
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க் கிழமையன்று சட்டப்பேரவைக் கூட்டம் துவங்கியதும் 110வது விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில், மத்திய - மாநில அரசுகள் இடையிலான உறவுகள் குறித்து ஆராய்ந்து பரிந்துரை அளிக்க மூன்று பேர் கொண்ட உயர் மட்டக் குழுவை அமைப்பதாக அவர் அறிவித்திருக்கிறார்.இது குறித்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திமுகவை ஆதரங்களோடு கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது : தமிழகத்தில் சீரழிந்த சட்டம் பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்கள், போதைப் பொருட்களின் புழக்கம், ஒழுங்கு, குழந்தைகள், காவல்துறையினருக்கே பாதுகாப்பின்மை, என திமுக அரசுக்கு எதிராக தமிழக மக்கள் கடுங்கோபத்தில் இருக்கையில், தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், பொதுமக்கள் தனது ஆட்சியைப் பாராட்டுகிறார்கள் என்ற கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தேவையற்ற விளம்பர நாடகங்களில் மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு. ஸ்டாலின், மீண்டும் ஒருமுறை மக்கள் வரிப்பணத்தை வீணடிக்க, மத்திய அரசுடனான உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றியிருக்கிறார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு, திமுக அரசு அமைத்துள்ள பல குழுக்களில் இதுவும் ஒன்று. மக்களின் வரிப்பணத்தை இப்படி வீணடிப்பதற்கு முன், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு அமைத்துள்ள குழுக்களுக்கு எவ்வளவு நிதி செலவிட்டுள்ளது என்பதையும், இந்தக் குழுக்களினால் என்ன தீர்வு கிடைத்துள்ளது என்பதையும், முதலமைச்சர் முதலில் அறிவிக்க வேண்டும்.
முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, கல்வி மற்றும் நீதி நிர்வாகம், மாநிலப் பட்டியலிலிருந்து, பொதுப் பட்டியலுக்கு ஏதோ கடந்த வாரம் மாற்றப்பட்டது போல் பூடகமாகப் பேசியிருக்கிறார். கடந்த 1976 ஆம் ஆண்டு, 42வது சட்டத் திருத்தம் மூலம் அவை பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டன. கடந்த 40 ஆண்டுகளாக, மத்திய அரசில் குறிப்பிடத்தக்க பல அமைச்சரவைப் பதவிகளை வகித்த திமுக, இதற்காக ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை. மத்திய அரசில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும்போது மட்டுமே மாநில உரிமைகளைப் பற்றி திமுகவுக்கு ஞாபகம் வருகிறது. தீர்மானத்தில் திரு. மு.க. ஸ்டாலின் நீட் பற்றிப் பேசினார்.
தனது கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் சுகாதாரத் துறை இணை அமைச்சருமான திரு.காந்தி செல்வன் தான், கடந்த 21/12/2010 அன்று நீட் தேர்வை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார் என்பதை, முதலமைச்சர் தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி அரசுதான், நீட் தேர்வை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்களை தாக்கல் செய்தது, மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டு, நீட் தேர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் யார் வாதிட்டார்கள் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், கடந்த 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, எத்தனை அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றனர் என்பதை திரு.மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும், ஏனெனில் இந்த முக்கியமான தகவல், முன்னாள் நீதிபதி திரு. ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையில் வேண்டுமென்றே விடுபட்டுள்ளது.என திமுகவை வெளுத்து வாங்கிவிட்டார் அண்ணாமலை இது தற்போது வைரலாகி வருகிறது.