முன்பெல்லாம் திருமணம் என்றாலே 10 - 15 நாட்களுக்கு வீடு கலைகட்டி இருக்கும். அதோடு திருமணம் செய்து கொள்ள போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக கூட பார்த்திருக்க மாட்டார்கள், பேசி இருக்க மாட்டார்கள்.. இரு குடும்பத்தாரில் பெற்றோர்களின் சம்மதமே அங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படும். அதேபோன்று ஒரு பெண் தனது கழுத்தில் தாலியை வாங்குவதற்கு முன்பு தலைகுனிந்து வெட்கத்திலும் பெற்றோர்களை பிரியப் போகிறோமே என்ற ஒரு வேதனையிலும், அச்சத்திலும், கண்ணீர் மல்க மேடை ஏறி மாப்பிள்ளை பக்கமே திரும்பாமல் தலை குனிந்தபடியே தாலியை வாங்கி கொள்வாள். ஆனால் இன்று இவற்றிற்கு தலைகீழான ஒரு திருமணம் தான் நடைபெறுகிறது. அதில் தவறு என்று எதையும் குறிப்பிட்டு கூற முடியாது ஏனென்றால் கடந்த வருடங்களை விட நடப்பு வருடங்கள் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களில் பெண்களின் பங்கானது குடும்பத்தில் மட்டுமல்ல நாட்டிலும் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது.
மேலும் அவர்கள் வருமான ரீதியாக எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அவர்கள் குடும்பத்தையும் நாட்டையும் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வழி வகுக்கிறது. அதே சமயத்தில் பெற்றோர்களின் சம்மதத்தில் அதிக காதல் திருமணங்களும் நடைபெறுகிறது. காதல் திருமணங்கள் இல்லை என்றால் பெற்றோர்கள் பார்த்து வைக்கப்படும் வரன்களும் பேசி பழகி பிடித்த பின்னரே திருமணம் என்ற ஒரு ஒப்புதலுக்கு வருகின்றனர். மேலும் திருமணம் என்பது முடிவான பிறகு பெரும்பாலான திருமணங்கள் ஆடம்பரமாக நடப்பதை சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்கள் மூலமே காணலாம். ஏனென்றால் இன்றைய உலகம் சமூக ரீதியிலான உலகம், மேலும் அனைத்துமே இன்டர்நெட் ஆக்கப்பட்ட உலகம் இதனால் தங்கள் திருமணம் மற்றும் தங்கள் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட வேண்டும், அதை பார்த்து பலர் பகிர்ந்து பல பாராட்டுக்களையும் லைக்ஸ்களையும் நமக்கு அள்ளிக் குவிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையிலே பல கல்யாணங்கள் ஆடம்பரமாக செய்யப்படுகிறது.
ஆனால் அதற்கு விருப்பப்பட்டு சிலர் அதிக கடன்களையும் வாங்கி திருமணத்திற்கு பிறகு கடனை அடைப்பதற்காகவே பாடுபடுகிறார்கள். அதே சமயத்தில் முன்பு இருந்த செலவுகளை விட தற்போது திருமணத்திற்கு ஆகின்ற செலவானது இரண்டு மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆடை மற்றும் தங்கத்திற்கு அதிக தொகை ஒதுக்கப்படுகிறது என்றால் மேக்கப் மற்றும் போட்டோகிராபிக்கு அதிக அளவிலான தொகையும் ஒதுக்கப்படுகிறது. மேலும் திருமண நாளன்று பல ப்ரோக்ராம்களையும் ஏற்பாடு செய்து ஆட்டம், பாட்டம் என கலைகட்டுவதற்கு தனித்தொகை ஒதுக்கிடப்படுகிறது. இப்படி ஆண், பெண் இருவீட்டாரும் பல லட்சங்களை செலவு செய்து திருமணத்தில் நடத்தி முடிக்கிறார்கள். ஆனால் சமீபத்தில் எந்த ஒரு ஆடம்பாட்டமும் இன்றி செலவும் இன்றி சாதாரணமாக மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் தனது பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் மட்டும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ஸில் திருமணத்தை எடுத்துக்கொண்டு செல்போனில் போட்டோ எடுத்து மாலை மாற்றிக் கொண்டனர்.
இந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது மேலும் இதை பலரும் பாராட்டி இந்த காலத்தில் இப்படியா!! என ஆச்சரியமாக கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் இதற்கு எதிர்மறையான மற்றுமொரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் மணப்பெண் மாப்பிள்ளைக்காக ஒரு நடனத்தை ஆடுகிறார். அவருடன் சேர்ந்து சில பெண்களும் நடனம் ஆடுகின்றனர். இதற்கு சமூக வலைதளம் முழுவதும் பல கமெண்ட்கள் முன்வைக்கப்படுகிறது. மேலும் முன்பெல்லாம் ஆண்கள் பெண்களுக்கு எப்படி நடனமாடி சர்ப்ரைஸ் கொடுப்பார்கள். ஆனால் தற்போது பெண்கள் இந்த வேலையில் இறங்கி விட்டனர் என விமர்சனமும் எழுந்து வருகிறது.