Tamilnadu

மாரிதாஸ் அதிரடி குவியும் ஆதரவு என்ன செய்ய போகிறது திமுக!!

Maridhas and stalin
Maridhas and stalin

நீட் தேர்வை முன்வைத்து அரசியல் களத்தை சந்தித்து மிக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தது திமுக, அதன் வெளிப்பாடாக திமுக தேர்தலிலும் வெற்றி பெற்றது, மேலும் திமுக வெற்றி பெற்றால் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வோம் என வாக்குறுதியும் கொடுத்தது திமுக.


ஆனால் வாக்குறுதி கொடுத்ததுபோல் திமுகவால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை, இந்த சூழலில் முன்னாள் நீதிபதி எ. கே. ராஜன் தலைமையில் நீட் தேர்வு கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என ஆராய குழு அமைத்தது தமிழக அரசு, அதன்படி எ.கே.ராஜன் குழுவினரும் அறிக்கை அளித்தனர் ஆனால் தற்போது அந்த அறிக்கை கடும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

எ.கே.ராஜன் கொடுத்த அறிக்கை உண்மைக்கு புறம்பாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர், இந்த சூழலில் எழுத்தாளர் மாரிதாஸ் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் அது பின்வருமாறு :- மதிப்பிற்குறிய  AK ராஜன் மற்றும் அவரது குழுவினருக்கு வணக்கம், தங்களுடைய சமீபத்திய NEET  தொடர்பான அறிக்கையை படித்ததில் முன்னாள் அரசு பள்ளி மாணவனாக நான் வேதனை அடைந்தேன். முன்னாள் மாணவனாகவும், இந்திய தமிழ் குடிமகனாகவும் என்னுள் எழுந்த சில கேள்விகளை உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் நான் கேட்கபதற்கு கடமைப்பட்டிருப்பவனாய் உணர்ந்ததால் கேட்கிறேன்.

1)அருகில் இருக்கும் ஶ்ரீலங்காவில் 15க்கும் மேற்பட்ட மருத்துவ கல்லூரிகள் இருந்த போதும் இந்தியா University of Sri Jayewardenepura,Nugegoda படிக்கும் மருத்துவ படிப்பை மட்டுமே அங்கீகரித்துள்ளது ஏன்?மொத்தம் 54 நாடுகள் ஆப்ரிக்க கண்டத்தில் உள்ளன.ஆனால், அதில் 2 நாடுகளில் உள்ள மிக சில கல்லூரிகளின் மருத்துவப்படிப்பை மட்டுமே இந்தியா அங்கீகரித்துள்ளது ஏன்?எந்த அடிப்படையில் பல நாடுகளில் மருத்துவ படிப்பை இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகரிக்தது?


அதே போல் குறிப்பிட்ட பல நாடுகளில் இந்தியாவில் மருத்துவ படிப்பு படித்தவர்களுக்கு தேர்வு வைத்து பின் அனுமதிப்பது ஏன்?இதை ஏன் விரிவாக AK ராஜன் குழு தெளிவுபடுத்தவில்லை என்பது என் முதல் கேள்வி!  இதை ஏன் AK  ராஜன் குழு பேச வேண்டும் என நான் கேட்கிறேன் என்றால் அதற்கு காரணம்  உங்கள் அறிக்கையில் CHAPTER-II -இல் நீங்கள் தெரிவித்திருக்கும் World Federation for Medical Education  2015 -இல் கொடுத்த அறிக்கை என்று ஒன்றை நீங்கள் மேற்கோள் காட்டி இருந்தீர்கள். அது தான் காரணம்.

உலக அளவில் எப்படி மருத்துவப்படிப்பு உள்ளது என்று மேற்கோள் காட்ட நீங்கள் எடுத்த அந்த அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளைக் கூட உங்கள் குழு முழுமையாக புரிந்து கொள்ளவில்லையோ என்று அச்சமடைகிறேன்.  

