Tamilnadu

போகிற போக்கில் அடித்து விட்ட திருமாவளவன் .. இனி வாயே திறக்க முடியாத அளவிற்கு பதிலடி கொடுத்த பிரபல ஆய்வாளர் !

thiruvalluvar and thirumavalavan
thiruvalluvar and thirumavalavan

கிறிஸ்தவ அமைப்பு நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் திருவள்ளுவர் கிறிஸ்தவரா என்பதை ஆய்வு செய்யவேண்டும் என தெரிவித்த சம்பவம்  இந்து அமைப்புகளை தாண்டி விடுதலை சிறுத்தை கட்சியில்  இருக்கும் இந்துக்கள் மத்தியிலும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது . இந்த சூழலில் பிரபல ஆய்வாளர் இந்துவின் திருவள்ளுவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வண்ணம் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார் .


அவர் குறிப்பிட்ட ஆதாரங்கள் இனி திருமாவளவன் உட்பட யாரும் திருவள்ளுவர் என்ன மதம் என சர்ச்சையை கிளப்ப வாயே திறக்கமுடியாத அளவிற்கு அமைந்துள்ளது இது குறித்து இந்துவின் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :  திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர்தான். திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவராகத்தான் திருக்குறள் எழுதினார் என்ற ஆய்வு நூலை எழுதிய தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது என திருமாவளவன் கூறி இருக்கிறார் .

திருவள்ளுவரை மையமாகக்கொண்டு கடந்த நூறாண்டுகளாகவே விவாதங்களுக்கும் விமர்ச்சனங்களுக்கும் ஒரு குறைவும் இல்லை. இன்று  நமக்கு கிடைக்கும் சான்றுகளின் அடிப்படையில், தேவார நால்வரில் ஒருவரான அப்பர் பெருமான் திருக்குறளை ஏந்திப் பாடுவதின்மூலம் அவர் ஒரு ஆத்திகர் என்பதிலும் சைவராக இருக்கக்கூடும் என்ற புரிதலுக்கும் வரலாம். இன்னும் ஒருபடி மேலாக நீறில்லா நெற்றி பாழ்" என்றும் "சிவாயநம" என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என்றும் உரைக்கின்ற நல்வழி என்ற நீதிநூலின் கடைசிப் பாடலாக முத்தமிழ் மூதாட்டியான ஔவையார்  திருவள்ளுவரையும் திருக்குறளையும் பற்றி குறிப்பிடும்போது,

"தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும்ஒருவா சகம் என்று உணர்"- ஔவையார். அதாவது முத்தமிழை விநாயகரிடம் கேட்ட முத்தமிழ் மூதாட்டியான  ஔவையாரே திருவள்ளுவர் ஒரு சைவ சித்தாந்தவாதி என்று கூறியதால் உலகைப்படைத்த இறைவன் உண்டு என்று கூறிய திருவள்ளுவர் ஆத்திகாரகவே இருந்திருக்க வேண்டும். சங்ககாலத்தில் மிகவும் புகழ்பெற்ற புலவர்களில் ஒருவரான பாரதம் பாடிய பெருந்தேவனார் தெய்வப்புலவர் திருவள்ளுவரையும் திருக்குறளையும் பற்றி கூறியதாவது,

"எப்பொருளும் யாரும் இயல்பின் அறிவுறச் செப்பிய வள்ளுவர்தாம் செப்பவரும் - முப்பாற்குப் பாரதஞ் சீராம கதைமனுப் பண்டைமறை நேர்வனமற் றில்லை நிகர்"  -திருவள்ளுவமாலை.பொருள் : எந்த பொருளானாலும் யாரும் இயல்பாக அறிந்து தெளியும்படி திருவள்ளுவர் சொல்லால் வரைந்த திருக்குறளுக்கு உவமானமாக பழமையான வேதங்கள், மனுஸ்மிருதி, மகாபாரதம், இராமாயணம் ஆகியவை ஆகும் என்பார்.  அடுத்ததாக 16 ஆம் நூற்றாண்டில் திருமயிலையில் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோவிலின் ஸ்தலபுராணத்தில் திருவள்ளுவருக்கான அடையாளம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இன்றிலிருந்து 400 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் ஸ்தலபுராணத்தில்,

