கர்நாடக மாநிலத்தில் பட்டிய சமூகத்தினரும் , ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப் படுவதாக புகார் எழுந்தது. கட்டாய மதமாற்ற புகாரில் கிறிஸ்தவ பாதிரியார்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு கர்நாடக அரசு உத்தவிட்டது. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர முடி வெடுக்கப்பட்டது. இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவை சேர்ந்த பேராயர்கள், மதத் தலைவர்கள் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து இந்த சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தனர். காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய குடியரசு கட்சி ஆகிய எதிர்க்கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, ''கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தால் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியிலே தெரிவித்துள்ளோம். அந்த சட்டத்தை விரைவில் கொண்டு வருமாறு பெரும்பாலான மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். கட்டாய மதமாற்ற தடை சட்ட வரைவு மசோதா தயாராக உள்ளது. ஓரிரு நாட்களில் இந்த மசோதாவுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்படும். அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதால் டிசம்பர் 20-ம் தேதி அந்த மசோதாவை சட்டப் பேரவையில் தாக்க செய்ய திட்டமிட்டுள்ளோம்''என்றார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், ''கட்டாய மதமாற்றத் தடை சட்டம் எந்த மதத்துக்கும் எதிரானது அல்ல. இதனால் கிறிஸ்துவர்களோ, முஸ்லிம்களோ அச்சப்பட தேவையில்லை. பெரும்பான்மை இந்துக்கள் இந்த சட்டத்தை ஆதரிக்கிறார்கள். இந்த சட்டத்தின் கீழ் தவறு செய்பவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள். உ.பி., ம.பி., குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சட்டம் ஏற்கெனவே அமலில் இருக்கிறது. அதன் தொடர்ச்சியாகவே கர்நாட காவில் இந்த சட்டத்தை கொண்டு வருகிறோம். இந்த சட்டத்துக்கு பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் இரு அவைகளிலும் நிறைவேறும்'' என்றார். இந்த சட்டத்தின் மூலம் ஒருவரை மூளை சலவை செய்தோ அல்லது விருப்பம் இல்லாமல் ஆசை வார்த்தை காட்டி மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது.