தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் இரு சமூக மோதலுக்கு திரைப்படங்கள் பல காரணமாக அமைகின்றன என்ற குற்றசாட்டை அரசியல் வாதிகள் மட்டுமின்றி திரைத்துறையை சேர்ந்தவர்களும் அதிக அளவில் குரல் எழுப்பி வரும் நிலையில் இயக்குனர் தங்கர் பாச்சன் மேடையில் மாரி செல்வராஜ் இருக்க ஆணிதரமாக தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது.
இயக்குனர் சேரன் நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ்க்குடிமகன் என்கிற படம் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதை முன்னிட்டு இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகர் சரத்குமார், இயக்குனர்கள் தங்கர் பச்சான், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்க்குடிமகன் என டைட்டில் வைக்கப்பட்டதால் தமிழ் பற்றியும் டிரைலரில் காட்டப்பட்ட சாதிய பாகுபாடுகள் குறித்தும் இயக்குனர் அதிக அளவில் பேசுவார்கள் என கூறப்பட்டது.
அதற்கேற்றபடி முதலில் பேசிய இயக்குனர் தங்கர் பச்சான், “சாதிய கொடுமைகளை நீர்த்துப்போக செய்ய திரைப்படங்களால் நிச்சயம் முடியும். அதேசமயம் நாம் எடுக்கும் படங்கள் நம்முடைய வலியை சொல்கிறேன் என்கிற பெயரில் இரு தரப்பினருக்குள் பிரிவினையை உண்டு பண்ணும் விதமாக இருக்கக் கூடாது. இரு தரப்பினரையும் எப்படி இணைக்க முடியும் என்கிற வகையிலேயே தான் படங்களை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.
இது மேடையில் அமர்ந்திருந்த மாரி செல்வராஜையும் அவரது படங்களையும் மனதில் வைத்தே தங்கர் பச்சான் பேசியதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. இயக்குனர் மாரி செல்வராஜை பொறுத்தவரை சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில் கூட ஒடுக்கப்பட்ட இடத்தில் இருந்து ஒரு மனிதர் எப்படி அரசியலில் நுழைந்து அனைத்து சமூகத்தினரும் கையெடுத்து கும்பிடும் நிலைக்கு எப்படி உயர்கிறார் என்கிற கருத்தை கூறியிருந்தார்.
ஆனால் அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரமாக காட்டப்பட்ட ரத்தினவேலு என்கிற கதாபாத்திரத்தை தான் இன்றைய இளைஞர்கள் பல பேர் ஆதர்சமாக கொண்டாடி வருகின்றனர் என்பதை சமீப காலமாக சோசியல் மீடியாவில் பார்க்க முடிகிறது.
தொடர்ச்சியாக பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் போன்றோர் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை காட்டுவதாக படம் எடுத்து பின்பு இரு சமூகங்கள் இடையே பிரச்சனையை வளர்ந்து வருவதாக குற்றசாட்டு எழுந்த நிலையில் இயக்குனர் தங்கர் பச்சான் நேரடியாக திரைப்படங்கள் ஒற்றுமையை வளர்க்க வேண்டுமே தவிர பிரிவினையை வளர்க்க கூடாது என பேசி இருப்பது நேரடியாக மாரி செல்வராஜிற்கு விழுந்த அடியாக பார்க்க படுகிறது.