உக்ரைன் விவகாரத்தில் இன்று பின்வாங்க வேண்டியது அமெரிக்கா எனவும் என்ன நடக்கிறது எனவும் விரைவாக பதிவு செய்துள்ளார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-
அன்று கியூபா - இன்று உக்ரைன்! அன்று கென்னடி - இன்று புட்டின்! வரலாறு சொல்லும் பாடம் என்ன? புட்டினின் நியாயமும் - பிடனின் விதண்டாவாதமும்!!
உக்ரைன் - ரஷ்ய எல்லைப்பகுதியில் ரஷ்யாவின் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட படைகளை கடந்த ஒரு மாத காலமாகக் குவித்து வைத்ததிலிருந்தே ரஷ்யா - உக்ரைன் போராகத் துவங்கி, மூன்றாவது உலக யுத்தமாக மாறிவிடுமோ? என்ற அச்சம் அனைவரது மனதிலும் பெரும் பீதியை உண்டாக்கி இருக்கிறது. இந்நிகழ்வை உக்ரைன் - ரஷ்யா போராகவோ; உக்ரைன் - புட்டின் மோதலாகவோ மட்டும் கருத இயலாது. எப்பொழுதுமே வரலாறுகள் திருப்பி அடிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு முக்கியமான அத்தாட்சி.
உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதற்கான முன்னோடி அம்சம் ஒன்றை அறிய நாம் 60 வருடங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். ஆம், 1962 ஆம் ஆண்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலிருந்து கைக்கெட்டும் தூரத்தில் உள்ள கியூபா பிரச்சனையே அச்சம்பவத்தின் துவக்கமாகும். அன்றைய காலக்கட்டங்களில் ரஷ்யாவினுடைய தலைமையில் சீனா உள்ளிட்ட 81 நாடுகள் ’கம்யூனிஸ்ட் அகிலம்’ என்ற அமைப்பின் கீழ் ஒன்றுபட்டு இருந்தன. இரண்டாவது உலகப் போருக்குப் பின் ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுகள் வீசப்பட்ட பிறகு, அமெரிக்கா தன்னை ஒரு வல்லரசாக மாற்றிக்கொண்டது. அது வரையிலும் பிரிட்டிஷ் ராஜ்ஜியமே உலகெங்கும் பெரும்பாலான நாடுகளை ஆட்சி செய்து கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப்போரில் பிரிட்டிஷ் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்ததாலும்; ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி ஆகிய அச்சு நாடுகளின் வீழ்ச்சியாலும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினுடைய இடத்தை அமெரிக்கா வேகமாக நிரப்பி வந்தது; நவீன ஆயுதங்களின் உற்பத்திக் களமாகவும் அமெரிக்கா மாறியது. பொருளாதார பலத்திலும் இராணுவ பலத்திலும் அமெரிக்கா தன்னை உலகளவில் முதல் நிலை நாடாகத் தகவமைத்துக் கொண்டது.
அன்று சர்வதேச அளவில் இரண்டு கொள்கைகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஒன்று ரஷ்யா தலைமையிலான 'பொதுவுடைமைக் கொள்கை', மற்றொன்று அமெரிக்கா தலைமையிலான 'முதலாளித்துவக் கொள்கை'. ஏகாதிபத்திய எண்ணம் கொண்ட அமெரிக்கா ’பொதுவுடைமை சித்தாந்த அடிப்படையில் உருவான நாடுகளின் ஆட்சி - அதிகாரத்தை அழித்து, அங்கு மீண்டும் முதலாளித்துவ ஆட்சி - அதிகாரத்தை நிலைநாட்டவும், பொதுவுடைமை சித்தாந்தத்தின் மூலம் எந்த நாட்டிலாவது அரசியல் மாற்றம் நிகழும் என்று கருதினால் அமெரிக்கா அங்கு வலிந்து சென்று உள்நாட்டு கலகங்களை விளைவித்தும் வந்தது. அப்படித்தான் கம்யூனிச சித்தாந்தம் கொண்ட வட வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஆயுதங்களையும், குண்டுகளையும் இறக்கி, ஆயிரக்கணக்கான அமெரிக்க வீரர்களை அந்நிய நாடுகளில் இழந்தது.
பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள கம்யூனிச வியட்நாம் வரை சென்று போராடிய அமெரிக்காவிற்கு தனது கூப்பிடும் தூரத்தில் இருக்கும் கியூபா கம்யூனிச நாடானதை சிறிதும் சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த நேரத்திலும் கியூபாவை கபளீகரம் செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோவை சி.ஐ.ஏ மூலம் கொலை செய்ய முயற்சி செய்ததாக எண்ணற்ற குற்றச்சாட்டுகள் உண்டு. எனவே, அமெரிக்காவினுடைய அச்சுறுத்தலிலிருந்து தோழமை நாடான கியூபாவை பாதுகாக்கும் பொருட்டு, தனது நாட்டு ஏவுகணைகளை ரஷ்யா கியூபாவில் நிறுத்தியிருந்தது. இதை தனது ரகசிய இராணுவ விமானத்தின் மூலம் கண்டறிந்த அமெரிக்க ராணுவம் அன்றைய அமெரிக்க அதிபர் கென்னடிக்கு தகவல் கொடுத்தது. அந்த ஏவுகணைகள் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அமெரிக்கா கருதியது.