நீங்கள் சொன்ன World Federation for Medical Education ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை BASIC MEDICAL EDUCATION WFME GLOBAL STANDARDS FOR QUALITY IMPROVEMENT என்ற தலைப்பில் உலக மருத்துவம் சார்ந்த படிப்புகள்- ஒரு பொது தன்மைக்கு- குழப்பம் இல்லாமல்-தரத்தோடு மேம்பட ஆய்வுகளை வெளியிடுகிறது என்ற உண்மை உங்களக்கு தெரியுமா? 

அத்தோடு World Medical Association மட்டும் அல்ல...உலக அளவில் World Medical Association போன்ற பல அமைப்புகளும் கூட அனைத்து நாடுகளும் சர்வதேச பொது விதிக்குள் வருவது அவசியம் என்றும், இதனால் மருத்துவம் சார்ந்த படிப்பும், ஆய்வுகளும், அதன் வழியாக மருத்துவ சேவையும், மேலும் இவை அனைத்தும் பல வெகு ஜனமக்களை சென்றடைய வழிவகை செய்யும் என்ற முக்கியமான அடிப்படை உண்மையை உங்கள் குழு தவறவிட்டுள்ளது.

அதாவது நம் நாட்டின் மாணவர்களின் மருத்துவ படிப்பை சர்வதேச அளவிலான நாடுகள் ஏற்க வேண்டும் என்றால், அது அதே சர்வதேச அளவிலான தரத்தோடு இருக்க வேண்டும் என்ற அந்த நிதர்சனமான உண்மை அப்போது தானே மக்களுக்கு புரியும்! 

ஏன் மாணவர்களுக்கு தரமான கல்வி தேவை என்று உண்மையை அப்போது தான் மக்கள் உணர்வார்கள்!  ஆக உங்கள் குழு சர்வதேச அமைப்புகளை மேற்கோள் காட்டியது கண் துடைப்பான ஒன்றா?அடுத்ததாக உங்கள் அறிக்கையில் 7ஆம் பக்கத்தில் Parliamentary Standing Committee (PSC), 92ஆவது கூட்டத்தில் பேசப்பட்ட கருத்தில் ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளீர்கள். ஆனால்,அங்கு தான் உங்கள் குழு, அறிக்கை, நோக்கம் இவற்றின் மீது பெரும் சந்தேகம் உருவாகிறது. ஏதோ அந்த கூட்டம் நீட் தேர்வு போன்ற பொது தேர்வே வேண்டாம் என்று சொன்னது போல் உள்ளது உங்கள் அறிக்கை.

ஆனால் உண்மை வேறு.அந்த PSC 92வது கூட்டத்தின் மொத்த அறிக்கை 2016-இல் வெளியிடப்பட்டது. அதில் மிக தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தவை யாதெனில், மருத்துவ படிப்பு மற்றும் மருத்துவ கட்டமைப்பு இரண்டையும் தெளிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு விவாதம் செய்தது.

அந்தக் கூட்டத்தின் முடிவில் நாட்டின் மருத்துவப் படிப்புகளின் தரம் மிக மோசமாக உள்ளது , அத்தோடு மேற்படிப்புக்கு செல்வதற்கான தகுதியும், மருத்துவம் சார்ந்த பயிற்சியில் ஈடுபடும் திறனும், மிக மிக குறைவாகவே உள்ளது என்றும், சர்வதேச அளவிலான தரத்திற்கு நாம் நம் மாணவர்களை தயார் செய்ய போதுமான மாற்றங்கள் தேவை என்றும்,அதில் மிக முக்கியமானது பள்ளி முடித்து மருத்துவ கல்லூரிக்கு வரும் மாணவர்களை போதுமான பாடத்திட்டத்தை படித்து தரத்தோடு தயார் செய்வது அவசியம் என்றும், ஆனால்,இந்திய அளவில் அந்தந்த மாநிலங்களில் அந்தந்த கல்லூரிகள் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளை நடத்துவது,அதனால் தரம் பாதிக்கப்படுவது பற்றி அனைத்தும் விரிவாக அறிக்கை பேசியுள்ளதை ஏன் மறைத்தீர்கள்?