"திருமுடி மிசையார் மயிர்முடி யழகுத்  தீர்க்கபுண் டரநுத லழகும் திரண்மயி புயந்தை வருஞ்செவி யழகுந் திகழ்நெடுந் தாடியி னழகும் , அருமுடி செபமா லிகைசின்முத் திரைசே ரபயநேர் வலக்கையி னழகும் அமிழ்துறழ் தமிழ்மா மறைமுறை வரத மமைதரு மிடக்கையி னழகும் கருமுடி யோகப் பட்டையி னழகும் கடிகொள்கீட் கோவண வழகும் கழல்களிற் றிகிரி வளைவரை யழகுங் கமலநல் லாதனத் தழகும் தருமுடிய முகிறோய் மயிலையி னிடைமா தவர்கள்கண் டிறைஞ்சவீற் றிருக்கும் தழைபுகழ்த் திருவள் ளுவரெனு நாம சற்குரு சரணமே சரணம்"

பொருள்: நாயனார் தலைமயிரை எடுத்துக்கட்டி நெடு முடியாக முடிந்துள்ளார். அழகிய நெற்றியில் திருநீறு விளங்குகிறது. மணியணிந்த நீண்ட செவிகள் தோளில் தவழ்கின்றன. முகத்தில் நீண்ட தாடி விளங்குகிறது. வலது கையில் சின்முத்திரையுடன் ஜெபமாலை விளங்குகிறது. அது உயிருக்கு அபயமளிப்பதாகும். உயிர்களுக்கு வரங்களைத் தந்து வாழ்விக்கும் இடது கரத்தில் அமுதம் நிறைந்த முப்பாலாய் விளங்கும் தமிழ் மறையாம் திருக்குறள் சுவடிகள் விளங்குகின்றன. 

யோகப்பட்டையை அணிந்து, நீண்ட உடை தரித்து பத்மாசனத்தில் அமர்ந்துள்ளார். திருவடிகளில் அறிஞர்கள் அணியும் ஞானத் தண்டையை (கழல்) அணிந்துள்ளார். மணி மாடங்களின் முடியில் மேகங்களை உரசிச் செல்லும் வளப்பம் பொருந்திய மயிலாபுரியில், மாதவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து போற்ற வீற்றிருக்கும் மிகுந்த புகழை உடைய திருவள்ளுவர் என்னும் பெயர் படைத்த மேலான உயர்ந்த குருபிரானின் திருவடிகளைச் சரணம் சரணம் என்று பணிகின்றேன்'' என்பதாகும்.

இவ்வாறாக ஜடாமுடி, திருநீறு, சின்முத்திரை, ஜபமாலை ஆகிய ஹிந்து சமய அடையாளங்களோடு 16 ஆம் நூற்றாண்டில் இருந்த திருவள்ளுவர் ஆத்திகர்கவே இருந்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துகள் இருந்திருக்க முடியாது. திருவள்ளுவர்  அருளிய திருக்குறளானது  மதுரை ஸ்ரீ சொக்கநாதர் கோயிலிலேயே அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது ஐதீகம். இக்கோயிலில் தமிழ் புலவர்களில் முதன்மையானவராக சிவபெருமானே உள்ளார். இவருக்கு #இறையனார் என பெயர் கொண்டு இலக்கியங்களில் அழைக்கப்படுகின்றார். சங்கப்புலவர்களுக்கென்று தனி சன்னிதியே இக்கோவிலில் உள்ளது. அதில் சிவபெருமானோடு அனைத்து தமிழ் புலவர்களும் உள்ளார்கள். 

