
ஜாமீன் ரத்து விவகாரம் ஒருபக்கம் சூடாகிவரும் சூழலில், டாஸ்மாக் மீதான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ‘கிரீன் சிக்னல்’ காட்டியிருப்பது, பாலாஜி தரப்பை ஏகத்துக்கும் பதற்றமாக்கியிருக்கிறது.
கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை, டாஸ்மாக் தலைமையகம், அம்பத்தூர் குடோன் உள்ளிட்ட இடங்களில் சோதனையிட்ட அமலாக்கத்துறையினர், சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிவித்தனர். சோதனையின் முடிவில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளை விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி சம்மனும் அனுப்பினர். இதற்கிடையே, ‘டாஸ்மாக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்ட விரோதமானது’ என அறிவிக்கக் கோரி, டாஸ்மாக் தரப்பிலும், தமிழக அரசின் தரப்பிலும் மூன்று ரிட் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகின.
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி பரபரப்பாக நடந்த அந்த விசாரணையின் முடிவில், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்தது. இதில் மோசடி நடந்தால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. இந்த வழக்கைப் பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள். அதை நாங்கள் கவனிக்க முடியாது. ஆனால், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட் பரிசீலிக்க முடியும். இந்த வழக்கில், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது. எனவே, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில், சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்...” என்று அதிரடியாக உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றத்தின் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு.
இந்தத் தீர்ப்பால் துறையின் அமைச்சராக செந்தில் பாலாஜியும், துறை அதிகாரிகளும் ஆடித்தான் போயிருக்கிறார்கள். டாஸ்மாக் வழக்கு விசாரணை, ஒரு குண்டாகப் பற்றவைக்கப்பட்டிருப்பது அரசியல் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் பெரும் பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது.இது குறித்து அமலாக்க துறை கூறுகையில் ‘சோதனையின்போது எந்த அதிகாரியையும் அமலாக்கத்துறை துன்புறுத்தவில்லை. சோதனைக்கு முன்பாக மாநில அரசின் ஒப்புதலை அமலாக்கத்துறை பெறத் தேவையில்லை’ என நீதிமன்றமே சொல்லிவிட்டதால், எங்களுடைய விசாரணைக்கு இருந்த தடைகளெல்லாம் தகர்ந்துவிட்டன. டாஸ்மாக் அலுவலகத்தில் நடந்த சோதனையின் முடிவில், அதிகாரிகள் சிலருக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்தோம். அதன்படி, இனி விசாரணையைத் தொடருவோம். டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் ஐ.ஏ.எஸ்., எங்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். செந்தில் பாலாஜிக்கும் இதில் சிக்கலிருக்கிறது” என்றனர்.
இந்த நிலையில் தான் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்களை சப்ளை செய்யும் சிவா டிஸ்டிலரீஸ் நிறுவனம் தொடர்புடைய பல்வேறு இடங்களில் ஈண்டும் அமலாக்கத்துறை நடத்தியது. இந்த சோதனையின் முடிவில், டாஸ்மாக்கிற்கு மதுபான சப்ளை செய்ததில் பல ஆயிரம் கோடி வரை அந்நிறுவனம் முறைகேடு செய்திருப்பதற்கான ஆவணங்களை கைப்பற்றியது. இது தமிழக அரசு தலையில் இடியை இறங்கியுள்ளது மேலும் சப்ளை நிறுவனம் அப்ப்ரூவர் ஆகவும் தயாராகி உள்ளார்களாம்.இந்த கடந்த இரண்டு நாள்களாகவே கடுமையான மன உளைச்சலில் இருக்கிறாராம் அமைச்சர் செந்தில் பாலாஜி. அவரைப் பார்ப்பதற்காக கரூரிலிருந்து வந்தவர்களைச் சந்திக்கக்கூட மனமில்லாமல், சரியாகத் தூக்கமும் இல்லாமல் உழல்வதாகச் சொல்கிறார்கள் கரூர் விசுவாசிகள்.
ஏப்ரல் 24-ம் தேதி நள்ளிரவு பாலாஜியிடம் சில சீனியர்கள் பேசியதைத் தொடர்ந்து, அவரது வீட்டிலிருந்து முதல்வரின் வீட்டுக்கு ஒரு கடிதம் சென்றதாகக் கூறப்படுகிறது. சில காவல்துறை அதிகாரிகள்தான் அந்தக் கடிதத்தைப் பெற்று, சென்டாப் சாலையில் சேர்த்திருக்கிறார்கள். அந்தக் கடிதம் பாலாஜியின் ராஜினாமா கடிதமாகக்கூட இருக்கலாம். கட்சித் தலைமை பாலாஜியைப் பாதுகாக்க நினைத்தாலும், சட்டமும் நீதிமன்றங்களும் பாலாஜியை விடுவதாக இல்லை. வழக்குகள் வசமாக பாலாஜியின் கால்களைச் சுற்றிவளைத்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த முறை விளைவுகள் அதிர்வு கூடியதாகத்தான் இருக்கும்!