்துக் கொண்டிருக்கும் தமிழ் மொழிக்கும், தமிழ் இனத்திற்கும் தொடர்பில்லாத ஒரு கூட்டம் இதன் பின்னணியில் இயக்கிக் கொண்டிருக்கிறது. அதில் ஒருவராகத்தான் இப்படைப்பின் இயக்குனரும் இருக்கிறார் என்பதை நீங்களும் ஆராய்ந்தறிந்து புரிந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

ஜெய் பீம் படைப்பாக்கத்தில் மிக நேர்த்தியான படைப்பு என்பதில் எங்களுக்கும் எள்ளவும் மாற்றுக்கருத்தில்லை. கருத்து மற்றும் படைப்புச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு என்பதிலும் எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. சுதந்திரம் இருக்கிறது என்பதற்காகவே சதிகார கூட்டங்களால் ஏற்கனவே சுக்குநூறாக நொறுக்கப்பட்டு கிடக்கும் தமிழர் குடிகளுக்குள் வன்மத்தை பாய்ச்சுவதென்பது எத்தகைய அறம்? ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்கிறது நீதியின் கூற்று.

அப்படியிருக்க பாதிக்கப்பட்ட இப்படைப்பின் நாயகனான இராசாகண்ணுக்கு, நீதியரசர் சந்துரு மூலமாக நீதியினை உரக்க பேசிவிட்டு, இராசாகண்ணுக்கு ஒரு சரியான நீதி கிடைத்த பிறகுதான் நான் திருமணமே செய்து கொள்வேன் என்று தன் உயிரையே துச்சமாக மதித்து போராடிய கோவிந்தனின் குடியை அவமானப்படுத்துவதென்பது எத்தகைய நேர்மை?

தீச்சட்டியினை காட்டி திரிக்கப்பட்ட அந்தோணிசாமி மட்டுமல்ல அந்த ஊரே ராசாகண்ணுவையும் அவரது மனைவியையும் ஈவு இரக்கமின்றி நடத்துகிறது என்பதனை காட்சிப்படுத்தியிருப்பது கொடூரன் அந்தோணிசாமியை விட இவர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதனை அறிவு செறிந்த தமிழர்களான பெட்னா நிர்வாகிள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படத்தை தயாரித்து நடித்தவர் பட்டியல் சமூகம் அல்ல. இயக்கியவரும் பட்டியல் சமூகம் அல்ல, நீதியரசர் சந்துரு அவர்களும் பட்டியல் சமூகம் அல்ல.

ஆனால் இன்று கருத்தால் வன்மத்தை வளர்த்து ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டிருப்பவர்கள் பட்டியல் சமூகத்தினரும் வன்னிய சமூகத்தவர்களும் தான் என்பது எத்தகைய கொடுமை. எல்லாம் வெட்டவெளிச்சமாகி ஒரு மிகப்பெரிய கொந்தளிப்பான இந்நிலையிலும் கூட தீச்சட்டியோடு குருவின் பெயரும் அவரோடு சேர்த்து இன்னொரு காவல்துறை கொடியவனின் பெயராக கிருபாகரன் என்கிற பெயரும் சேர்க்கப்பட்டது உள்நோக்கம் கிடையாது என்று இப்படத்தின் இயக்குநர் பேசுவதென்பது, தமிழர் குடிகளை வேரோடு கருவறுக்கும் கூட்டத்தினால் மட்டும்தான் இதனை சாத்தியப்படுத்த முடியும் என்பதனை இப்பொழுதாவது ஃபெட்னா தமிழ் சங்க கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும்.