அதோடு திருவள்ளுவ நாயனாரும் உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுக்கு இவ்வாலய சிவாச்சாரியார்கள் நித்ய பூஜை  செய்துவருகிறார்கள் திருக்குறள் மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் பொற்றாமரைக் குளத்தில் "சங்கப் பலகை"யில் வைத்து அரங்கேற்றம் செய்யப்பட்டதை, போற்றும் விதமாக  1330 திருக்குறளையும் சலவைக் கல்லில் செதுக்கி கோவிலின் பொற்றாமரை குளத்தின் தென்பக்க சுவரில் பதித்துள்ளனர். இவ்வாறு சங்க இலக்கிய புலவர்களையும், திருக்குறளையும் போற்றும் ஆலயமாக மதுரை திருத்தலம் விளங்குகின்றது...!

18 ஆம் நூற்றாண்டில் சிவஞான முனிவரால் சோமேசர் முதுமொழி வெண்பா எனும் நூல் எழுதப்பட்டது. இந்நூலானது சென்னை பெரம்பூர் அருகே உள்ள குளத்தூர் எனும் ஊரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ சோமேஸ்வரரை முன்னிலைப்படுத்தி 18 நூற்றாண்டில் அதாவது இன்றைக்கு சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் பாடிய நூலே இது. இந்நூலில் சிறப்பு என்னவென்றால் திருக்குறளை மையமாக வைத்து பாடப்பட்டதாகும். பல நூறு ஆண்டுகள் சைவசமயம் திருக்குறளை போற்றிவந்தது என்பதற்க்கு இந்நூல் ஒரு சான்று. 

ஒரு நூலின் ஒரு பகுதியை செய்யுளில் அமைத்துப் பாடுதலுக்கு வடமொழியில் வேதபாதஸ்தவம் என கூறுவார்கள். திருக்குறள் 133 அதிகாரங்களிலும், அதிகாரம் ஒன்றிற்க்கு ஒரு குறள் என எடுத்துக்கொண்டு, அக்குறளை பின் இரண்டு அடியாகவும், அக்குறளுக்கு பொருத்தமான புராண வரலாறுகளை முதல் இரண்டு அடியில் வைத்து பாடிய நூலே சோமேசர் முதுமொழிவெண்பா. இதேப்போல்தான் ஔவையாரும் திருக்குறள் எழுதியுள்ளார் எனும்போது திருவள்ளுவரின் உருவம் எத்தகையதாக இருந்திருக்க வேண்டும் என்பதை நாம் உற்றுநோக்க வேண்டும்...!

மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் 14ம் நூற்றாண்டில் கிடைத்த சிலையிலும் சின் முத்திரையுடனும் பூநூலுடனுமே காணப்படுகிறார். ஆவணங்களின் அடிப்படையில் 1796 ஆம் ஆண்டு எல்லீஸ் முதன் முதலில் திருக்குறளை அச்சேற்றம் செய்வதற்கு முன்பே கின்டர்ஸ்லே என்பவரால் 1794 ஆம் ஆண்டு எழுதப்பட்ட Specimens of Hindoo literature  எனும் நூலில் திருக்குறள்  பற்றி குறிப்பிட்டுள்ளார். 

மிக முக்கியமாக இந்துக்களின் வழிபாட்டு முறைகளை மையப்படுத்தி எழுதப்பட்ட இந்த நூலில் திருக்குறளை இந்துக்களின் நூல்களின் பட்டியலில் தான் அட்டவணைப்படுத்தியுள்ளார். அதாவது 1794 க்கு முன்பு திருக்குறளும், திருவள்ளுவரும் எந்நிலையில் மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாரோ அதை நிலையில்தான் வெள்ளைக்காரனும் திருவள்ளுவருக்கு  உருவம் அளித்துள்ளான்...!

ஆனால் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியில்  பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்பவர் வெளியிட்ட நாணயத்தை அடிப்படையாக கொண்டு திருவள்ளுவர் ஒரு சமணர் என்று கூறுவது ஏற்புடையது அன்று. ஏனெனில் அந்நாணயத்தில் திருவள்ளுவருக்கான எந்த அம்சமும் இல்லை. அதோடு அவரின் பெயரும் இல்லை. இது மட்டுமல்லாமல் இந்த நாணயத்தை எல்லீஸ்தான் வெளியிட்டார் என்பதற்கே நம்மிடம் சான்றுகள் இல்லை...!