அனைத்து மாநிலங்களும் மாணவர்கள் அதிகம் மதிப்பெண் எடுத்தால் போதும் என்ற மன நிலையில் தரமில்லாத கல்வி பாடத்திட்டத்தை வைத்து படிக்க வைப்பதால்தான் என்ன பயன்! நீட் தேர்வு போன்ற ஒரு பொது தேர்வின் மூலம் இந்திய அளவில் ஒரு பொதுவான தரத்திற்கு கொண்டு வருவது அவசியம் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. மேலும், இது தேர்வு மட்டுமே. கல்லூரிகளின் இடங்களை நிரப்பும் பணியை அந்தந்த மாநிலங்களே செய்து கொள்ளலாம். ஆனால், தேர்வின் தரத்தை உயர்த்த நிச்சயம் பொதுத்தேர்வு அவசியம் என்று சொல்லப்பட்ட வலுவான வாதத்தை ஏன் உங்கள் குழு பேச மறுத்துள்ளது???

3)தங்களுடைய முழு ஆய்வு அறிக்கையில் அனைத்து புள்ளி விவரங்களுமே 2011 பிந்தையதாக இருப்பது ஏன்?  ஏன் அதற்கும் முந்தைய புள்ளி விவரங்கள் தேவை என்று கேட்டீர்கள் என்றால், 2009-ல் சமச்சீர் கல்வியை அன்றைய முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார். அந்த சமச்சீர் கல்வியால் மாநில கல்வியின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இரண்டு விஷயங்களில் மக்கள் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியது...

ஒன்று ஏன் அடுத்த 4 ஆண்டுகளில் பெரும்பாலான Matriculation பள்ளிகள் CBSE பள்ளிக்கு மாறின? காரணம் Matriculation பள்ளிகளும் மாநில சமச்சீர் கல்வியை நடைமுறைப் படுத்த கட்டாயமாக்கப்பட்டதன் விளைவாக பெற்றோர்கள் கல்வித் தரம் வேண்டி CBSE பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்க ஆர்வம் காட்டினர். எனவே,இவர்கள் முன்னெடுத்த சமச்சீர்கல்வியே கல்வித் தரத்தை பெரிதும் பாதித்தது. இரண்டாவது  Matriculation பள்ளிகள் பல கோடிகள் செலவு செய்து CBSE பள்ளிகளாக வேகமாக மாறின. இதனால் மாநிலத்தில் CBSE பள்ளிகள் எண்ணிக்கை அதிகமானது.ஏன் CBSE பள்ளிகள் அதிகரித்தது என்ற அடிப்படை உண்மை இதுவே.

CBSE பள்ளிகள் எண்ணிக்கை கூடிவிட்டது அதற்கு நீட் காரணம் என்று ஆதாரமின்றி சொல்வது அடிப்படை உண்மையை மறைக்கும் வேலை இல்லையா?

4)HISTORY OF NEET   என்ற தலைப்பில் 14 பக்கத்தில் தங்கள் அறிக்கையில் NEET பொது தேர்வு நடத்துவது சார்ந்த சில வழக்குகளின் விவரங்களை மட்டுமே பதிவு செய்தது ஏன்?2017-இல் உச்சநீதிமன்றம் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளுக்கான இடத்தினை நிரப்ப வேண்டும் என்று இறுதி தீர்ப்பு கொடுத்ததே அதன் காரணம் என ஏன் தெரிவிக்கவில்லை?

எந்த அடிப்படையில் நீதி மன்றம் அதற்கு சில வருடங்கள் தமிழகத்திற்கு விலக்கு கொடுத்தது எனவும் விலக்கு நீட்டிக்க நீதிமன்றம் மறுத்தது ஏன் என்ற அந்த விவரமும் அறிக்கையில் இல்லாதது ஏன்?

