இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் முன்னுரை எழுதி இருந்தார், பிரதமர் மோடி குறித்த தனது பார்வையை பல மத்திய அரசு திட்டத்துடன் பொருத்தி பார்த்து அவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் இளையராஜா.
இந்த சூழலில் தனது கருத்தை பதிவு செய்ததை குற்றமாக நினைத்து பெரும் விமர்சனத்தை இளையராஜா மீது வைத்து வருகின்றனர் ஒரு தரப்பு, இதில் திமுகவை சேர்ந்த மனுஷ்ய புத்திரன் போன்றோரும் இளையராஜாவை விமர்சனம் செய்தனர், இந்த சூழலில் கார்ட்டூனிஸ்ட் பாலா இளையராஜாவை விமர்சனம் செய்பவர்களை கடுமையாக சாடி இருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- எனக்கு நூறு சதவீதம் மோடியின் அரசியல் பிடிக்காது, அரசியல்ரீதியாக மோடியை ஒரு பாசிஸ்ட்டாகவே பார்க்கிறேன், அது என் அரசியல் பார்வை. ஆனால் எனக்கு பிடிக்காத ஒருவர், இளையராஜா அவர்களுக்கும் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டிருக்கிறாரா,அவரது பார்வையில் ஒப்பிட்டுவிட்டு போகிறார், அம்பேத்கரை ஒப்பிட பலருக்கும் பல காரணங்கள் இருக்கலாம். இளையராஜா அவர்களது இசையை நாம் ரசிக்கிறோம் என்பதாலயே நம்முடைய அரசியல்பார்வையோடுதான் அவரும் இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.
அதேப்போல் அவர் இசையை ரசிப்பதாலயே அவர் சொல்லும் பிற விசயங்களை நாம் ஏற்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை, இதில் சந்தடி சாக்கில் அவர் சாதியையும் இழுத்து வந்து சிலர் வன்மத்தை தீர்த்துக்கொள்கிறார்கள்.
தனிப்பட்ட இளையராஜா என்ற மனிதரின் கருத்துக்கும் அவர் சாதிக்கும் இங்கு என்ன சம்பந்தம், அல்லது அவர் சாதியை சார்ந்தவர்கள் எல்லாம் மோடியை அல்லது இந்து மதத்தை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற நேர்த்திக் கடன் இருக்கிறதா என்ன.
ஆன்மீக நிலையில் அவரது உள்ளொளியின் பயணம் வேறொரு வடிவத்தில் இருக்கிறது என்று உணர்கிறேன், நாம் இங்கு கருத்து பிதற்றல்கள் செய்வதெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே அல்ல, மோடி குறித்து நமக்கு ஒரு பார்வை இருப்பதுபோல் அவருக்கும் ஒரு பார்வை இருக்கிறது என்றளவில் கடந்து போக வேண்டியதுதான்.
அதற்கு மாறாக இன்று இளையராஜாவை திட்டி புரட்சி பொங்கல் வைப்பவர்கள் எல்லாம் யார், பீஸ்ட் என்ற படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்திருப்பது குறித்து வெளிப்படையாக சன் பிக்ச்சர்ஸையோ ரெட் ஜெயண்ட்டையோ விமர்சிக்க முடியாமல் கால்குலேசனுடன் எழுதும் மனுஷ்யபுத்திரன்களாகவே இருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் பாசிச பாஜக பூந்துரும் என்ற சாக்கில் திமுகவுக்காக உருட்டுபவர்களே, அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லாப நோக்கம்,கால்குலேசன்கள், குஜராத் முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டபோது நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கு முட்டுக் கொடுத்தவர்கள்தான் திமுக உள்ளிட்ட திராவிட கட்சியினர். பாஜகவுக்கு துணையாக நின்ற திமுகவை ஆதரித்துக் கொண்டு இளையராஜா சொன்ன கருத்துக்கு பாய்ந்து வந்து கடிக்கிறார்கள்.
ஈ.வெ.ராமசாமி நயக்கர் (ஆந்திராவில் தலைப்பு அப்பட்டிதான் ) படத்துக்கு இசைக்க மாட்டேன்னு சொல்லிட்டார் என்று ஒரு வதந்தியை வைத்து திட்டினார்கள், அவரிடம் படக்குழு கேட்கவில்லை என்று பின்னர் செய்தி வந்தது.. ஒருவேளை அந்த படத்திற்கு அவர் இசைக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தாலும் அது சரி அது ஒரு இசைக்கலைஞனின் முடிவு.
முன்பு காப்புரிமை பஞ்சாயத்தின்போதும் இதே கூத்துதான், வணிகமாக பயன்படுத்தப்படும் இசைக்கு காப்புரிமை தொகை அனைத்து இசை அமைப்பாளர்களும் பெறுவது சகஜம், ஆனால் அதை இளையராஜா உரிமையை கேட்டுவிட்டால், என்னவொரு அல்ப புத்தி என்பது.. இப்போது விருதுக்காக சங்கிகளை ஆதரிக்கிறார் என்பது.
மெய்யியல் பயணத்தில் அந்திம காலத்தில் சிவனியத்தோடு சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இளையராஜாவை இனி பெருமைப் படுத்த விருதுகள் அவசியமில்லை, அவர் உலகம் வேறு, ஆகவே கால்குலேசன்கள் போட்டு பேசுவதும் எழுதுவதும் மனுஷ்யபுத்திரன்களுக்கு தான் தேவையே தவிர ராஜாக்களுக்கு அல்ல.
மீண்டும் சொல்கிறேன், இளையராஜாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனால் அந்த கருத்தை சொல்வதற்கான அத்தனை உரிமையும் அவருக்கு உண்டு என குறிப்பிட்டுள்ளார்.