பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கேநாகராஜன் ஜெய்பீம் திரைப்படம் குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் மேலும் சூர்யாவின் சமீபத்திய செயல்பாடுகள் நமது பண்பாட்டிற்கு உகந்தது இல்லை எனவும் நாகராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :- ஜெய்பீம் படம் பார்த்தேன். காவல்துறையால் பாதிக்கப்பட்ட ஒரு பழங்குடி குடும்பத்தின் துயரத்தை, துன்பத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
1995- ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஓர் உண்மைச்சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில், அந்த காலகட்டத்தில் சாலையில் ஓடிய வாகனப்பதிவு எண் முதல் சாலையோர சுவர்களில் ஒட்டிய பாட்ஷா திரைப்பட போஸ்டர் என , விசாரணை அதிகாரி விசாரணை துவக்க காலம்,முடியும் காலம் என நாள்காட்டும் நாள்காட்டியின் மூலமாக காட்டியது மிகச்சிறப்பான திட்டமிடல்.
ஆனால் அனைத்தையும் மிகச்சிறப்பாக திட்டமிட்டு,கொலையுண்ட ராசாக்கண்ணு முதல் விசாரணை அதிகாரி வரை உண்மை நிகழ்வின் நிஜப்பெயரை கதாப்பாத்திரத்திற்கு சூட்டிவிட்டு,ஒரு குறிப்பிட்ட முக்கிய காவல்துறை அதிகாரி சிறுபான்மையினர் என்பதால் அந்த கதாப்பாத்திரத்திற்கு மட்டும் உண்மைக்கு மாற்றாக பெயர்மாற்றம் செய்யப்பட்டது ஏன்?
சூர்யா அவர்களே மருத்துவர் திரு.அன்புமணி ஆதங்கத்தில் உண்மை இருக்கிறது.அதிகாரம் பெற்ற அமைப்பு எதுவாக இருந்தாலும் அதில் சிலரின் அடக்குமுறையும்,அதிகார துஷ்ப்பிரோயகங்களும் காலம் காலமாக நடந்துவருவது உண்மைதான்.
20 ஆண்டுகளுக்கு முன் கோவையில் ஒரு தன்னார்வப்பணியில் நாள் முழுவதும் உங்களுடன் பயணம் செய்து உங்களின் நுண்ணறிவையும்,
திட்டமிடலையும் நன்கு அறிவேன். சமீப ஆண்டுகளில் உங்கள் குடும்பத்தினர் சிலர் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வழிபாட்டையும் சித்தரிக்கும் விதம், வெளிப்படுத்தும் விதம் பெரும்பான்மை மக்களுக்கு ஏற்புடையதாக இல்லை என்பது உண்மை. ஜெய்பீம் திரைப்படத்தில் எதிர்மறையாக சித்தரி க்கப்பட்ட காவல்துறை அதிகாரியின் பின்புறத்தில் உள்ள நாள்காட்டியில் இடம்பெற்றுள்ள படமும்,வழக்காடு மன்றத்தில் ஒரு கதாபாத்திரம் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு சமயம் சார்ந்த சொல்லும், அவர்களை எதிர்மறை சக்தியாக காட்ட திட்டமிட்டே புகுத்தப்பட்டுள்ளது.
ஆனால் மருத்துவர் அன்புமணியின் கேள்விக்கு உங்கள் பதில் ஏற்புடையது அல்ல. உங்களது செயல்பாடு நமது பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. திருத்துங்கள் சூர்யா,இல்லையெனில் காலம் உங்களை திருத்தும். என குறிப்பிட்டுள்ளார் ஜி.கே.நாகராஜன்.
ஜி கே நாகராஜன் சூர்யாவின் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.