5)அடுத்து CHAPTER-V பக்கம் 19ல் நீங்கள் NEET is Biased என்ற வாதத்தை வைத்துள்ளீர்கள். அதற்கு காரணம் Biology, Chemistry and Physics இந்த மூன்று பாடங்களில் மாணவர்கள் அவர்களின் பள்ளிக்கல்வியில் எந்த அளவுக்கு சிறப்பாக படித்துள்ளனர் என்பதை சோதிப்பதாக இல்லை என்ற கோணத்தில் வாதம் வைத்திருப்பது உண்மையை மொத்தமாக திரிக்கும் வேலை இல்லையா? NEET தேர்வு வைக்கப்படுவது மாணவர்கள், அவர்கள் 12 ஆம் வகுப்பில் படித்த கல்வியை, அதில் அவர்களின் திறனை ஆய்வு செய்வதற்கு அல்ல...மிக முக்கியமாக மருத்துவ படிப்பிற்கு தகுந்த மாணவர்களை தேர்வு செய்ய  MCI கொடுத்த பாடத்திட்டத்தில் போதிய திறன் மாணவர்களுக்கு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வதே ஆகும். இந்த இரண்டு நோக்கங்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு.

Medical council of India தரமான மருத்துவ படிப்பினை கொடுக்க போதுமான அளவில்  மாணவர்களை பள்ளியில் தயார் செய்யவே குறிப்பிட்ட பரிந்துரையை செய்கிறது.அதனை CBSE பாடத்திட்டத்தில் போதுமான அளவு நடத்துகிறார்கள் , அதே போல் ஏன் மாநிலப்பாடத் திட்டம் மேம்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தால் சரி. அதை விடுத்து மாணவர்கள் படித்த பாடத்தில் இருந்து கேள்வி கேட்கப்படவில்லை என்று அடிப்படையிலேயே மிக தவறான கோணத்தில் வாதத்தை போலியாக கட்டமைப்பது ஏமாற்றும் செயல் இல்லையா?

மாணவர்கள் படிக்க மாட்டோம் என சொல்லவில்லை....தமிழக அரசு பாடத்திட்டத்தை மேம்படுத்தாமல் இருப்பது தான் அன்று முதல் இன்று வரை தவறு. அதனால் தான் உச்ச நீதிமன்றம் போதுமான கால அவகாசம் கொடுத்தது.அந்த காலகட்டத்திலும் எதையும் மேம்படுத்தவில்லை தமிழக அரசு.

எனவே CBSE பாடத்திட்டம் போல் மாநில அரசு தரத்தை மேம்படுத்தாததே பிரச்சனை என்பதை மாற்றி மாநிலப்பாடத் திட்டத்தில் கேள்வி இல்லை என்று திசை திருப்பும் செயல் நீதிபதிக்கு அழகா? சரியா? 6)மொத்த அறிக்கையில் எங்குமே Jawahar Navodaya Vidyalaya பள்ளிகள் பற்றிய எந்த புள்ளிவிவரமும் இல்லை ஏன்?

நாடு முழுவதும் கடந்த 35 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சுமார் 2,50,000  பிந்தங்கிய பகுதி மாணவர்கள் மத்திய அரசின் இலவச கல்வி  வசதியை பெற்றிருக்கின்ற இந்த நிலையில் அது ஏன் தமிழகத்தில் இல்லை? என்ற நியாயமான கேள்வியை ஏன் தங்கள் அறிக்கை எழுப்ப மறுக்கிறது? அல்லது மறைக்கிறதா?

