Tamilnadu

வீரமணி திடீர் சர்ச்சை அறிக்கை கைது செய்ய முதல்வர் தனி பிரிவில் குவியும் புகார்! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை !

tamilnews
tamilnews

தீபாவளி, ஆயுதபூஜை, விஜயதசமி உள்ளிட்ட 10 பண்டிகைகள் பெயரை குறிப்பிட்டு இந்து பண்டிகைகளை புறக்கணிக்க வேண்டும் என்று வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார், இவை அனைத்துமே இந்து பண்டிகைகள் 100% தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து வீரமணி சர்ச்சை அறிக்கை பின்வருமாறு :- ஓர் இனத்தின், மொழியின் பண்பாடு, நாகரிகம் என்பனவற்றை அழிக்க படையெடுத்து வந்தவர்கள் இனப் பகைவர்கள்; அம்மொழி, நாகரிக, பண்பாட்டுப் பகைவர்களின் முதல் குறியே அந்நாட்டு, இன மக்களின் மொழியும், பண்பாடும்தான்.பண்பாட்டைச் சிதைத்து சின்னாபின்னமாக்கவே அவர்தம் பண்டிகைகளைத் திணித்து, நம் மூளைகளுக்குச் சாயமேற்றி, காயப்படுத்தி, நமது அடையாளத்தையும் மெல்ல மெல்ல அழித்து, எதிரிகள் வயப்பட்டு ‘அதனை நமது’ என்று மாற்றிவிடுவது.

அதற்கு முதலும் முக்கியமானதும் பண்டிகைகளைப் புகுத்துவது -விழா வேறு - பண்டிகை வேறு!‘‘விழாக்கள்’’ என்கிறபோதுள்ள மகிழ்ச்சி, ‘‘பண்டிகை’’ என்று என்கிறபோது வருவதில்லை; என்றாலும், பண்டிகை என்ற வடமொழி, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நுழைந்து, ‘வந்தவர் வஞ்சகர் தமிழால் செழித்தார், வாழ்வினில் உயர்ந்தபின் தமிழையே பழித்தனர், நம்செயல் ஒழுக்கங்கள் பற்பல அழித்தனர்’ என்னும் நிலையே ஏற்பட்டது.

இன்று கொண்டாடப்படும் ‘விஜயதசமி’ என்றால் என்ன?ஒரு விழா நமக்குரியதா, இல்லையா என்று கண்டறிய எளிய வழி அதன் பெயரைப் பார்த்தாலே தெரியும். நம் மொழியா? பிற மொழியா? என்பது புரியும்.விஜயதசமி,தீபாவளி,விநாயகர் சதுர்த்தி,கோகுலா அஷ்டமி,ஸ்ரீராம நவமி,ஆவணி அவிட்டம்,அட்சய திருதியை,நவராத்திரி,சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை.மேற்கண்ட விழாக்கள் தமிழ்ப் பண்பாட்டுக்குரியனவா? ஆரியத்திடமிருந்து திணிக்கப்பட்டவை அல்லவா? என்று அவற்றின் பெயர்களைப் பார்த்தாலே, எவருக்கும் புரியவேண்டுமே!

ராக்கி என்னும் புதிய கயிறு திரிப்பு! புதிதாக சில ஆண்டுகளாக வடநாட்டில் (பெரிதும் ஆர்.எஸ்.எஸ். பின்னணியுடன்) மக்களிடையே திணிக்கப்பட்ட மயக்க மருந்து ‘ராக்கி’ கயிறு கட்டுதல் என்ற ஒன்று. சகோதரப் பாசம் என்று கூறி, லாவகமான படையெடுப்பு!பல ஆண்டுகளாக நம் மகளிர் ‘மருதாணி’யை கையில் இட்டுக் கொள்வார்கள் - இப்பொழுது புதிதாக அதற்கு ஒரு  பெயர் ‘மெகந்தி’ என்று வழங்கி, அதனை ‘விவாக சுபமுகூர்த்தம்‘ என்ற திருமண நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் நிகழ்ச்சியாக்கி விட்டனர்.

60 தமிழ் ‘வருஷங்கள்’ - ‘ஆண்டுகள்’ அல்ல - எதிலாவது ஒரு தமிழ்ப் பெயர் உள்ளதா? தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும்தானே கேட்டது. தமிழ்ப் போர்வை போர்த்தி இன எதிரிகளின் அனுமாராக இன்று இருக்கிற எவராவது இதுபற்றி எதிர்த்துப் பேசியிருக்கிறார்களா?