கியூபாவில் ரஷ்யாவினுடைய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளதை அமெரிக்கா கண்டு பிடித்ததை அன்றைய ரஷ்ய அதிபர் குருசேவ் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே, கியூபாவை அமெரிக்கக் கடற்படைகள் சுற்றி வளைக்க கென்னடி உத்தரவிட்டு விட்டார். கியூபா அன்றைய காலகட்டங்களில் எரிபொருளுக்காக முழுக்கமுழுக்க ரஷ்யாவையே நம்பியிருந்தது. முற்றுகையிடப்பட்ட கியூபாவிற்கு உதவுவதற்காக ரஷ்யாவின் எண்ணெய் கப்பல்கள் கியூபாவிற்கு குருசேவ் அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டன.
’கியூபாவை நோக்கி ரஷ்யாவின் எண்ணெய்க் கப்பல்கள் வருமேயானால், அவை நடுக்கடலில் மூழ்கடிக்கப்படும்’ என கென்னடி எச்சரித்தார். எனவே, அவரின் எச்சரிக்கை குறித்து முடிவெடுக்க 81 நாடுகள் அடங்கிய ’கம்யூனிச அகிலம்’ கூடியது. அப்பொழுது ரஷ்யாவின் அதிபராக இருந்த குருசேவ் அவர்கள் ’அமெரிக்காவுடன் போர் வேண்டாம்; சமாதான சகவாழ்வு’ என்ற கோட்பாட்டை முன்னிறுத்தி கியூபா சென்ற எண்ணெய் கப்பல்களை திரும்பப்பெற்றுக்கொண்டார்; ஏவுகணைகளும் அகற்றப்பட்டன. கியூபா முற்றுகையையும் அமெரிக்கா வாபஸ் பெற்றது. குருசேவின் முடிவை 79 நாட்டின் கம்யூனிச கட்சிகள் ஏற்றுக் கொண்டன.
‘அமெரிக்கா ஒரு காகிதப் புலி, அமெரிக்கா உடனான போரே உலகின் அமைதிக்கு வழி வகுக்கும்’ என்று சீன அதிபர் மா சேதுங் (Mao Zedong) அவர்களும், அல்பேனியாவின் அதிபர் என்வேர் ஹெக்சா (Enver Hoxha) அவர்களும் மாறுபட்ட கருத்து கொண்டார்கள். அதனால் 81 நாடுகளின் ’கம்யூனிச அகிலம்’ ரஷ்யாவின் தலைமையில் ஒன்றும், சீனாவின் தலைமையில் இன்னொன்றுமாக இரண்டாகப் பிரிந்தன.
கியூபாவில் நிறுத்திவைக்கப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதியே கென்னடி கியூபாவை முற்றுகையிட்டார். அன்று கென்னடி நிமிர்ந்தார்; குருசேவ் பின்வாங்கினார். இன்று வரலாறு அப்படியே திரும்புகிறது. இன்றும் புட்டின் கென்னடி நிலையிலும்; பிடன் குருசேவ் நிலையிலும் உள்ளனர். இடமும் நிகழ்வுகளும் வேறு வேறே தவிர, அடிப்படையில் கூறுகள் ஒன்றுதான். அன்று நடந்தது வட அமெரிக்கப் பகுதியில், இன்று நடப்பது ஐரோப்பாவில் அவ்வளவு தான்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவின் பல நாடுகள் ரஷ்யாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. ஜெர்மனி கூட கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என இரண்டாகப் பிரிந்தது. ரஷ்யாவும் USSR என்ற பெயரில் பல நாடுகளின் ஐக்கியமாக இருந்தது. ஆனால், 1990-க்கு பிறகு PERESTROIKA / GLASNOST POLICY கோட்பாடுகளின்படி ரஷ்யாவின் தலைமையில் ஒன்றுபட்டிருந்த பல நாடுகள் தனி நாடுகளாகின. அதில் ஒன்றுதான் இப்பொழுது பிரச்சனையின் மையமாக இருக்கக்கூடிய உக்ரைன் ஆகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்காவின் தலைமையில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் NATO - North Atlantic Treaty Organization என்ற ராணுவ கட்டமைப்பின் கீழ் வந்தன. அதன்படி நேட்டோவில் உள்ள ஒரு நாட்டுக்கு ஒரு பிரச்சனை என்றால், நேட்டோ அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே அதன் அடிப்படை அம்சம். உக்ரைன் அடிப்படையில் ரஷ்யாவில் வாழுகின்ற தேசிய இன மக்களையே பெரும்பாலும் கொண்டிருக்கக்கூடிய நாடு ஆகும்.