ஏன் எழுப்ப வேண்டும்?ஏன் என்றால் 2017 தமிழகம் நீட் விலக்கு நீட்டிப்பு கேட்ட அதே ஆண்டில் நவோதயா பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் வெற்றி சதவீதம் 83.72%.  கிராமப்புற மாணவர்கள் NEET தேர்வு சார்ந்து கவலை தெரிவிக்கும் உங்கள் அறிக்கை , CBSE பாடத்திட்டம் சார்ந்து கவலை தெரிவிக்கும் உங்கள் அறிக்கை அதே CBSE  தரத்தில் இலவசமாக கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி வழங்கும் நவோதயா பள்ளிகள் ஒரு பள்ளி கூட தமிழகத்திற்கு வரவிடாமல் செய்த அரசியல் கட்சிகளின் நோக்கத்தை கேள்வி எழுப்பாமல் கடந்து செல்வது எந்த வகையில் சரி?

ஒவ்வொரு ஆண்டும் கிராமப்புறத்தில் இருந்து பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கவல்ல நவோதயா பள்ளிகளை, இந்தி எதிர்ப்பு என்ற போலி அரசியல் மூலம் ஏற்படுத்தப்பட்ட பாதிப்பையும் நீதிபதிகள் பேசி இருக்க வேண்டும் அல்லவா? 

7) NEET தேர்வு வருவதற்கு முன்பு பிப்ரவரி மாதம் COMEDK ,  ஜூன் மாதம் AIIMS, மே மாதம் AFMC, BHU , ஏப்ரல் மாதம் MIRM  என நாடு முழுவதும் நடந்த Medical / Dental Entrance Examinations விவரங்களை எந்த இடத்திலுமே ஏன் அறிக்கை பேச மறுக்கிறது? சுமார் 20க்கும் மேற்பட்ட தேர்வுகள் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு ஊர்களில் அவர்கள் இஷ்டத்திற்கு நடத்திய தேர்வுகள் அதனால் மாணவர்கள் சந்தித்த சவால்கள் அந்த காலகட்டத்தில் கிராமப்புற மாணவர்கள் எந்த பாதிப்பை எதிர் கொண்டார்கள் என்ற எந்த விவரமும் அறிக்கை பேசவில்லையே ஏன்?

நாடுமுழுவதும் இருக்கும் top 25 மருத்துவக்கல்லூரிகள் மட்டும் கிடையாது....நாடு முழுவதும் அந்த அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகள் அவர்கள் இஷ்டத்திற்கு தேர்வு நடத்தியது பற்றி முழு புள்ளி விவரத்தை வெளியிட்டால் தானே இன்று அதற்கு மாற்றாக ஒரே தேர்வாக NEET தேவையா?இல்லையா? என்ற முக்கியமான அடிப்படைக் கேள்விக்கு சரியான விடையை தேட முடியும்? 

8)நீங்கள் கொடுத்துள்ள தகவல்கள் புள்ளி விவரங்களை பற்றி உங்களிடம் தான் கேள்வி எழுப்புவோம். ஏன் என்றால் அந்த அறிக்கையில் மிக தெளிவாக 36 பக்கத்தில் இந்த புள்ளி விவரங்களை சேகரிப்பதில், அதை சரி பார்ப்பதில்,எந்த மாதிரியான வேலை செய்துள்ளோம் என்று உங்கள் குழு கூறியுள்ளது.எனவே அதில் உள்ள புள்ளி விவரங்களை கேட்கக்கூடாது என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது. 

ஆக அதன் மீதான கேள்விகள் அட்டவனை 7.6  முதல் 7.9 வரை புள்ளி விவரங்கள் அனைத்தும் அரசுப்பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாகவும், தனியார் CBSE, தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க நீட் தான் காரணம் என சொல்லுவது உண்மைக்கு நேர்மாறானது. 2011 முன்பு புள்ளி விவரங்களை திட்டமிட்டே மறைத்துள்ளது. அதற்கு முன்பும் கூட அரசு பள்ளிகளில் தமிழ் வழி கல்விக்கு போதிய ஆர்வம் மக்களிடம் கிடையாது. அது தரமானதாக இல்லை என்பது தான் மக்களின் உண்மையான உணர்வு. வசதி வாய்ப்பு கொண்ட அனைவருமே அரசு பள்ளியை தவிர்த்து CBSE ,  Matriculation பள்ளிகளில் தான் பிள்ளைகளை சேர்த்தார்கள். அரசு பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் வீட்டு பிள்ளைகள் கூட அரசு பள்ளிகளை விரும்புவது இல்லை.இன்றுவரையில்.....

