திருப்பத்துார்: 'ஒரு நுாறு ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' என, துரைமுருகன் சொகுசு பங்களாவில் திருட வந்தவர்கள், தங்கள் ஆதங்கத்தை நோட்டிலும், சுவற்றிலும் கொட்டி சென்றுள்ளனர்.
தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், 25 ஏக்கரில் மிக பெரிய சொகுசு பங்களா உள்ளது. காவலாளி பிரேம்குமார், 45, வசிக்கிறார். கடந்த, 12ல் பங்களா கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, இரண்டு பீரோக்களை உடைத்துள்ளனர். எதுவும் சிக்காததால், 'சிசிடிவி ஹார்டு டிஸ்க்'கை எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து, ஏலகிரிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், துரைமுருகனின் சொகுசு பங்களா சுவற்றில், 'ஒரு, 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா' எனவும் மேலும் கட்சியை குறிப்பிட்டும் சில வாக்கியங்களை திருடர்கள் எழுதி வைத்துள்ளனர். அத்துடன்,அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில்,
ஒரு ரூபாய் கூட இல்ல நாங்க எடுக்கல எனவும், 100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' எனவும் நீயெல்லாம் திமுகவில் இருந்து என்ன பயன் எனவும் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளனர்.மேலும், அவர்கள் ரம்மி விளையாடி, சீட்டு கட்டுகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். அவற்றில் ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என தனிப்படை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
துரைமுருகன் சொகுசு பங்களா அருகே உள்ள,மற்ற பங்களாக்களில் இருந்த, 'சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது சம்பவத்தன்று கார்களில் 10 பேர் வந்ததும், திரும்பி செல்லும் போது திகிருடர்களே ஒருவரை தாக்கியதும் தெரியவந்துள்ளது.
திருடர்கள் தாக்கிய நபர், துரைமுருகன் பங்களாவில், நிறைய பணம் இருப்பதாக துப்பு கொடுத்தவனாக இருக்கலாம் என்பதாகவும், பங்களாவில் பணமில்லை என்பதால் அவரை திருடர்கள் அடித்திருக்கலாம் எனவும்,வாணியம்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பங்களாவிலும், அதே நாளில் திருடர்கள் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று, அங்கும் எதுவும் இல்லாததால் அங்கிருந்த குறிப்பு புத்தகத்திலும், சுவற்றிலும் இதே மாதிரி எழுதிச் சென்றது தெரிந்தது.
கையெழுத்தை வைத்து, அவர்களை பிடித்து விடுவோம்' என, போலீசார் கூறினர். துரைமுருகன் வீட்டில் திருடர்கள் எழுதிவைத்துவிட்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.