சோவியத் ரஷ்யாவிலிருந்து உக்ரைன் உட்பட பல நாடுகள் பிரிந்த பொழுது அந்த நாடுகளை எக்காரணம் கொண்டும் நேட்டோ அமைப்பில் சேர்ப்பதில்லை என்பதும், நேட்டோவில் அங்கம் வகிக்கும் போலந்து, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஏவுகணைகளை வைக்கக் கூடாது என்பதும் அப்போது ஏற்றுக்கொண்ட ஒப்பந்தங்களாகும். அந்த ஒப்பந்தங்களுக்கு மாறாக, போலந்து, ரொமினியா உள்ளிட்ட பல நாடுகளில் அமெரிக்காவினுடைய ஏவுகணைகள் ரஷ்யாவை நோக்கி நிறுத்தி இன்றும் வைக்கப்பட்டிருக்கின்றன. இதை ரஷ்யா தொடர்ந்து எதிர்த்து வந்துள்ளது. இது அடுத்தவன் வீட்டு வாயிற்படி அருகே வெடிகுண்டை வைப்பதற்குச் சமமானதே.
இப்பொழுது அமெரிக்கா தீவிரமாக முயற்சி எடுத்து உக்ரைன் நாட்டை நேட்டோ அமைப்பில் சேர்ப்பதற்கான பணிகளைத் துரிதப்படுத்துகிறது. அதனுடைய உடனடி அவசியம் என்ன? உக்ரைனை நேட்டோ அமைப்பில் சேர்ப்பதும் அமெரிக்காவின் ஒரு வித ஆக்கிரமிப்பின் இன்னொரு வடிவமே. அதை மறைத்துவிட்டு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உலகளவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பாவில் பெரும் யுத்தங்கள் எதுவும் நடைபெறவில்லை. சோவியத் ரஷ்யாவிலிருந்து பல நாடுகள் பிரிந்து சென்றது கூட அமைதியாக நடைபெற்ற நிகழ்வே ஆகும். ரஷ்யா அண்டை நாடுகளான போலந்து, பின்லாந்து, எஸ்டோனியா, பெலாரஸ், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளோடு நட்போடு தான் இருக்கிறது. ரஷ்யாவால் எந்த ஒரு அச்சுறுத்தலும் ஏற்பட்டதாக எந்த நாடுகளும் இதுவரை குற்றம் சாட்டவில்லை; எல்லைப் பிரச்சனைகள் கூட தோன்றியதாக தெரியவில்லை. எல்லாம் அமைதியாக இருக்கின்ற போது, அமெரிக்கா மட்டும் வலிந்து உக்ரைனை நேட்டோவில் சேர்க்க எடுக்கும் முயற்சி ரஷ்யாவை ஆத்திரமூட்டாதா? உக்ரைன் நேட்டோ அமைப்புகள் கொண்டுவரப்பட்டு அங்கு ஏவுகணைகள் நிறுத்தப்பட்டால் அது மாஸ்கோ - கிரம்ளினை நோக்கியதாகத் தானே இருக்க முடியும்? ரஷ்யாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகவே தானே இருக்க முடியும்? உக்ரைன் பாதுகாப்பு குறித்து பேசுபவர்கள்? ரஷ்ய பாதுகாப்பு குறித்து ஏன் வாய் திறக்க மறுக்கிறார்கள்? ஐ.நா.,வும் மவுனம் சாதிப்பது ஏன்?
1962-ஆம் ஆண்டு கியூபாவில் நிறுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவிற்கு ஆபத்தை உருவாக்கும் என்று கருதி கென்னடி எவ்வாறு கியூபாவை முற்றுகையிட்டாரோ இன்று அதே நிலைதான், உக்ரைன் பிரச்சனையும் ஆகும். உக்ரைன் நேட்டோ அமைப்புக்குள் சென்றால், அது நேட்டோ மற்றும் அமெரிக்காவின் ஏவுகணை தளங்களாகவும்; அந்த ஏவுகணை தளங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா அச்சம் கொள்வது நியாயம் தானே? அமெரிக்கா - ரஷ்யா மோதலுக்கு அன்று கியூபா ஒரு களமாகவும், தளமாகவும் இருந்தது. இன்று அது உக்ரைனாக மாறி இருக்கிறது அவ்வளவு தான்.