இது தான் உண்மை.இந்த உண்மை புரிய 2011 முந்தைய புள்ளி விவரத்தையும்  அறிக்கையில் வெளியிட்டிருந்தால் தெரிந்திருக்கும்.ஆனால்,அதை திட்டமிட்டு மறைத்துள்ளீர்கள். ஏன்?AK ராஜன் அவர்களின் குழுவில் உள்ளவர்கள் குழந்தைகள்,பேர குழந்தைகள் எங்கே படிக்கிறது? ஏன் ? எதனால் என்று கொஞ்சம் வெளிப்படையாக பேச குழு தயாரா?

9)அட்டவணை 7.14 அதில் நீட் தேர்வுக்கு பின்பு அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைவது போல் காட்ட முயற்சிப்பது போல் உள்ளது. உண்மையில் உங்கள் குழுவினர் இது வரை அரசு பள்ளியில் படித்து மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்தவர்கள் எண்ணிக்கையை ஏன் ஒரு முழு வெள்ளை அறிக்கையாக வெளியிடவில்லை? சமச்சீர் கல்விக்கு பின் CBSE பாடத்திட்டத்திற்கு மாறிய பள்ளிகள் விவரங்கள் தெரிந்தாலே புரிந்து விடும் இதன் உண்மை தன்மை. சமச்சீர் கல்வி திட்டத்திற்கு பின் மக்கள் , மாநில அரசின் கல்விதிட்டத்திற்கு கீழ் இருந்த தனியார் கல்வி நிலையங்கள் மொத்தமாக  CBSE நோக்கி நகர்ந்தது தான் காரணம் தவிர நீட் அல்ல. அப்போதும் மாநில அரசின் கல்விக்கொள்கையில் ஏற்பட்ட பெரும் தரமின்மையும் , கல்வி நிலையங்கள் தங்களை CBSE தரத்திற்கு மாற்றி கொண்டதும், மக்களும் சமச்சீர் கல்வியை விட்டு ஓட்டம் எடுத்ததுமே ஆகும்.எனவே அறிக்கையை சமச்சீர் கல்விக்கு முன் பின் என தெளிவாக பிரிக்க முடியுமே ஒழிய நீட் தேர்வின் அடிப்படையில் அல்ல.வேண்டுமென்றால் இரண்டின் அடிப்படையிலும் பிரித்து ஒப்பிட்டு வாதம் செய்ய தயாரா?

10) அட்டவணை 7.38 மீண்டும் மீண்டும் தேர்வு முயற்சி செய்து எழுதினால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை உறுதி செய்ய முடிகிறது. ஆனால், அதனை தங்கள் அறிக்கை வேறு விதமாக பதிவு செய்கிறது. அதாவது முதல் முயற்சியிலேயே வெற்றி பெறுவோர் சதவீதம் நீட் முன்பு அதிகம் தற்போது குறைவு. அதாவது 92.85 % 2010ல் நீட் முன்பாக முதல் முயற்சியிலேயே தேர்வில் வெற்றி பெற்றனர் ஆனால் 2020ல் 30.6% குறைந்துவிட்டதாக கூறுவது சரியான வாதமல்ல.

