இயக்குநர் ஞானவேல் ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் வருத்தம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு உள்ளது மேலும் சர்ச்சையாகி உள்ளது. இதில் பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ள நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட தகவல்களை முதலில் பார்க்கலாம் ...
தமிழக முதல்வர் ஜெய்பீம் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டியதோடு, பழங்குடி மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற, உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இத்திரைப்படத்தின் நோக்கத்தை முழுமை பெற செய்தார். மேலும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெற்ற வாழ்த்துக்கும், இக்கட்டான சூழ்நிலையில் நன்றி தெரிவித்திக்கொள்கிறோம்.
அதே வேளையில், பின்னணியில் மாட்டப்பட்ட ஒரு காலண்டர் படம் ஒரு சமூகத்தை குறிப்பதாக புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை. 1995 காலத்தை பிரதிபலிப்பதே அதன் நோக்கம். குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதை காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்த காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியின்போதும், எங்கள் யாருடைய மனதிலும் பதியவில்லை. அமேசான் பிரைம்- இல் படம் வெளிவரும் முன்பே பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தை பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.
நவம்பர் 1ஆம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்ததும், காலண்டர் சர்ச்சை குறித்து சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன் உடனடியாக நவம்பர் 2ஆம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு எங்களுக்கு தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன். இயக்குனராக நான் மட்டுமே பொறுப்பு ஏற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்கள் பொறுப்பேற்க சொல்வது துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இத்திரைப்படத்தில் சூர்யா அவர்கள் பழங்குடியின மக்களின் துயரங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருந்தார். இயக்குனராக என் பொருட்டு அவருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தத்தை பதிவு செய்ய விரும்புகிறேன் இவ்வாறு தெரிவித்தார்.
எனவே எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும் அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன். இதன் பொருட்டு மனவருத்தம் அடைந்தவர்களுக்கு மன பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஞானவேல் தெரிவித்து இருக்கின்றார்.இதில் குறிப்பிட்டு நோக்க வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள் என்னவென்றால்,
1. காலண்டர் இருப்பது யார் கண்ணிலும் படவில்லை என இயக்குனர் தெரிவித்து இருப்பது யாராலும் நம்ப முடியாத ஒன்று. காரணம் ஒரு நடிகரோ நடிகையோ... எந்த உடை அணிகிறார்கள் எந்த நிறத்தில் அணிகிறார்கள், காதில் கம்பல் இருக்கிறதா தலைவாரி இருக்கின்றனரா?....எந்தெந்த பொருள் எந்த இடத்தில் இருந்தது உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து தான் ஒரு நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு அதனுடைய தொடர்ச்சி ஷூட்டிங்கிலும் follow up செய்வார்கள். இப்படி சின்ன சின்ன விஷயத்தில் கூட மிக அதிக கவனம் செலுத்தி தான் ஒரு படம் வெளியே வருகிறது. ஆனால் அதில் காலண்டர் நோட் பண்ண வில்லை என குறிப்பிடுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்ற காமெடியாக இருக்கின்றது.
அடுத்ததாக பிரச்சனை என தெரிந்தவுடன் அடுத்த நாளே காலண்டர் மாற்றும்போது லட்சுமி காலண்டர் வைக்க வேண்டிய அவசியம் ஏன்? குறிப்பிட்ட சமுதாயத்தை பாதிக்கிறது என்ற உடன் மாற்றம் மனம் இருந்தது என்றால் அடுத்ததாக லட்சுமி படத்தை வைக்கும்போது ஒரு மதத்தையே பாதிக்கும் என உணராதவரா இயக்குனர் என்ற கேள்வி எழுகிறது? இப்படம் வெளி வந்தவுடன் பிரச்சனை கிளம்பி, அதன் பிறகும் கூட மிகவும் ஆக்டிவாக தனக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைவருக்கும் உடனடியாக ட்விட்டர் மூலமாகவும், அறிக்கை மூலமாகவும் ஆதரவு தெரிவித்து வந்தார் சூர்யா. ஆனால் நடிகரும் தயாரிப்பாளருமான சூர்யாவுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு என இயக்குனர் ஞானவேல் இன்று அறிக்கை வெளியிட்டிருப்பதை பார்க்கும்போது கடந்த 20 நாட்களாக சைலண்டா வேடிக்கை பார்த்ததன் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
இதை எல்லாம் தவிர்த்து, இத்தனை நாட்களாக சைலண்டாக இருந்துவிட்டு இப்போது வருத்தம் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்னவென்று பார்க்கும்போது, பிரச்சனைகள் பூதாகரமாக வெடித்து, அதன்மூலம் பேசும் பொருளாக மாரி, அறியாதவர்களும் இப்படத்தை பார்த்த பின்பு, தி ஷஷாங் ரிடெம்சன் மற்றும் தி காட்பாதர் போன்ற மிகப் பிரபலமான படங்களைப் பின்னுக்குத் தள்ளி, IMDb இணையதளத்தில் சிறந்த படமாக பயனர் தரமதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடிக்கும் அளவுக்கு வந்தபின்பு இப்போது வருத்தம் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் ஜெய் பீம்பட சர்ச்சையில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் உடனடியாக ரிப்ளை கொடுத்து வந்த சூர்யா, இயக்குனர் ஞானவேல் கொடுத்த அறிக்கைக்கு பிறகு, "தனக்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்பு இல்லை என அறிக்கை கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆக மொத்தத்தில் ஜெய் பீம் திரைப்படம் சர்ச்சையான பிறகு, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு மட்டும் நன்றி தெரிவிக்க சூர்யா தேவை.... மன வருத்தம் தெரிவிப்பதற்கு மட்டும் இயக்குனர் ஞானவேல் தேவையா ?என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
மேலும் இனி வரக்கூடிய காலகட்டத்தில் படங்கள் எடுக்கும்போது வேறு எந்த பிரச்சனையிலும் சிக்காமல் ஸ்மூத்தாக கையாள வேண்டும் என்பதற்காக தான் இப்போது வருத்தம் தெரிவிப்பது போல், அதுவும் இயக்குனரை விட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் சூர்யா என சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் 'ரியாலிட்டி' மேட்டரை பேசி வருகின்றனராம். இவை அனைத்திற்கும் பின் எல்லாம் பிசினஸ் தானாம்!