குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும் என்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசியதும் அதற்கு மேடையில் இருந்த சமுத்திரகனி ரியாக்ட் செய்ததும் பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த படம் ‘வினோதய சித்தம்’. கடந்த 2021-ஆம் ஆண்டு நேரடியாக ஓடிடியில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தை ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார் சமுத்திரக்கனி.
தமிழில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாண், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். தெலுங்கு ரசிகர்களுக்காக பல்வேறு மாற்றங்களுடன் தயாராகியுள்ள இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பவன் கல்யாண் பேசியது: “தமிழ் சினிமா கலைஞர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். ஒரு பணியை நம் மக்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது. தெலுங்கு சினிமா இன்று செழிப்பாக இருக்கிறது என்றால், இங்கு இருக்கும் மக்கள் எல்லா மொழி பேசும் மக்களையும் ஏற்றுக் கொண்டதுதான் காரணம். எல்லா மொழி மக்களும் ஒன்றிணையும்போதுதான், அது சினிமாவாக மாறுகிறது. நம் மக்களுக்கு மட்டும்தான் வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க கூடாது. அது நம்மை குறுகிய வட்டத்துக்கு அடைத்து விடும்.
சமுத்திரக்கனி தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும் தெலுங்குப் படங்களை இயக்குகிறார். ஏ.எம்.ரத்னம் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றாலும் ஏராளமான தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார். ‘ப்ரோ’ படத்தில் கூட பல மொழிபேசும் கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். தமிழ் படங்களில் தமிழ் கலைஞர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்ற ஒரு புதி விதியை பற்றி நான் கேள்விப்பட்டேன். இதுபோன்ற குறுகிய மனப்பான்மையிலிருந்து தமிழ் சினிமா வெளியே வரவேண்டும். அப்போதுதான் ‘ஆர்ஆர்ஆர்’ போன்ற உலகளாவிய படங்களை தமிழ் சினிமாவால் தர இயலும்” என்று பவன் கல்யாண் பேசினார்.
தமிழ்ப் படத்தில் தமிழ் நடிகர்கள், தமிழ் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) சமீபத்தில் ஒரு புதிய விதியை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.