Tamilnadu

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் அராஜகம்... எப்படிச் சமாளிக்கப்போகிறார் மு.க.ஸ்டாலின்..? அநியாயங்களை அடுக்கும் பி.ஆர்.பாண்டியன்!

PTR and Pandiyan
PTR and Pandiyan

திமுக அமைச்சர்கள் குருநில மன்னர்களாக கோலோச்சுகிறார்கள், தன்னிச்சையாக செயல்பட்டு மக்களுக்கு இடையூறு செய்கிறார்கள். உள்ளுரில் சொந்தக்கட்சியினரையே மதிப்பதில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இந்தக் குற்றச்சாட்டு ஓங்கி ஒலிக்கிறது. இந்நிலையில் திமுக தலைமையையே பதித்துச் செல்வது இல்லை என்கிற குற்றச்சாட்டு அவர் மீது உண்டு.


அவர் தான் ’நான் பெரிய மனுஷன்’ அமைச்சர், வளைகாப்பு அமைச்சர், என்றெல்லாம் தன்னைப்பற்றி சொல்லிக்கொள்ளும் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்.இவர் மீது மாபெரும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அனைத்து விவசாயிகளுக்குமான ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன். ‘’திமுக ஆட்சியின் நிர்வாகமே ஒருங்கிணைப்பில் ஏற்பட்டு இருக்கிற இடைவெளி. திட்டமிடலில் ஏற்பட்டு இருக்கிற இடைவெளி. அமைச்சர்களுக்குள்ளேயே பாராமுகம். பெரிய முரண்பாடு. இப்படிப்பட்ட பெரிய பிரச்னையை திமுக எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பது தெரியவில்லை.

தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனப்பகுதிகளில் மேடான பகுதி இருக்கிறது. ஆறுகள் உற்பத்தியாகும் இடத்தில் நேரடியாக பாசனம் பெற முடியாது. முல்லைப்பெரியாறில் மட்டும் ஒரு பகுதிக்கு பாசனம் இருக்கிறது.அந்த மேட்டுப்பகுதிகளில் விலையுயர்ந்த திராட்சை, வாழை என பழவகைகள் விவசாயம் நடக்கின்றன. ஏற்றுமதி செய்கிற அளவுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்கிறார்கள். அதற்கு தண்ணீர் கொண்டு செல்ல தமிழக அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்ல தமிழக அரசு 2015ல் அரசாணை வெளியிட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட பல ஆண்டுகளாக அப்படி மேட்டுப்பகுதிகளில் விவசாயம் செய்ய தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அந்த பாசனப்பகுதியில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பூர்வீக சொத்துக்கள் இருக்கிறது. 

ஒன்றரை ஆண்டுக்கு முன் பொறுப்புக்கு வந்த உடனேயே திடீரென, ‘நீங்களெல்லாம் கோடீஸ்வரனாக இருக்கிறீங்க. இப்படியெல்லாம் எப்படி தண்ணீர் கொண்டு செல்ல முடியும்? எனக்கேட்டு தகராறு செய்து அங்கு செல்லும் மின் இணைப்புகளை பழனிவேல் தியாகராஜன் ஆணையின்படி துண்டித்து விட்டார்கள். நான் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு ’இங்கு மின் இணைப்பு கொடுத்தது முன்னாள் முதலமைச்சர் மறைந்த தலைவர் கருணாநிதி.

அவர் கொடுத்து விவசாயம் நடக்கிற மின் இணைப்பை நிதியமைச்சர் பறிக்கலாம்’ எனக் கேள்வி எழுப்பி, போராட்டம் நடத்திய பிறகு தடுத்து நிறுத்தப்பட்டு மின் இணைப்பு கொடுத்து ஓடிக் கொண்டு இருந்தது. பிறகு இப்போது ஒருமாதத்துக்கு முன்னாடி, நீங்கள் நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி வாங்காமல் எப்படி குழாயைப் பதிக்கலாம் எனக் கேட்டு மாவட்ட ஆட்சியரை அழைத்துக்கொண்டு 40 இடங்களில் விலையுயர்ந்த குழாய்களை உடைத்து எடுத்துவிட்டார் பழனிவேல் தியாகராஜன்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், காவல்துறை, மாவட்ட ஆட்சியரை வைத்து அத்துமீறி செயல்பட்டதால் அந்தப்பயிர்கள் எல்லாம் கருகிப்போய் விட்டது.அந்த விவசாயிகள் எல்லாம் கதறுகிறார்கள்.இதில் விஷயம் என்னவென்றால் அந்த மாவட்டத்துக்கு பொறுபேற்று இருக்கிற அமைச்சருக்கு இந்த விஷயம் தெரியாது. நீர்ப்பாசனத்துறைக்கு பொறுப்பேற்று இருக்கிற முதுபெரும் அமைச்சர் துரைமுருகனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்களிடம் இதுபோல் உடைக்கப்போகிறோம் என்கிற தகவல் சொல்லவில்லை. அந்தப் பாசனப் பகுதியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவை சேர்ந்தவர்கள்தான். அவர்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர்கள் கோரிக்கையை ஏற்கவும், அவர்களை சந்திக்கவும் மறுக்கிறார். குழாய்களை உடைத்து எடுத்த பகுதிகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்காக கடந்த 4ம் தேதி நிதியமைச்சர் தலைமையில் தலைமை செயலகத்தில் ஒரு கூட்டம் நடக்கிறது.

அந்தக் கூட்டத்துக்கு ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ மகாராஜன், கம்பம் தொகுதி எம்.எல்.ஏ., கம்பம் ராமகிருஷ்ணன் இருவரையும் நிதியமைச்சர் இந்தப்பாசன வசதிகுறித்து பேச அழைக்கிறார் எனக்கூறி கட்டாயப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்கள். இங்கு விவசாயிகளை அழைத்து வந்து கூட்டத்தை நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் கலந்து கொள்ளவில்லை, நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் அதில் கலந்து கொள்ளவில்லை.

நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் அதில் கலந்துகொள்ளவில்லை. விவசாயிகளை மட்டும் தன்னிச்சையாக விளக்கம் கேட்க கூட்டி வந்திருக்கிறார். கூட்டி வந்த 2 திமுக எம்.எல்.ஏ.,க்களையும் உள்ளே அனுமதிக்க மாட்டேன். வெளியே போங்கள் என விரட்டி இருக்கிறார். அராஜாகமாக மக்களாட்சியின் மாண்பையே சீர்குழைத்து இருக்கிறார்.

இதுகுறித்து அவருக்கு வேண்டிய விவசாயிகளை வைத்து நிரந்தரமாக அங்கே தண்ணீர் செல்வதை நிறுத்த முதலமைச்சருக்கு தவறான கோப்பை அனுப்பி இருக்கிறார் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இது தமிழக முதலமைச்சர் தலைமையில் இருக்கிற ஆட்சியா? இல்லை ஒவ்வொரு அமைச்சரின் தனிப்பட்ட முறையிலான செல்வாக்கை காட்டி, நட்புகளை வைத்துக்கொண்டு அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றி வைக்கலாமா? இப்படி விவசாயிகளுக்கு விரோதமான கார்ப்பரேட் கொள்ளை இங்கே நடக்கிறது’’ எனக் கொந்தளித்து இருக்கிறார் பி.ஆர்.பாண்டியன். bx