உண்மையான தமிழ் உணர்வாளர்கள், தனித்தமிழ் ஆர்வலர்கள் மட்டுமே தந்தை பெரியாரின் - திராவிடர் இயக்கத்தின் இப்பண்பாட்டுப் படையெடுப்புத் தடுப்பு முயற்சியினை ஆதரித்தார்கள்; இன்றும் ஆதரிக்கின்றனர். போலிகளும், காலிகளும் எதிரிகளின் கட்டை விரலைத்தான் சூப்புகின்றனர். மகாவெட்கக்கேடான நிலை.

தமிழ் இலக்கியங்களில் இந்தப் பண்டிகைகள் உண்டா?அறுவடைத் திருநாளாம் - திராவிடத் திருநாளான பொங்கல் விழாவைக்கூட ‘மகர சங்கராந்தியாக்கினர்’ சங்கராச்சாரியார்கள்.வேளாண்மையை பாவகரமான தொழில் என்றது ஆரிய மனுதர்மம்! திராவிடப் பண்பாடான தமிழோ ‘உழுவோர் உலகத்தேருக்கச்சாணி’ என்கிறது. ‘ஜெயந்தி’ என்ற சொல் நம்மொழியா? ‘விஜயதசமி’ அன்றுதான் எழுதப் பயிற்சி  என்பதும், சரஸ்வதி பூஜை என்பதும் முன்பு இருந்திருந்தால், நமது பண்பாட்டுக்கு எதிரான இவை குறித்து  இலக்கியங்களில் சான்றுகள் உள்ளனவா? ‘விஜயதசமி’ என்று இன்று கொண்டாடப்படும் அந்தப் பண்டிகையின் வரலாறு என்ன?

‘‘விஜயதசமி - இஃது ஆடி மாதம் சுக்லபக்ஷம் ஏகாதசி முதல் அய்ப்பசி சுக்லபக்ஷம் துவாதசி வரைக்கும் நாலு மாதமும் யோகிகளுக்கு விரதம்.முதல் மாதம் சாதங்களாகா-இரண்டாம் மாதம் தயிராகா -மூன்றாம் மாதம் பால் ஆகாது-நான்காம் மாதம் பருப்பு, கறிகள், உப்பு, புளி முதலிய ஒன்றுமே ஆகா -அய்ப்பசி மாதம் சுக்லபக்ஷ; துவாதசியில்  சிராப்தி பூஜை செய்து எல்லாப் பலகாரங்களையும் சாப்பிடுக.இதற்கும் எழுத்துக் கற்றலுக்கும் ஏன் முடிச்சு? தொடக்க விழா?(‘அபிதான சிந்தாமணி’, பக்கம் 1816)

நமக்குரிய அடையாளம் காண்பீர்!வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சி வேண்டும் என்றால், இந்த விழாக்களில் நமக்குரியதை மட்டும் அடையாளம் கண்டு- அவற்றை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுக - மற்ற ‘பண்டிகைகள்’ என சொல்லப்படுனவற்றைப் புறக்கணியுங்கள்! மீண்டும் பொங்கல் - தமிழ்ப் புத்தாண்டு என்ற கலைஞரின் ஆணை புத்துயிர் பெற்று, புதுத் திருப்பத்தை உருவாக்கி, துரோகங்களைத் தமிழ் இலக்கியத்தில் களைந்தெறிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது - விரைந்து பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்! என சர்ச்சையாக பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர், வீரமணி என்னதான் கத்தினாலும் அவரது வீட்டிலேயே அவரை மதிக்க மாட்டார்கள், வீரமணி மகன் திருமணமே பிள்ளையார் கோவிலில்தான் நடைபெற்றது என கராத்தே தியாகராஜன் குறிப்பிட்டுள்ளார், மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினிடம் வீரமணி இவ்வாறு பேசியிருந்தால் என்ன ஆயிருக்கும் என இந்து அமைப்புக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

அதே நேரத்தில் வீரமணியை சமூக ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி செய்கிறார் என்று கைது செய்யவேண்டும் தமிழகத்தில் இந்த விழாக்கள் அனைத்தும் காலம் காலமாக கொண்டாப்பட்டு வருகின்றன, தமிழர் பண்டிகையை வேண்டுமென்றே இழிவு படுத்தும் வீரமணியை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும் இல்லை என்றால் மத மோதல்கள் உண்டாக வாய்ப்புகள் இருப்பதாக பலரும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.அமைதியாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்க வீரமணி போன்றோர் முயலுவதாக முதல்வர் தனி பிரிவில் புகார் அதிகரித்து வருகிறது.தமிழக காவல்துறை வீரமணியை கைது செய்யவேண்டும் என்ற அழுத்தமும் அதிகரித்துள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்குமா?