ஆந்திரா : சட்டமன்ற தேர்தல் ஒரு மாநிலத்தில் நடைபெறுகிறது எனில் அதற்கு ஒருவருடம் முன்னரே அதற்க்கான முஸ்தீபுகளில் அரசியல் கட்சிகள் இறங்குவது வழக்கம். ஆனால் பிதாமகர்கள் வாஜ்பாய் மற்றும் லால் கிருஷ்ண அத்வானி ஆகிய இரு மாபெரும் தலைவர்களால் வார்த்தெடுக்கப்பட்ட பிஜேபி தனது அரசியல் நகர்வுகளை யாரும் புரிந்துகொள்ளா வண்ணம் முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் ஆந்திராவில் 2024ல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு நடிகர் மற்றும் அரசியல்வாதியான பவன் கல்யாணை இப்போதே பிஜேபி தயார்படுத்திவருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனிடையே 2024 சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணையவேண்டும் என பவன் கூறியுள்ளார்.
ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் மேலும் கூறுகையில் " YSRCP கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் மீண்டும் இருளில் மூழ்கும். மாநில மக்களை காப்பற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். கூட்டணி அமைப்பது என்பது கட்சிகளின் நலனுக்காக இல்லை. மாநில மக்களின் நலனுக்காகவே கூட்டணி. இந்த விஷயத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
எமெர்ஜென்சி காலத்தில் காங்கிரசுக்கு எதிராக அனைத்துக்கட்சிகளும் ஒன்றிணைந்து போராடின. தற்போதுள்ள சூழலை கருத்தில்கொண்டு கண்ணோட்டம் கொண்ட அனைவரும் ஒன்றிணைவார்களா என்பது எதிர்காலத்தில் தெரியும். யாரவது ஒரு பெரிய சம்பவத்தை சுட்டிக்காட்டினால் அதை சிறியது என கூறி நிராகரிக்கிறார்கள். கற்பழிப்பு சம்பவத்தை கூட எளிதாக எடுத்துக்கொண்டு ஒரு பெண் அமைச்சர் வினோதமாக விளக்கமளிக்கிறார்" என கூறியுள்ளார்.
பவனின் கருத்தை ஆதரிப்பது போல கர்னூல் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு "ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்தை அகற்ற எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். குழப்பமான YSRCP ஆட்சியில் இருந்து மக்களை விடுவிக்கவும் ஆந்திர பிரதேசத்தின் எதிர்கால மாற்றத்தையும் கருத்தில்கொண்டு அனைவரும் ஒன்றிணையவேண்டும்" என கூறினார்.
பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி பிஜேபியுடனான கூட்டணியில் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் ஜனசேனா தெலுங்கு தேசம் பிஜேபி கூட்டணி அமையும் பட்சத்தில் சந்திரபாபு முதல்வர் வேட்பாளராகலாம் எனவும் அப்படி கூட்டணி அமையாத பட்சத்தில் பவன் முதல்வர் முகமாக இருப்பார் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.