தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே.2ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அஸ்ஸாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி அன்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.
இந்த எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாகவே சொல்லப்பட்டுள்ளன.இந்த நிலையில், நடப்பு சட்டமன்ற தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் நிலவரத்தையும் ஏ பி பி – சி ஓட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளன. 2021 தமிழ்நாடு எக்சிட் போல் கருத்துக்கணிப்பில் திமுகவே ஆட்சியை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி கண்காணிப்பில் உள்ள கொங்கு மண்டலத்தில் இந்த முறை அதிமுகவை விட திமுகவே அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓபிஎஸ் பொறுப்பு வகிக்கும் தென்மாவட்டங்களில் அதிமுக தன் பலத்தை தக்க வைத்துக்கொள்ளும் என்று அதில் சொல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், ஓபிஎஸ்ஸின் பலம் குறைந்துவிட்டதாக சொல்லப்பட்டது. சிஎம் போஸ்ட் பறிபோனதுக்கு பின், ஓபிஎஸ் அவரது தொகுதிக்கு குறிப்பிட்ட அளவுக்கு எந்த பங்களிப்பையும் கொடுக்கவில்லை என கூறப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு கிடைக்கப்பெறும் வாக்குகள் குறையும் என தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது, ஓபிஎஸ்ஸின் கண்காணிப்பில் உள்ள தொகுதிகளில், அதிமுகவுக்கு எதிராக தினகரன் தனது அமமுக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.
இதனால் அதிமுகவின் வாக்குகள் பிரிய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ராமநாதபுரம், மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் திமுக 33 – 35 இடங்களையும், அதிமுக 21 – 23 இடங்களையும், அமமுக- 2 இடங்களையும் பெறும் என சி ஓட்டர்ஸ் எக்சிட் போல் முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி கொங்கு நாட்டைவிட தென்மாவட்டங்களில் அதிமுக சிறப்பாக பர்பாமன்ஸ் செய்திருப்பதாக தெரிகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகுதான் ஓபிஎஸ்சின் ஆட்டம் இருக்கும் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவந்த நிலையில் தேர்தல் முடிவுகள் எது போன்ற தாக்கத்தை ஏற்படுத்த போகின்றன என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்