நடந்தது தவறுதான் இதோடு சரி செய்து கொள்கிறோம் என ஒரே ஒரு வருத்தத்தை தெரிவித்து விட்டு இம்மண்ணின் மக்களை அமைதிப்படுத்த இவர்கள் ஏன்  முன்வரவில்லை?  காரணம் இவர்கள் எம் இனத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத கூட்டம். வடக்கே வன்னியர்கள், பட்டியல் சமூகத்தினரையும் தெற்கே தேவர்கள், தேவேந்திர குல வேளாளர்களையும் காலம் காலமாக மோதவிட்டு மேலும் மேலும் தமிழ் மண்ணை அபகரித்து தமிழ் மக்களை அடிமைப்படுத்துவதில்தான் இருக்கிறது இவர்களின் ஆட்சியும் அதிகாரமும் வசதியும் வாழ்க்கையும்.

இந்த சதிகார கூட்டத்திற்கு தெரிந்தோ தெரியாமலோ நடிகர் சூர்யா "பலிகடா" ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறார். யாராக இருந்தாலும் தவறு செய்தவர்கள் தங்களை திருத்திக் கொள்ளவேண்டும்.பாதிக்கப் பட்டவர் இந்த நிலையிலும் வாய்மையோடு உண்மைய உரக்கக் கூறியுள்ளார், முதனை கிராமத்து மக்கள் அனைவரும் தாயுள்ளத்தோடு நீதியின்பார்ப்பட்டு சாதிபேதம் இன்றி தனக்கு உறுதுணையாக நின்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார் பார்வதி அம்மாள்.

அறத்தின் வழி நின்ற இந்த கிராமத்து தமிழர்களை சாதிய வன்மம் பிடித்த அரக்கர்களாக சித்தரிப்பதற்கும் ஒரு குரூரமான மன நிலை வேண்டும். அநீதி இழைத்துக் கொடூர கொலை புரிந்த அந்த அந்தோணிசாமியின் மனநிலையை விட மிக்க் கொடூரமான நிலை அது. இந்த விபரீத கற்பனையை காசு பார்க்கும் நோக்கிலும் , தமிழர்களுக்குள் பகை மூட்டும் நோக்கிலும் புனைவு செய்த இயக்குனரின் மன நிலை அத்தகைய கொடூரமானது.

தவறு செய்தவர்களை தட்டிக் கேட்கவும் ஒரு துணிவு வேண்டும் அதுதான் உண்மையான ஆளுமை, தமிழர் அறம். இதுவரை தனது தவறை சரி செய்து கொள்ளாத ஜெய்பீம் குழுவினருக்கும் அவர்களின் பின்னால் இயங்கும் சதிகார தமிழர் விரோத கூட்டங்களுக்கும் ஒருபோதும் பெட்னா தமிழ்ச்சங்கப் பேரவை துணை போக கூடாது என தமிழர் குடிகளின் சார்பாக உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழர்களுக்குள் பற்றி எரியும் இந்த பெருந்தீயை அணைக்கவும், அமைதிப்படுத்தவும் தாயுள்ளத்தோடு நீங்களும் கைகோர்க்க வேண்டுமாய் மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். கடந்த காலத்தில் தமிழர்களுக்குள் பகை மூட்டி ருசி கண்டவர்களின் வீபரீத எண்ணங்கள் இனியும் வெற்றி பெறாது. அறவழி நிற்கும் தமிழ்க் குடிகள் ஒருங்கிணைந்து அறிவாயுதம் ஏந்திவிட்டார்கள் என்பதற்கு தமிழ்க் குடிகளின் இந்த கூட்டுக் கடிதமே சான்று. உண்மைகளை உணர்ந்து பெட்னா அறத்தின் பக்கம் நிற்கும் என திடமாக தமிழர்கள் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார் கௌதமன்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் பின்னணி குறித்தும் முக்கிய தகவல் குறித்தும் மாறுப்பட்ட கோணத்தில் சிறப்பு தகவல்களை  அரசியல் குறித்து முழுமையான தகவல்களை TNNEWS24 DIGITAL,  YOUTUBE பக்கத்தில் பதிவு செய்கிறோம் மறக்காமல் SUBSCRIBE செய்து இணைந்து இருக்கவும்.