விஜய் மக்கள் இயக்கத்தினர், கட்சி சார்பு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு உள்ளனர். மற்ற கட்சிகள் எல்லாம் மிகவும் உற்சாகமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கும் நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரும் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்ய தொடங்கியிருக்கின்றனர்.
இதற்கு முன்னதாக ஊரக உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பு இல்லாமல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மொத்தம் 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் போட்டி இல்லாமல் 13 பேரும், போட்டியிட்டு 102 பேர் என மொத்தம் 115 பேர் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.
வெற்றிப்பெற்ற உறுப்பினர்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதேபோன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும், யாரை எல்லாம் வேட்பாளராக அறிவிக்க வேண்டும், மக்கள் மத்தியில் எப்படி இருக்க வேண்டும் என்று கடந்த ஒரு வருடமாகவே சரியான திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
அந்த வகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது வெற்றி பெற்ற வேட்பாளர்களை சந்தித்த விஜய் அப்போதே இது குறித்து வியூகம் வகுத்து தங்களுடைய ரசிகர்களுக்கு வகுப்பு எடுத்து உள்ளாராம். அதனைத் தொடர்ந்து இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுகின்றனர். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகளில் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க இருக்கின்றது. பிப்ரவரி 22 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
இப்படியான நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக பிரச்சாரம் மேற்கொள்வதற்கு விஜய் போன்றே நடனமாடியும், வசனம் பேசியும் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த விஜய் போன்றே தோற்றத்தில் இருக்கும் கேரளத்து டூப்பை களத்தில் இறக்கி, பிரச்சார ஷோ கேஸ் ஆக பயன்படுத்தி இருந்தனர் விஜய் மக்கள இயக்கத்தினர்.
அதாவது மதுரையில், அவரை வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பார்ப்பதற்கு நடிகர் விஜய் போன்று இருப்பதால் மக்கள் உற்சாகமாக அவருக்கு கையசைத்து ஹலோ ஹாய் என தெரிவிக்கின்றனர். இவரும் மற்ற அரசியல்வாதிகளை போன்று தோசை சுடுவது, டீ குடிப்பது என்ற வரிசையில் வடை சுடும் யுக்தியை கையில் எடுத்துள்ளார்.
ஆக மொத்தத்தில் ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் கூட தங்களது வேட்பாளர்களுக்காக முதல்வரும் முன்னாள் முதல்வரும் கூட பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபடுகின்றனர். ஆனால் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய்யின் டூப்பை வைத்து பிரச்சாரம் செய்வதை பார்த்த மக்கள், "நீ இன்னும் என்ன பைத்தியகாரனாகவே நினைச்சுட்டு இருக்கல" என்ற மைண்ட் வாய்ஸ் உடன் செல்வதை பார்க்க முடிகிறது.
More Watch videos