மீண்டும் தெளிவுபடுத்த வேண்டியது...தேர்வில் வெற்றி பெற்றஉடனே கல்லூரிக்கு  செல்ல வேண்டும் என்ற சாதாரண மனநிலையை தான் இந்த அறிக்கையிலும், குழுவின் எண்ணமாக, நோக்கமாக உள்ளதாக தெரிகிறது. ஆனால்,Medical Council of India  தேர்வு வைப்பது, திறனை மேம்படுத்திக் கொண்ட மாணவர்களை கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்பது தான். எனவே,வெற்றி...2 வருடம் காத்திருந்து தொடர் முயற்சியில் கிடைப்பது தவறு அல்ல என்று நல்ல ஆரோக்கியமான விவாதமாக எடுத்து சொல்லாத வகையில் இருக்கிறது இந்த குழுவின் அறிக்கை.

மேல் உள்ள பத்து கேள்விகளுக்கு AK ராஜன் அவர்கள் குழு பதில் அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேல் உள்ள கேள்விகள் தங்கள் நீட் ஆய்வு அறிக்கையில் முதல் பாதியில் இருந்து கேட்கப்பட்டவையே. அதாவது முதல் 80 பக்கங்களில் எனக்கு எழுந்த கேள்விகள். மொத்த அறிக்கை 165 பக்கங்கள். அடுத்த பாதிக்கான கேள்விகளை இதற்கு தங்களிடம் கிடைக்கும் பதிலின் அடிப்படையில் கேட்பது தான் சரியாக இருக்கும் என்பதால் உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இந்த கடிதத்தை படிக்கும் அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்பும் முக்கியமான விசயம். 2002 நானும் பொது தேர்வு எழுதும் போது நான் படித்த பாடத்தில் இல்லாமல் கேள்விகள் CBSE பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதை நினைத்து கோபமும் வருத்தமும் அடைந்தேன். ஆனால் பின்னால் தவறு CBSE  மீதோ, பொது தேர்வு நடத்துவதன் நோக்கத்தின் மீதோ அல்ல மாறாக இங்கே மாநில கல்வி திட்டத்தை தமிழக அரசு தரமில்லாமல் தயார் செய்வதே காரணம், அதிகம் மதிப்பெண், அதிகம் பேர் தேர்ச்சி என்பதை மட்டுமே கணக்கில் கொண்டு தரமில்லாத பாடத்திட்டத்தை வடிவமைத்தது தான் குற்றம். தமிழக அரசு பள்ளி மாணவர்கள் படிக்க தயாராக உள்ளனர் ஆனால் பாடத்திட்டத்தை நடத்தவும் தரமான பாடத்திட்டத்தை கொடுக்கவும் போதிய அக்கறை இங்கே ஆட்சி செய்த ஆட்சியாளர்களுக்கும், செய்யும் ஆட்சியாளர்களுக்கும் இல்லை என்பது தான் உண்மை}

{மக்கள் பார்வைக்கு இந்த கடித்தை முன்வைக்கிறேன். இங்கே மோசமான ஒரு அரசியலை மாணவர்கள் கல்வி விவகாரத்தில் செய்வதால் இதை மக்கள் முன் வைப்பது சரி என நினைக்கிறேன் எனவே வெளியிட்டுள்ளேன். அத்தோடு மாநில கல்விதுறை அமைச்சருக்கும் , மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சகத்திற்கும் விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளோம். மேற் குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் என்னிடம் போதிய ஆதாரங்களும் Dataவும் உள்ளன. எனவே AK ராஜன் குழுவினர் பொது மக்கள் முன் கேள்விகளுக்கு பதில் அளிக்க தயார் என்றால் நான் மாரிதாஸ் எடுத்து வந்து சந்திக்க தயாராக உள்ளேன்.  இவ்வாறு மாரிதாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாரிதாஸ் எழுப்பிய கேள்விகள் திமுக அமைத்த குழுவை நோக்கி எழுப்பிய நிலையில் கடும் பின்விளைவுகளை சந்தித்துள்ளது, மாரிதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வியாளர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மாணவர்கள் தரப்பிலும் ஆதரவு அதிகரித்து வருவதால் திமுக என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.