ஆனால் கலைஞர் ஆட்சியில் வேணுகோபால் சர்மா அவர்களால் திருவள்ளுவருக்கு உருவம் வரைந்த போது சில அறிஞர்கள் வள்ளுவர் அந்தண குடியை சேர்ந்தவர் எனவும், பூநூல் வரைய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுப்பியபோதும், மேல் துண்டு வரைந்து அக்கோரிக்கைகள் மறைக்கப்பட்டது என அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் 2011 ஆம் ஆண்டு நடந்த திருவள்ளுவர் நாள் விழாவில் உரையாற்றினார். 

ஆக வரலாற்றின் அடிப்படையில் திருவள்ளுவர் பூநூல் அணிந்து திருநீறு பூசி உச்சிக்குடுமியுடன் ஒரு இந்து ஆன்மீகவாதியாகவே இருந்திருக்கிறார் என்பதும் இது திட்டமிட்டு திராவிட ஆட்சியில்தான் மாற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிறது...!திருவள்ளுவருக்கான அடையாளங்களுள் மிகவும் முக்கியமான நூல் திருவள்ளுவமாலை. இந்நூலிலிருந்து ஒருசில பாடல்களை மட்டும் பார்க்கலாம்.

"செய்யா மொழிக்கும் திருவள் ளுவர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள்ஒன்றே – செய்யா அதற்குரிய ரந்தணரே யாராயி னேனை இதற்குரிய ரல்லாதா ரில்"- வெள்ளி வீதியார். அதாவது எவர் ஒருவராலும் செய்யப்படாததால் வேதம் ‘செய்யா மொழி’ எனப்படுகிறது. செய்யா மொழியும் பொய்யா மொழியும் (திருக்குறளும்) ஒன்று. இரண்டும் ஒரே பொருளைப் பற்றி பேசுகின்றன. இவற்றுக்கிடையே ஒரே ஒரு வேறுபாடு தான் இருக்கிறது. 

செய்யா மொழியை அந்தணர் மட்டுமே ஓத முடியும். பொய்யா மொழியை ஓத குறிப்பிட்ட சிலரால்தான் முடியும் என்பது இல்லை. யார் வேண்டுமாலும் ஓதலாம்.....!“நான் மறையின் மெய்ப் பொருளை முப்பொருளா நான்முகத்தோன் தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த”- உக்கிரப் பெருவழுதியார்.

இதற்கு விளக்கம் எல்லாம் எழுத அவசியம் இருக்காது என்று எண்ணுகிறேன். இந்த பதிவை ஏன் எழுதுகிறேன் எனில் சமீபமாக திருவள்ளுவரை சமணர் ஆக்க முயற்சிக்கிறார்களோ இல்லையோ கிறிஸ்தவராகவும், இஸ்லாமியராகவும் மாற்றிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 

ஆனால் அவர்கள் ஒன்றை அறிவதில்லை. திருவள்ளுவரை நம் முன்னோர்கள் இம்மண்ணின் வாழ்க்கை முறைகளுடனேயே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்துவரே அன்றி இம்மண்ணிற்கு சம்பந்தம் இல்லாத ஒரு பண்பாட்டோடு தொடர்பு படுத்த விரும்பமாட்டார்கள் என்பதோடு வரலாற்றின் அடிப்படையில் அப்படியொரு பார்வையில் யாதொரு சான்றுகளும் நம்மிடம் இல்லை என்பதை பதிவு செய்ய விரும்பினேன்..என ஆதாரங்களுடன் அடுக்கியுள்ளார் இந்துவின் .

இனி யாரவது திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று சொல்ல வாய் திறக்க  முடியுமா ? இந்த  ஆதாரம் போதுமா வேறு ஏதேனும் வேண்டுமா திருமாவளவனே என இப்போது பலரும் திருமாவளவனை கேள்வி எழுப்பி வருகின்றனர் .