அன்று குருசேவ் பின்வாங்கினார். ஆனால், இன்றைய புட்டின் அன்றைய குருசேவ் போன்றவர் அல்ல. உக்ரைன் நேட்டோவில் சேர்ப்பது என்பது மாஸ்கோவை நோக்கிய யுத்தம் என்று அவர் தெளிவாக அறிவித்து விட்டார். இதில் புட்டின் ஒரு விநாடி கூட தன் கண்ணிமைகளைச் சிமிட்ட மாட்டார் எனத் தெரிகிறது. ஜோ பிடன் மிரட்டலாம்; ஆனால் புட்டின் மிரளமாட்டார். உக்ரைனில் போர் துவங்கினால், அந்தப் போரைச் சந்திக்கப் போவது யார்? இன்னும் வளர்ச்சி அடையாத உக்ரைன் மக்களாகத்தானே இருக்க முடியும். அமைதியை விரும்பக்கூடிய ஐரோப்பிய மக்களாகத் தானே இருக்கமுடியும். பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் ரஷ்யாவிலிருந்து செல்லக்கூடிய இயற்கை எரிவாயுக்களை நம்பி மட்டுமே இருக்கின்றனர். போர் மூண்டால் அது தடைபடாதா?
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பின்னடைவை மூடி மறைப்பதற்காக இப்பொழுது பிடன் உக்ரைனில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கிறார். ரஷ்யாவால் எந்த அண்டை நாடுகளுக்கும் ஆபத்து இல்லாத போது, உலக நாடுகள் எல்லாம் அமைதியை விரும்புகின்ற பொழுது, அமெரிக்காவிற்கு மட்டும் ஏன் இந்த யுத்த வெறி? அமெரிக்காவில் என்றுமில்லாத அளவிற்கு இப்பொழுது பணவீக்கம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கோவிட் தோல்வி - பின்னடைவுகள், கடன் சுமைகள் அவற்றையெல்லாம் மறைப்பதற்கு இப்பொழுது ஐரோப்பாவின் அமைதியை மட்டுமல்ல; உலக அமைதியையும் சீர்குலைக்க பிடன் முயற்சி செய்கிறார்.
அமெரிக்கா – நேட்டோ நாடுகளின் ஒட்டுமொத்த ராணுவ பலத்தோடு ஒப்பிடுகையில், ரஷ்ய ராணுவ பலம் குறைவாக இருக்கலாம். ஆனால், ரஷ்யாவின் உண்மை பலம் என்ன? என்பதை ஐரோப்பிய நாடுகள் உணரும். ரஷ்யாவை ராணுவ பலத்தால் வெல்ல முடியாது. ரஷ்யாவின் பலம் வேறு. அதுவும் புட்டினை வெல்லுவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.
ஐரோப்பாவும் உலக நாடுகளும் அமைதியையே விரும்புகின்றனர். பிரான்சு, ஜெர்மனி போரை விரும்பவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் 6 மணி நேரத்திற்கு மேலாக பிரான்சு அதிபர் - ரஷ்ய அதிபர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்; அதேபோல, ஜெர்மனி அதிபரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்; உக்ரைன் நாட்டு அதிபரும் ரஷ்யாவோடு எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லுகிறார். ஜோ-பிடனின் கைங்கரியம் பிரிந்து கிடந்த ரஷ்யாவையும் - சீனாவையும் இப்போது ஒன்று சேர்த்து வைத்திருக்கிறது.
ரஷ்யா - உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து கொஞ்சம் சிறிய படைகள் வாபஸ் ஆகலாம்; பதட்டமும் குறையலாம். ஆனால், ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் ரஷ்ய ராணுவம் முற்றாக உக்ரைன் எல்லையிலிருந்து வெளியேற வாய்ப்பே இல்லை. நாளை வரும் யுத்தத்தை இன்றே நடத்திவிட புட்டின் முடிவு செய்து விட்டார் என்றே தெரிகிறது. ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளும் அமைதியையே நாடுகிறார்கள். ஆனால், பிடன் யுத்தம் செய்ய தூண்டுகிறார். அது அவருடைய மண்ணில் அல்ல, இன்னொரு மண்ணில். அதுவே அமெரிக்காவின் வரலாறு.
அன்று குருசேவ் பின் வாங்கியிருக்கலாம். ஆனால், இன்று புட்டின் பின் வாங்கமாட்டார். NATO-வில் உக்ரைன் சேர்க்கப்படக்கூடாது/ போலந்து உள்ளிட்ட நேட்டோ நாடுகளில் ரஷ்யாவை நோக்கி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏவுகணைகள் அகற்றப்பட வேண்டும்.
எனும் புட்டின் கோரிக்கைகளில் நியாயம் இருக்கிறது! இன்று பின் வாங்க வேண்டியது பிடன் மட்டுமே!இதற்கு பெயர்தான் வரலாறு திருப்பி அடிக்கும் என்பது.
More watch videos